Published:Updated:

ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!

நாகை மீனவர்கள் போர்க் கொடி

##~##

லங்கைக் கடற்படையிடம் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற எவ்வளவுதான் போராடியும் ஒரு பலனும் இல்லாத நிலையில், ''ஆயுதம் தாருங்கள்... நாங்களே போராடிக்​கொள்கிறோம்'' என்று வாழ்வா, சாவா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள். 

நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளு​மன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.

கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக்

ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!

கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்​பாட்டம் நடத்தினார்​கள். அடுத்த​தாக 25-ம் தேதி ரயில் மறியல், அதற்கு அடுத்து எல்லா தாலுக்காக்​களிலும் போராட்டம் என்று தங்கள் போராட்​டத்தைத் தீவிரப்படுத்தப்​போகிறார்கள்.

இதுகுறித்து நாகப்பட்டினம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவரும் அக்கறைப் பேட்டை பஞ்சாயத்தாருமான திருவளர்செல்வனிடம் பேசினோம். ''அண்டை நாடு, நட்பு நாடு என்று இந்தியா நட்பு பாராட்டும் இலங்கை அரசுதான் தொடர்ந்து எங்களைத் தாக்குகிறது. இரும்பு பைப்பால் அடி, உருட்டுக்கட்டையால் அடி, வலைகள் கிழிப்பு, மண்டியிடவைப்பது, துப்பாக்கிச் சூடு... இதெல்லாம் போய் இப்போது அரிவாள் வெட்டு

ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!

வரை வந்துவிட்டார்கள். இதைவிடப் பெரிய கொடுமை வேறு ஏதாவது உண்டா? இப்படி ஒரு சம்பவம் நடந்து நான்கு நாள் ஆகிவிட்ட பின்னும் இந்திய அரசாங்கம் இதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டதா? நாங்கள் என்ன இந்த நாட்டின் அகதிகளா? எங்கள் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? இதுவரை எல்லை தாண்டிவந்ததால் சுட்டோம் என்று சொன்னார்கள். இப்போது வெட்டுப்பட்டவர்கள் சாதாரண பைபர் படகில் நமது எல்லைக்குள்தானே தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்? அவர்களை ஏன் வெட்டினார்கள்? இந்தக் கொடுமையை மத்திய அரசு ஏன் கண்டிக்கவில்லை? எங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வரையிலும் இந்தப் போராட்டங்கள் தொடரும்'' என்கிறார்.

தபால்நிலைய ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்​கள், ''இனி எங்க பாதுகாப்பை நாங்கதான் பாத்துக்கணும். அவங்க அஞ்சாறு பேர் ஒரு போட்ல வந்து எங்களைத் தாக்கும்போது நூற்றுக்கணக்கான பேர் ஒன்று சேர்ந்து அவங்களைத் திருப்பித் தாக்க முடியாதா? இனியும் சும்மா இருந்தால், நாங்கள் கடலுக்குள் போகவே முடியாது. அரசாங்கத்துக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதனால் எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இலங்கை ராணுவத்துக்கு எதிராக நாங்களே போர் தொடுத்துக்கொள்கிறோம். எங்களுக்கு ஆயுதம் வழங்குங்கள்.

ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!

குறைந்தபட்சம் துப்பாக்கி வைத்துக்கொள்ளவாவது லைசென்ஸ் வழங்குங்கள்'' என்று முழங்கினார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெற்றது. அதைச் சுட்டிக்காட்டும் மீனவர்கள், 'வரப்போகும் தேர்தலில் காங்கிரஸைக் கருவறுப்போம்’ என்று சபதம் செய்திருக்கிறார்கள்.

''இரண்டு கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டு வீரர்களை நம் நாட்டுக்குக் கொண்டு​வர தூதரைக் கைதுசெய்வது வரை போனதே நம் மத்திய அரசு. அவர்களுக்​குக் கேரள மீனவர்கள் மீது உள்ள அவ்வளவு அக்கறை, ஏன் நம் தமிழக மீனவர்கள் மேல் இல்லை? 540 மீனவர்களுக்கும் மேல் கொன்று குவித்த இலங்கையிடம் தூதரக உறவை முறித்துக்​கொள்ள வேண்டும். எல்லை தாண்டிவந்து எங்களைத் தாக்கும் இலங்கைக் கடற்படையினரை கைதுசெய்து நம் நாட்டுக்குக்கொண்டுவர வேண்டும். அதைச் செய்ய இவர்களுக்கு என்ன தயக்கம்? தங்கள் நாட்டு குடிமக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத இந்திய நாட்டின் இறையாண்மையை யாரிடம் போய் நாங்கள் சொல்வது?'' என்கிறார் அகில இந்திய மீனவர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் கலைமணி.

இனியும் பாரபட்சம் காட்டினால் நாடாளு​மன்றத் தேர்தலில் மீனவர்களிடம் ஒரு ஓட்டும் வாங்க முடியாது.  

- கரு.முத்து