Published:Updated:

மார்ச் 29... காரணங்கள் 100... செல்போன் இணைப்புகள் 4,000

ஒரு வருஷம் ஆகியும் ம்கூம்...!

##~##

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது. அவரைக் கொலை செய்தது யார்? எதற்காகக் கொலை செய்தார்கள்? என்கிற கேள்விகளுக்கு இன்னமும் விடை தெரியாமல், திக்குத் தெரியாத பாதையில் விசாரணையை நகர்த்தித் திணறுகிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். 

கடந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் ராமஜெயம். கொலை வழக்கைத் துரிதப்படுத்தும் விதமாக ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 90 நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரணையை மேற்கொண்டது மாநகரக் காவல் படை. ஒரு முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் மூன்று மாதங்களுக்குப் பின் ஜூன் மாதம் 27-ம் தேதி முதல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியது தமிழக அரசு.

பிறகு சி.பி.சி.ஐ.டி. உதவி ஆணையர் மலைச்சாமி தலைமையில் 12-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் உள்ளிட்ட படை களத்தில் இறங்கியது. ராமஜெயம் குடும்பத்தினர், அவருடைய சகலையின் மகன் வினோத், ராமஜெயத்துக்கு வேண்டிய கட்சிக்காரர்கள், கணக்குவழக்குகளைப் பார்த்துவந்த அமுதன்,

மார்ச் 29... காரணங்கள் 100... செல்போன் இணைப்புகள் 4,000

லாட்டரி ராம்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் ஆகியோரிடம் தீவிர விசாரணை செய்ததில் எதுவுமே துப்புக் கிடைக்கவில்லை. 'ராமஜெயம், காலையில்  வாக்கிங் சென்றபோதுதான் கொலைசெய்யப்பட்டார்’ என்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அந்த நேரத்தில் அந்த ஏரியாவில் பயன்படுத்திய மொபைல் எண்களை போலீஸார் சேகரித்து ஆராய்ந்தனர். ராமஜெயத்துக்கு ஓரிரு மாதங்களாக வந்த அழைப்புகள், அவர் தொடர்புகொண்ட நபர்கள், கொலை நிகழ்ந்த அன்று நள்ளிரவில் இருந்து காலை வரை திருச்சி மாநகரில் தொடர்பில் இருந்த 4,000 செல்போன் இணைப்புகளை விசாரித்தனர். இதில் 24 செல்போன் நம்பர்கள் போலியான முகவரி கொடுத்து வாங்கப்பட்டுள்ளதையும், ஏழு செல்போன் சிம்கார்டுகள் எவ்வித 'அட்ரஸ் புரூஃப்’பும் இல்லாமலேயே வாங்கப்பட்டு, இரண்டு நாட்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிம் கார்டுகள் வாங்கப்பட்ட கடைகளில் விசாரணை நடத்தியும்

மார்ச் 29... காரணங்கள் 100... செல்போன் இணைப்புகள் 4,000

எவ்வித 'க்ளூ’வும் கிடைக்கவில்லை.

ஆரம்பத்தில் கொலைக்கான 60 காரணங்களைத் தேர்வுசெய்து விசாரித்த தனிப் படை போலீஸ், அதில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் மேலும் 40 காரணங்களை அடையாளம் கண்டு விசாரித்து வருகின்றனர்.

ராமஜெயத்தின் உடல் கிடந்த இடம், அவரின் பெயரில் உள்ள பட்டா நிலம் என்கிறது ஒரு புதிய தகவல்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய வழக்குகளில் ஒன்று, ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டிப் பறந்த தங்கவேல், துரைராஜ் சகோதரர்கள் கொலை வழக்கு. துரைராஜ் காரில் வைத்து எரித்தும் அவரது சகோதரர் தங்கவேல் வயலில் விஷம் கொடுத்தும் கொலைசெய்யப்பட்டனர். இதனை ஆள்வைத்து செய்தது ராமஜெயம்தான் என அப்போது குற்றச்சாட்டுகள் கிளம்பின. தி.மு.க. ஆட்சியில் இருந்ததால் வழக்கு சரிவர விசாரிக்கப்படவில்லை எனக் காரணம் கூறிவந்தனர் துரைராஜ் குடும்பத்தினர். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துக்குத் திருச்சி வந்த ஜெயலலிதாவை சந்தித்த துரைராஜின் மனைவி லீலாவதி, 'குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என மனு அளித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க துரைராஜ் கொலை வழக்கில் தி.மு.க-வின் மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகரை கார்னர் செய்தது காவல் துறை. பின்னர், நேருவின் மீதும் ராமஜெயம் மீதும் நில அபகரிப்பு வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு எனப் பல்வேறு பிரிவுகளில் சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் ராமஜெயம் வெளிநாடு செல்லத் திட்டமிட்டதாகக் கைதுசெய்யப்பட்டு திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் பெற்று வெளியில் வந்த நிலையில்தான் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.

மார்ச் 29... காரணங்கள் 100... செல்போன் இணைப்புகள் 4,000

துரைராஜ் சகோதரர் கொலை வழக்கு, ராமஜெயம் கொலை வழக்கு.. இந்த இரண்டு வழக்குகளில் ஒன்றின் முடிச்சை அவிழ்த்தாலும் மற்றொன்று தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் 7-ம் தேதி திருச்சி சிவாவின் மகள் திருமணத்தை நடத்திவைக்க திருச்சி வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் இந்த வழக்கு குறித்து கேள்வி கேட்க, 'சி.பி.ஐ. விசாரணை வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சி.பி.சி.ஐ.டி. போய் சி.பி.ஐ. வருமா?

- 'ப்ரீத்தி’ கார்த்திக், அ.சாதிக் பாட்ஷா

 'நோ’ சொன்ன ஸ்டாலின்!

முதல் ஆண்டு நினைவு தினத்தில் ராமஜெயம் உருவாக்கிய 'கேர் பொறியியல் கல்லூரி’யில் அவருடைய முழு உருவ வெண்கல சிலையைத் திறக்கப்போகிறார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை, அன்பகத்திலுள்ள கண்ணகி சிலை ஆகியவற்றை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி தீனதயாளன்தான் இந்தச் சிலையையும் வடிவமைத்தார். சிலை திறப்பு விழாவுக்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை அழைத்தார் நேரு. என்ன காரணத்தினாலோ அவர்கள் 'நோ’ சொல்லிவிட, உள்ளூர் வி.ஐ.பி-களை வைத்தே சிலையைத் திறக்க முடிவு செய்துவிட்டாராம் நேரு.