Published:Updated:

மார்ட்டின் எங்கே? வலைவீசும் போலீஸ்!

லீமாரோஸ் கைது...

##~##

.ஜே.கே. கட்சியில் இணைந்த சில நாட்களி​லேயே மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் கைதுசெய்யப்பட்டது பலரது புருவத்தையும் உயரவைத்துள்ளது. சும்மா இருந்திருந்தால், கைதைத் தவிர்த்திருக்கலாம் என்று அவரது ஆர்வலர்கள் சொல்கிறார்கள். 

கருணாநிதியிடம் அதிக நெருக்கம் காட்டிய லாட்டரி அதிபர் மார்ட்டினை, கறுப்புப் பணம் பதுக்கல், போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய வழக்குகளில் போலீஸார் தேடி வருகிறார்கள். பூடான், நேபாளம் என்று அவர் பறந்துகொண்டிருப்​பதாக போலீஸ் தகவல் திரட்டியுள்ளது. இந்த நிலையில்தான் அவரின் மனைவி போலி ஆவண வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

லாட்டரி அதிபரான  மார்ட்டின், கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான 'இளைஞன்’ திரைப்படத்தைத் தயாரித்தவர். தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்குத் தடையிருந்தாலும், வட மாநிலங்களில் லாட்டரி தொழிலில் இப்போதும் கொடி கட்டிப் பறக்கிறார்.

மார்ட்டின் எங்கே? வலைவீசும் போலீஸ்!

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல்வேறு புகார்களில் அவரைக் கைதுசெய்ய தமிழக போலீஸார் தயாராக இருக்கவே, வெளிநாட்டுக்குப் பறந்தார். குடும்பத்தினரைப் பார்க்க கோவை வந்த அவர், 2011 டிசம்பர் 29-ம் தேதி குண்டர் சட்டத்தில் கைதானார். இந்தக் கைது செல்லாது என்று கடந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி தீர்ப்பு வந்தது. மீண்டும் வெளிநாடு சென்ற மார்ட்டின் இன்று வரை திரும்பவில்லை.

இந்த நிலையில்தான் மார்ட்டின் மனைவி லீமாரோஸ், அ.தி.மு.க-வில் சேர்வதற்கான முயற்சிகளை

மார்ட்டின் எங்கே? வலைவீசும் போலீஸ்!

எடுத்தார். ஜெயலலிதா ஓகே சொல்லாததால், ஐ.ஜே.கே. கட்சியில் சமீபத்தில் ஐக்கியமானார். அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அடுத்த சில தினங்களிலேயே போலி ஆவண வழக்கில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கைதுக்குப் பின்னணி என்ன?

லீமாரோஸைக் கைதுசெய்த சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ''சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் வசிக்கும் நாகராஜன், லாட்டரித் தொழிலில் மார்ட்டினின் கூட்டாளி. நாகராஜன் வீட்டின் கீழ்தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைசெய்யும் கடை இருந்தது. 'இந்தக் கடை பெயரளவுக்குத்தான். இவரது வீட்டில் கள்ள லாட்டரிச் சீட்டுகள் இருக்கிறது’ என்று ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த

மார்ட்டின் எங்கே? வலைவீசும் போலீஸ்!

ஆண்டு மார்ச் 12-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஆதம்பாக்கம் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, போலீஸாரே எதிர்பார்க்காத வகையில் கட்டுக்கட்டாக 7.50 கோடி ரூபாய் பணமும் லாட்டரிச் சீட்டுகளும் கிடைத்தன. அந்தப் பணம், அண்ணா நகரில் உள்ள மூர்த்தி என்பவர் இடம் வாங்குவதற்காகத் தந்தது என்று நாகராஜன் கூறியதால், அவர் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். மூர்த்தி தப்பிவிட்டார். அவரது வீட்டில் இருந்த 50 லட்ச ரூபாய் மட்டும் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு மத்தியக் குற்றப் பிரிவுக்கு வந்தது.

நாகராஜன், மூர்த்தி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த மார்ட்டின் மீது இந்த வழக்கும் பாய்ந்தது. இந்த நிலையில், ஜாமின் கேட்டு கோர்ட்டில் நாகராஜன் தாக்கல்செய்த மனுவில், 'அண்ணா நகரில் எனக்குச் சொந்தமான நிலத்தை மார்ட்டின் மனைவி லீமாரோஸுக்கு விற்பனைசெய்ய மூர்த்தி மூலம் முன்பணம் வாங்கி இருந்தேன்’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக ஆவணத்தை கோர்ட்டில் காட்டி ஜாமின் பெற்றனர். லீமா ரோஸுக்கு நிலம் விற்பனைசெய்தது தொடர்பாக கோர்ட்டில் தாக்கல்செய்த பத்திரத்தை கடந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி வாங்கியுள்ளனர். ஆனால், 2-ம் தேதியே ஒப்பந்தம் போடப்பட்டதாக டாக்குமென்ட் தயார்செய்துள்ளனர். பணம் கைப்பற்றப்பட்டது, மார்ச் 12-ம் தேதி. எனவே, இந்த ஆவணம் போலியானது என்பது உறுதியாகிறது. எனவே, போலி ஆவணம் மூலம் கறுப்பு பணத்தைப் பதுக்கிய வழக்கில் லீமாரோஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்'' என்று விரிவாக சொன்னார்கள்.  

லீமா ரோஸின் மகன் ஜோஸ் டைசனிடம் இதுபற்றி விளக்கம் கேட்டோம். ''ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று கூறி எனது தாயை அழைத்தவர்கள், கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டனர். மூன்று நாட்களுக்கு முன்புதான் சிறுநீர் பிரச்னை தொடர்பாக ஆபரேஷன் முடிந்து, அவர் வீட்டுக்கு வந்தார். உடல்நிலையைக் கருத்தில்கொள்ளாமலேயே கோவையில் கைதுசெய்து, சென்னைக்கு வேனில் கொண்டுவந்தனர். 10 மணி நேரம் போலீஸ் வேனில் அலைக்கழித்தனர். சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் விசாரணை என்று எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் உட்காரவைத்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை ஒரு வருடத்துக்குப் பிறகு தூசிதட்டியுள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கை. வழக்கை சட்டப்படி சந்திப்போம். நிலம் வாங்கியதற்கான பணம் வந்தது, அதற்கு வரி கட்டியது என்று எல்லா ஆதாரங்களையும் போலீஸிடம் கொடுத்​துள்ளோம்'' என்றார் உறுதியுடன்.

மனைவி கைதுசெய்யப்பட்ட பிறகாவது மார்ட்டின் வெளியே வருவாரா?

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்