Published:Updated:

தீர்ப்பின்போதும் அசராத சரிதா நாயர்!- நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

காற்றாலை மோசடி வழக்கில் 3 ஆண்டுச் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்ட, ஒரு மணி நேரத்தில் சரிதா நாயர் ஜாமீன் வாங்கிவிட்டார்.

சரிதா நாயர்
சரிதா நாயர்

கேரளாவில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கோட்டயத்தைச் சேர்ந்த நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை கேரள போலீஸார் கைதுசெய்தனர். இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ஐ.டி.எம்.எஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதனிடைய, கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் தியாகராஜ் என்பவரிடம், காற்றாலை அமைத்துத் தருவதாகச் சொல்லி 28 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளனர். ஆனால், சரிதா நாயர் காற்றாலை அமைத்துத் தராமால் மோசடி செய்ததாக வடவள்ளி போலீஸில் தியாகராஜன் புகாரளித்தார்.

சரிதா நாயர்
சரிதா நாயர்

அதனடிப்படையில் ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் மற்றும் அவர்களது மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீஸார் கைது செய்தனர். அதேபோல, நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த ஜோயோ என்பவரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாகவும் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்குகள் கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய மூன்று பேரும் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், மூன்று பேருக்கும் மூன்றாண்டுச் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராதம் செலுத்தத் தவறினால் ஒன்பது மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சரிதா நாயர்
சரிதா நாயர்

ஆனால், நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு மணி நேரத்திலேயே, சரிதா நாயர் உள்ளிட்ட மூன்று பேரும் ஜாமீன் வாங்கிவிட்டனர். மூன்று பேருக்கும் தலா இரண்டு பேர் ஜாமீன் கையொப்பம் போட்டதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.