Published:Updated:

புதுக்கோட்டை: மூதாட்டிகளைக் கட்டிவைத்து நகை, பணம் திருட்டு! - கூண்டோடு சிக்கிய 3 பெண்கள்

சிக்கிய பெண்கள்
சிக்கிய பெண்கள்

மூதாட்டிகள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மூன்று பெண்கள், மூதாட்டிகளைத் தூணில் கட்டிப்போட்டு, வாயைத் துணியால் அடைத்து கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகை, மற்றும் ரொக்கப்பணத்தைத் திருடியிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விராச்சிலையைச் சேர்ந்தவர் அம்பாள்(90). இவருடைய மகள் உமையாள் (70). தாய், மகளான இருவரும் விராச்சிலை பழைய ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள தங்களது வீட்டில் தனியாக வசித்துவந்தார்கள். இந்தநிலையில், முதியவர்களான இருவரும் ஆண் துணையின்றி தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு வீட்டின் உள்ளே புகுந்த மூன்று பெண்கள், மூதாட்டிகளை அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டு, கூச்சலிடாதபடி வாய்களைத் துணையைவைத்து அடைத்திருக்கிறார்கள்.

பனையப்பட்டி காவல் நிலையம்
பனையப்பட்டி காவல் நிலையம்

தொடர்ந்து அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகைகளையும், பீரோவில் வைத்திருந்த ரூ.12,000 ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சுருட்டினார்கள். பொருள்களை எடுத்துக்கொண்டு மூதாட்டிகளின் வாய்களில் அடைத்துவைத்திருந்த துணியை எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிட்டது. வாய்க் கட்டை அவிழ்த்தவுடன் மூதாட்டிகள் இருவரும் கூச்சலிட, அருகே துக்க நிகழ்வுக்கு வந்திருந்த சிலர் மூதாட்டிகளின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்திருக்கிறார்கள்.

அப்போது, நகைகளுடன் அவசர அவசரமாகத் தப்பித்து ஆட்டோவில் செல்ல முயன்ற மூன்று பேரையும் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து பனையப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட மூன்று பெண்களிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல நாள்கள் நோட்டமிட்டு இந்தத் திருட்டில் அந்தப் பெண்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது

பிடிபட்ட பெண்கள்
பிடிபட்ட பெண்கள்

விசாரணையில், அவர்கள் மூவரும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா, சிவகங்கை மாவட்டம் ஆவணிபட்டியைச் சேர்ந்த தெய்வானை, கீழச்செவல் பட்டியைச் சேர்ந்த கருப்பாயி என்பதும், மூதாட்டிகளின் வீட்டை நோட்டமிட்டுத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. திருடிய நகை மற்றும் ரொக்கப்பணத்தை மீட்டு மூதாட்டிகளிடம் கொடுத்தனர் போலீஸார். மேலும், இந்தப் பெண்கள் இது போன்று வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை: முதல் திருட்டு... பயத்தில் மதுஅருந்திய இன்ஜினீயர் - திருடச் சென்ற வீட்டில் உறக்கம்
அடுத்த கட்டுரைக்கு