Published:Updated:

`சிகரெட்டால் சூடு, மதுவும் கொடுப்பார்!' -தாயின் 2வது கணவரால் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அருணைப் பார்த்தேன். அப்போது அவனின் தலையில் காயம் இருந்தது. அதுகுறித்து டாக்டரிடம் கேட்டபோது தலையில் அடிபட்டிருப்பதாகக் கூறினார்கள்.

மரணம்
மரணம் ( Representational image )

சென்னை சித்தாலப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் கங்கா(26). இவர், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

`` எனது சொந்த ஊர் கர்நாடகா, சஞ்சய் காந்தி நகர். அப்பா அசோக், லாரியில் லோடுமேனாகப் பணியாற்றிவந்தார். அம்மா, நாகம்மாள், ஒரு நிறுவனத்தில் டெய்லராகப் பணியாற்றிவந்தார். அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

representational image
representational image

எனது அண்ணன் கங்குராஜ், திருநங்கையாகிவிட்டார். தங்கை தனலட்சுமி, மதம் மாறிவிட்டார். இருவரும் கேரளாவில் குடியிருந்துவருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சத்யமூர்த்தி என்பவரைக் கடந்த 6 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு வரலட்சுமி (5) என்ற மகளும் அருண் (3) என்ற மகனும் பிறந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சத்யமூர்த்தி விபத்தில் இறந்துவிட்டார்.

பின்னர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். கடந்த 9 மாதங்களுக்குமுன் வெங்கடேசன் என்பவர் என்னைச் சந்தித்தார். அப்போது அவர், தன்னுடைய மனைவி கேன்சரில் இறந்துவிட்டதாகக் கூறினார். மேலும் அவர், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறியதோடு அவர்களைக் கவனிக்க ஆளில்லை என்றார். பின்னர், `உனக்கும் கணவர் இல்லை, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால் நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளலாம்' என்றார்.

`உனக்கும் கணவர் இல்லை, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால் நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளலாம்' என்றார் வெங்கடேசன்.
கங்கா

நானும் சம்மதம் தெரிவித்தேன். இதையடுத்து, கர்நாடகாவிலிருந்து சென்னை வந்தோம். சித்தாலப்பாக்கத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்தோம். வரலட்சுமியை, கேரளாவில் உள்ள தங்கை வீட்டில் 5 மாதங்களுக்கு முன் விட்டுவிட்டு சென்னை வந்திருந்தேன். இந்தநிலையில் என்னுடைய 2-வது கணவர், என்னையும் மகனையும் அடித்து பிரச்னை செய்தார். கடந்த 1-ம் தேதி மகளைப் பார்க்க கேரளாவுக்குச் சென்றேன். அப்போது மகன் அருணை வெங்கடேசனிடம் விட்டுவிட்டுச் சென்றிருந்தேன்.

நான் கேரளாவில் இருக்கும்போது எனக்கு வெங்கடேசன் போன் செய்தார். அப்போது அருண், சாப்பிடும்போது மயங்கி விழுந்துவிட்டதாக போனில் கூறினார். `அருணை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்' என்று பதற்றத்துடன் தெரிவித்தார். மேலும், அவர் `சீக்கிரம் புறப்பட்டு வா' என்றார். இதையடுத்து 3-ம் தேதி சென்னைக்கு வந்தேன். எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அருணைப் பார்த்தேன். அப்போது அவனின் தலையில் காயம் இருந்தது. அதுகுறித்து டாக்டரிடம் கேட்டபோது தலையில் அடிபட்டிருப்பதாகக் கூறினார்கள்.

வெங்கடேசனுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை நரகமானது. என் குழந்தைகளை அவருக்குப் பிடிக்கவில்லை.
கங்கா

4-ம் தேதி மாலை 5 மணிக்கு அருண் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். வெங்கடேசனிடம் அருணுக்கு தலையில் எப்படி காயம் வந்தது என்று விசாரித்தேன். அப்போது அவர், அருண் கீழே விழுந்துவிட்டதாகக் கூறினார். குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் விசாரணை நடத்திவருகிறார். புகார் தொடர்பாக, கங்காவிடம் போலீஸார் விசாரித்தபோது, `` வெங்கடேசனுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு நரகமானது. என் குழந்தைகளை அவருக்குப் பிடிக்கவில்லை. 3 வயதாகும் அருணை அடிக்கடி அடிப்பார். சிகரெட்டால் சூடு வைப்பார். அதைவிட மதுஅருந்தும் போது அதையும் குடிக்கக் கொடுத்துவிடுவார். நான் வீட்டில் இல்லாத சமயத்தில் வெங்கடேசன்தான் அருணை கொலை செய்திருக்க வேண்டும்" என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

இதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை வெங்கடேசன் மீது விழுந்துள்ளது. அதுதொடர்பாக வெங்கடேசனிடம் விசாரித்தபோது அவரும் போதையில் அருணைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.