Published:Updated:

பைக்கில் லத்தியை வீசிய சப்-இன்ஸ்பெக்டர்... தடுமாறி விழுந்த 3 பேர்... இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

பொள்ளாச்சியில், காவல் உதவி ஆய்வாளர் லத்தியை வீசியதால், இளைஞர் ஒருவரின் கால் முறிந்துவிட்டது.

சம்பந்தம்
சம்பந்தம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார், சம்பந்தம். இவர், கோட்டூர் பகுதிக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கோவை போத்தனூரைச் சேர்ந்த சொனாபர், சுந்தராபுரத்தைச் சேர்ந்த சர்தார், குனியமுத்தூரைச் சேர்ந்த அப்சல் (17) ஆகிய மூவரும் ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். அதனால் சம்பந்தம், இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார்.

கால்முறிவு
கால்முறிவு

ஆனால், இளைஞர்கள் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதையடுத்து, கையில் இருந்த தடியை அவர்கள்மீது வீசியபோது, பைக் சக்கரத்தில் லத்தி சிக்கி நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்து, 3 பேரும் காயம் அடைந்துள்ளனர்.

அதில் ஓர் இளைஞரின் கால் முறிந்து வலியால் துடித்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட உடனேயே அங்கு கூடிய மக்கள், காவல் ஆய்வாளர் சம்பந்தத்துடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

காயமடைந்த இளைஞர்
காயமடைந்த இளைஞர்

படுகாயம் அடைந்த 3 பேரும் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "உதவி ஆய்வாளர் சம்பந்தத்துடன், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸைச் சேர்ந்த ஓர் இளைஞரும் உடனிருந்தார்.

உதவி ஆய்வாளர் சொன்னதைக் கேட்டு, அவர்தான் இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனத்தின்மீது லத்தியை வீசினார். எனவே, அந்த இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்

இந்நிலையில், சம்பந்தத்தை இடைநீக்கம் செய்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.