Published:Updated:

`யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை’ - ஹைதராபாத் மருத்துவர் விவகாரத்தில் 3 காவலர்கள் சஸ்பெண்டு!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண் மருத்துவர்
பெண் மருத்துவர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அந்த நால்வருக்கும் கடுமையான தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் தெலங்கானாவில் வலுத்து வருகிறது. அந்தப் பெண் மருத்துவருக்கு என்ன நேர்ந்ததோ அதேபோன்று கைது செய்யப்பட்டவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும், என நேற்று ஷாத்நகர் காவல்நிலையம் முன்பு ஏராளமானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது?

இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவர் இறந்த பிறகு அவர்கள் குடும்பத்தினர் கூறும் ஒரே கருத்து, `காவலர்கள் எங்கள் புகாரை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படி ஏற்றிருந்தால் எங்கள் பெண்ணைக் காப்பாற்றியிருக்கலாம்’ என்பதுதான்.

மருத்துவர்
மருத்துவர்

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவரின் தங்கை, ``நாங்கள் முதலில் டோல்கேட் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், எங்கள் வீடு ஷம்ஷாபாத்தில் இருப்பதால் அந்தப் பகுதி காவல்நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். மீண்டும் நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு ஷம்ஷாபாத் சென்றோம். அங்கு என் அக்கா தொடர்பாகப் பல கேள்விகளைக் கேட்டபின்னரே புகாரைப் பெற்றுக்கொண்டனர். முதலில் நாங்கள் புகார் அளிக்கும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அக்காவை உயிருடன் மீட்டிருக்கலாம்” எனக் கூறியிருந்தார்.

`எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள் #JusticeForPriyanka

மருத்துவரின் மொத்தக் குடும்பமும் இதே குற்றச்சாட்டை முன்வைத்ததால் இந்தப் பிரச்னை பெரிதாகி, பொதுமக்களும் காவலர்களின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மருத்துவரின் பெற்றோர் புகார் அளித்தும் அதன் மீது விரைந்து செயல்படாத ஷம்ஷாபாத் காவல்நிலைய சப் - இன்ஸ்பெக்டர் ரவி குமார், ஏர்போர்ட் (டோல்கேட்) காவல்நிலைய கான்ஸ்டபிள்கள் வேணுகோபால் மற்றும் சத்யநாராயணா ஆகிய மூவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா போலீஸார்
தெலங்கானா போலீஸார்

இதுதொடர்பாக இந்தியா டுடே ஊடகத்திடம் பேசியுள்ள சைபராபாத் கமிஷனர், ``பெண் மருத்துவர் விவகாரத்தில் நடந்த விசாரணையில், பெற்றோர் புகார் அளித்தும் விரைந்து செயல்படாத 3 காவலர்கள் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளனர். மேலதிகாரியின் உத்தரவு வரும்வரை அவர்களது சஸ்பெண்டு தொடரும். இனி திருட்டு, கடத்தல், கொலை, தாக்குதல், பாலியல் வன்முறை போன்ற புகார்கள் வந்தால், உயரதிகாரியின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சைபராபாத் பகுதியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.