Published:Updated:

விழித்துக்கொள்ளுமா அரசு?

ஸ்டெர்லைட் அடித்த எச்சரிக்கை மணி...

##~##

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏற்கெனவே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடுத்த வழக்கு இறுதித் தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து அச்சமூட்டும் வகையில் ஒரு செய்தி... 

கடந்த 24-ம் தேதி அதிகாலை அந்த ஆலையில் இருந்து விஷ வாயு வெளியாகி பலரையும் மயக்கமடையச்செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.

''காலையில் அந்த வழியா வாக்கிங் போய்ட்டிருந்தேன். ஏதோ பிளாஸ்டிக் எரியுற வாடை அடிச்சுது. கொஞ்ச நேரத்தில அந்தக் காற்றை சுவாசிக்க முடியாம, மயங்கி விழுந்துட்டேன். அந்த ஏரியாவுல உள்ள செடி, மரங்கள் எல்லாம் கருகிப்போச்சு'' என்றார் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான முருகேசன்.

விழித்துக்கொள்ளுமா அரசு?

தூத்துக்குடி வ.உ.சி காய்கனி மார்க்கெட் வியா​பாரிகள், ''அதிகாலை மூணு மணிக்கு காற்றில் ஏதோ ரப்பர் கருகிறமாதிரி வாசனை வீசியது. அஞ்சு, ஆறு மணிக்கு அதிக நெடியுடன் காற்று வீசியது. கண் எரிச்சல், படபடப்பு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுச்சு. மூக்கில் துணியைக் கட்டிக்கிட்டுத் தப்பிச்சோம். அப்புறம்தான் ஸ்டெர்லைட் ஆலையில இருந்து விஷ வாயு கசியுதுன்னு சொன்னாங்க. விஷயம் கேள்விப்பட்டதும் வியாபாரிங்க கடைகளை மூடிட்டுப் போயிட்டாங்க. பகல் பத்து மணி வரைக்கும் மார்க்கெட் பக்கம் யாரும் வரலீங்க'' என்றார்.

விழித்துக்கொள்ளுமா அரசு?

விஷயம் அறிந்து ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கம், மீனவர்கள் அமைப்புகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர்கள் திரண்டுவிட்டார்கள். இவர்களுடன் வைகோ வந்துசேர அவர்  தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

விஷ வாயு வெளியானது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் பேசினோம். ''ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான விஷ வாயுவால் ஆலையைச் சுற்றியுள்ள சுமார் 40 கி.மீ. தொலைவுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாயுக் கசிவால் குழந்தைகள் மக்கள் பெருமளவு

விழித்துக்கொள்ளுமா அரசு?

பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு மணி நேர வாயுக் கசிவுக்கே இவ்வளவு பெரிய பாதிப்பு என்றால் ஆலையில் முழுவதுமாக கந்தகம் கசிந்தால், தூத்துக்குடியே சுடுகாடாகிவிடும். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டு இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கடந்த வாரம்கூட சுவாமிநாதன் என்ற வெல்டிங் தொழிலாளி பலியானார். அது மறைக்கப்பட்டுவிட்டது. இதே நிலை நீடித்தால் இந்த ஆலை இன்னும் எத்தனை பேரின் உயிரைக் காவு வாங்கக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆலையால் தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதாடி​வருகிறேன். இன்னும் சில மாதங்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. இருப்பினும் வரும் 28-ம் தேதி எனது தலைமையில் பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும் சேர்ந்து ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணியாக ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடுவோம்'' என்றார் உறுதியுடன்.

விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம் பேசினோம். ''வாயு கசிந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டதும் சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்துதான் கந்தக டை ஆக்ஸைடு கசிந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். வாயு அதிகம் பரவிய ஆலையின் சுற்றுப்பகுதிகளான மீளவிட்டான், மடத்தூர், தெற்கு வீரபாண்டிய புரம் ஆகிய ஊர்களுக்கு மருத்துவக் குழு அனுப்பப்பட்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. '' என்றார்.

மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளரான கோகுல்தாஸ், ''பராமரிப்பு வேலை முடிஞ்சு மீண்டும் இயக்கும்போது அதிகமான அளவு கந்தக டை ஆக்ஸைடு வெளியேறி இருக்கிறது. அது நகர் முழுவதும் பரவினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். விபத்து சம்பந்தமாக அந்த ஆலைக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம்'' என்றார் சுருக்கமாக.

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மக்கள் தொடர்பு மேலாளரான இசக்கியப்​பனிடம் பேசினோம். ''எங்கள் ஆலைக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இரண்டு மூன்று நாட்களாக ஆலை நிறுத்திவைக்கப்பட்டு அன்றைக்கு 10 மணிக்குத்தான் இயங்க ஆரம்பித்தது. இங்கிருந்து எந்த வாயுவும்  வெளியில் செல்லவில்லை. முழுக்க முழுக்க லேட்டஸ்ட் டெக்னாலஜியால் இயங்கும் தொழிற்சாலை இது. ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறவர்கள் எங்கோ நடந்த விபத்தைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் பெயரையே இழுக்கிறார்கள்'' என்று ஒரே போடாகப் போட்டார்.

இந்த விபத்து ஓர் எச்சரிக்கைதான். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது!

- எஸ்.சரவணப்பெருமாள், இ.கார்த்திகேயன்,

படங்கள்: ஏ.சிதம்பரம்.