Published:Updated:

`அய்யய்யோ... வீட்டுக்குள்ள தினேஷ் இருக்கான்!'- தாயின் கண்முன்னால் பலியான 3 வயதுக் குழந்தை

எஸ்.மகேஷ்

ஆவடி பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் 3 வயது மகன் தீயில் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fire
Fire

சென்னையை அடுத்த ஆவடி அருகில் உள்ள கொள்ளுமேடு நவசக்தி நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (32). இவர் திருமுல்லைவாயல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி மஞ்சு. இவர்களுக்கு துரையரசன் (5), தினேஷ் (3) என இரண்டு மகன்கள். துரையரசன், அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார்.

dinesh
dinesh

இந்தநிலையில் பச்சையப்பன், நேற்று காலை வேலைக்குச் சென்றுவிட்டார். பள்ளிக்குச் சென்ற துரையரசனை அழைத்துவர மஞ்சு புறப்பட்டார். அப்போது வீட்டில் தினேஷ் தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு மஞ்சு பள்ளிக்குச் சென்றார். வீட்டில் தனியாக தினேஷ் இருந்தார். இந்தச் சமயத்தில் பச்சையப்பனின் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்தவர்கள், ஓடிவந்தனர். ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

துரையரசனை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வீட்டுக்குவந்த மஞ்சுவிடம், வீடு தீப்பிடித்த தகவலை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அப்போது மஞ்சு, அய்யய்யோ... வீட்டுக்குள் மகன் தினேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கண்ணீர்மல்க தெரிவித்தார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு மஞ்சு, வீட்டை நோக்கி ஓடிவந்தார். வீட்டுக்குள் குழந்தை தினேஷ் இருக்கும் தகவல் தெரிந்ததும் அவரைக் காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் போராடினர். ஆனால் தீ மள மளவென வீட்டுக்குள் பரவியது.

fire
fire

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்து உள்ளே சென்றனர். அப்போது தினேஷ் உடலிலும் தீப்பிடித்து அவர் கரிக்கட்டையாக கிடந்தார். அதைப்பார்த்த மஞ்சு கதறி அழுதார். இதையடுத்து ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தினேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பச்சையப்பன், சில மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு இந்தப்பகுதிக்கு வந்துள்ளார். இந்தப்பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் இல்லை. இதனால்தான் பச்சயப்பனின் வீடு தீப்பிடித்து எரிந்ததும் அதையாரும் கவனிக்கவில்லை.

fire
fire

மேலும், வீடு வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததாலும் தினேஷ் உள்ளே இருக்கும் தகவல் தெரியாததாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வீட்டின் மேல்ப்பகுதியில் மின்வயர் சென்றுள்ளது. அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத்தான் ஓலைக்குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து தினேஷின் சடலத்தை ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.

தீ விபத்துக்கு மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.