மது கிடைக்காததால் மாற்றுப்போதை! -போதைக்காகச் சீரழிந்த 3 இளைஞர்களின் வாழ்க்கை

மது கிடைக்கவில்லை என்ற விரக்தியில், மாற்றுப் போதையைத் தேர்ந்தெடுத்த 3 பேரில் 2 பேர் ஏற்கெனவே இறந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா, அசன்மைதீன். ராமநாதபுரம் அருகே பேக்கரும்பைச் சேர்ந்தவர் அருண்பாண்டி. மீனவர்களான இவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் அடிக்கடி இரவு நேரத்தில் ஒன்றாகச் சந்தித்து மது குடிப்பது வழக்கம். இந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது.
இதனால், மூவரும் மது கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, வெளிநாட்டில் இருந்து வந்த நண்பன் ஒருவர், சேவிங்க் லோஷனை, குளிர்பானம் கலந்துகுடியுங்கள் போதை ஏறும் என்று கூறிவிட்டுச் செல்ல, இவற்றை வாங்கிக் குடித்துள்ளனர். பின்னர் மூவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

செல்லும் வழியில் அருண்பாண்டி மற்றும் அசன்மைதீன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில்தான் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அன்வர் ராஜாவும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மாற்றுப்போதைக்கு ஆசைப்பட்டு 3 இளைஞர்களின் வாழ்க்கை பறிபோயுள்ளது.
இதுபற்றி மாவட்ட கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கூறும்போது, ``கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் அதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனையளிக்கிறது. அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மட்டும் அனுமதி கொடுத்திருக்கிறோம். பொருளை வாங்கி தவறாக பயன்படுத்துவதற்காக இல்லை. தவறாக யாரும் பயன்படுத்துவது அல்லது விற்பது தெரிந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.