Published:Updated:

ராணிப்பேட்டை: கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சிறுமி! -சிசிடிவி கேமராவில் சிக்கிய சித்தி

மீட்புப் பணி
மீட்புப் பணி

ராணிப்பேட்டை அருகே பாழடைந்த கிணற்றிலிருந்து 3 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டையை அடுத்துள்ள செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி, கட்டட மேஸ்திரி. இவரின் மனைவி ராஜேஸ்வரி. இந்தத் தம்பதியருக்கு 13 வயதில் தனுஷ் என்ற மகனும், 3 வயதில் கோபிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா திடீரென மாயமானாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் சிறுமியைத் தேடிப்பார்த்தனர். அவள் கிடைக்காததால், ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சிறுமி மாயமான பகுதியிலிருந்த ஒரு கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். சிறுமி கோபிகா மாயமானதாகக் கூறப்படும் அதே நேரத்தில்... யாரோ ஒரு பெண், சிறுமியைத் தூக்கிக்கொண்டு அந்த வழியாகச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சிறுமி கோபிகா
சிறுமி கோபிகா

ஆனால், அந்தப் பெண் யார்... அவரது கையில் இருந்தது மாயமான சிறுமி தானா என்பது தெளிவாக இல்லை. காட்சிகள் அனைத்துமே தெளிவாகத் தெரியவில்லை. அதேசமயம், மாயமான சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்த மற்ற பிள்ளைகளிடம் விசாரித்தபோது, கோபிகாவை அவளுடைய சித்தி புஷ்பராணி தூக்கிச் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். சிசிடிவி-யில் தெரிந்த பெண்ணின் தோற்றமும், சித்தி புஷ்பராணியின் தோற்றமும் ஏறக்குறைய ஒன்றாகப் பொருந்தியது. இதனால், சந்தேகப் பார்வையை அவர்மீது திருப்பிய போலீஸார், அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அதேசமயம், சிசிடிவி-யில் பதிவாகியிருந்த காட்சிகளைக்கொண்டு அந்த வழித்தடத்திலுள்ள பாழடைந்த கிணற்றுப் பகுதிக்கு போலீஸார் சென்றனர்.

சென்னை: மாடியில் தாய் கொலை -  2 நாள்கள் சகஜமாக வாழ்ந்த நீதிமன்ற ஊழியர்!

அந்தக் கிணறு பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்ததால் முட்புதர் மண்டியிருந்தது. துர்நாற்றமும் வீசியதால், மாயமான சிறுமி கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில், சிப்காட் தீயணைப்புத்துறையினரை வரவழைத்தனர். 80 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் 60 அடிக்குத் தண்ணீர் இருந்தது. இரண்டு மோட்டார்களைக் கொண்டு தண்ணீர் வெளியேற்றும் பணி ஒருப்பக்கம் நடக்க... தீயணைப்பு வீரர்களும் கிணற்றில் இறங்கித் தேடினர். நேற்று இரவு 8 மணியளவில், அந்தக் கிணற்றிலிருந்து சிறுமி கோபிகா சடலமாக மீட்கப்பட்டாள். மீட்புப் பணியைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். இதையடுத்து, சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன ராணிப்பேட்டை எம்.எல்.ஏ
பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன ராணிப்பேட்டை எம்.எல்.ஏ

சித்தி புஷ்பராணிமீதான சந்தேகம் மேலும் வலுத்தது. விசாரணை பிடியையும் போலீஸார் இறுக்கினர். முதற்கட்ட விசாரணையில், அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி கோபிகாவின் சித்தப்பா சேட்டு, 17 ஆண்டுகளுக்கு முன்னர் குவைத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அவருடன் வேலை செய்துவந்த இலங்கையைச் சேர்ந்தவரின் தங்கையான புஷ்பராணியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பின்னர் செட்டித்தாங்கலிலுள்ள அண்ணன் வீட்டுக்கு அருகிலேயே குடிபெயர்ந்தார் சேட்டு. இந்தத் தம்பதியருக்கும் இரண்டுப் பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், அண்ணன், தம்பிக்கு இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான விரோதம் காரணமாகவே, சித்தி புஷ்பராணி சிறுமி கோபிகாவைத் தூக்கிச் சென்று கிணற்றில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது காவல்துறை. இருந்தபோதும், புஷ்பராணி கொலையை ஒப்புக்கொள்ள மறுப்பதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு