Published:Updated:

கிருஷ்ணகிரியில்... மீண்டும் ஒரு அரசியல் கொலை?

கிருஷ்ணகிரியில்... மீண்டும் ஒரு அரசியல் கொலை?

##~##

கிருஷ்ணகிரியில் கடந்த ஆண்டு நடந்த, பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பழனி கொலையின் அதிர்வலைகளே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அதே பகுதியில் அடுத்த கொலை. இந்த முறை கொலையானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்.) அமைப்பின் மாவட்டச் செயலாளர் பாஸ்கர். 

ஏற்கெனவே கொலையான பழனியுடன் கொள்கைரீதியாக நெருங்கிய நட்புகொண்டவர் இந்த பாஸ்கர். ஆரம்ப காலத்தில் நக்ஸல் அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். ஓசூர் அருகில் உள்ள பத்தலப்பள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், கடந்த 18-ம் தேதி திடீரென காணாமல்போனார். அவரின் மொபைல் போன் தொடர்புகளை வைத்து, தளியை அடுத்த குருபரப்பள்ளி எதுபூஷண்ரெட்டி என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கர்நாடக மாநிலம் மாலூர் பகுதி காட்டில் பாஸ்கரைக் கொலைசெய்து எரித்ததாகத் தகவல் கிடைக்க... ஐந்து நாட்கள் தேடுதலுக்குப் பின் 24-ம் தேதி சடலத்தைப் போலீஸார் கைப்பற்றினர்.

கிருஷ்ணகிரியில்... மீண்டும் ஒரு அரசியல் கொலை?

தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன்தான் கொலைக்குக் காரணம் என்று

கிருஷ்ணகிரியில்... மீண்டும் ஒரு அரசியல் கொலை?

பாஸ்கரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாஸ்கரின் சடலம் கிடைப்பதற்கு முதல் நாளே கெலமங்கலம் சந்தைத்திடல் அருகே, 'ரவுடி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் தூண்டுதலால் கொலைசெய்யப்பட்ட பாஸ்கருக்கு செவ்வணக்கம்’ என்று கோஷமிட்டு அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஸ்கரின் மனைவி ராஜம்மாள் தளி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், 'என் கணவர் கொலைக்கு எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன்தான் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் குமார், ''இது திட்டமிட்டே நடத்தப்பட்ட அரசியல் படுகொலை. தோழர் பழனியின் கொலைக்குப் பிறகு ராமச்சந்திரனின் பழைய குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டு போலீஸார் ஏராளமான வழக்குகள் போட்டனர். அந்த வழக்குகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் தெரியப்படுத்தியது பாஸ்கர் தான். இதைப் பொறுக்க முடியாமல்தான் அவரைக் கொன்றுவிட்டனர். பல மாத சிறைவாசத்துக்குப் பிறகு ராமச்சந்திரன் ஜாமினில் வந்த அடுத்த நாளே இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கிறது'' என்றார் கொதிப்பாக.

இதுபற்றி ராமச்சந்திரனிடம் பேச முயன்றபோது முடியவில்லை. எனவே சி.பி.ஐ-யின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் நஞ்சப்பாவிடம் கேட்டோம். ''எட்டு மாதங்கள் சிறையில் இருந்து கடந்த 20-ம் தேதிதான் ராமச்சந்திரன் பெயிலில் வந்திருக்கிறார்.  அவர் மீது இன்னொரு கொலைக்குற்றத்தைச் சுமத்தி அபாண்டமாகப் பழிபோடுகிறார்கள். அவருக்கு வேறு விரோதிகள் இருந்திருக்கலாம்'' என்றார்.

எல்லாம் பதவி படுத்தும் பாடு!

- எஸ்.ராஜாசெல்லம்