Published:Updated:

தகுதி இல்லாத நிறுவனமா... தரமில்லாத மெஷினா?

சட்டசபையில் பஸ் டிக்கெட் சர்ச்சை...

பிரீமியம் ஸ்டோரி

'அரசுப் பேருந்துகளில் டிக்கெட் வழங்கப் பயன்படுத்தப்படும் ஜி.பி.எஸ். கருவிகள் வாங்க டெண்​டர் விட்டதில், 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’ என்று தி.மு.க. முன்வைக்கும் குற்றச்சாட்டினால் அனல் பறக்கிறது தமிழக சட்டமன்றம். குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனைச் சந்தித்தோம்.  

''ஜி.பி.எஸ். கருவிகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்பதற்கு நாங்கள் ஆதாரங்களைக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதற்றமும், பொறுப்பற்ற பதிலுமே முறைகேடு நடந்ததை உறுதிப்படுத்துகிறது. ஒரு டெண்டர் விடுவதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பிறகு வெளிப்படையான முறையில் டெண்டர் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும். அதில் நியாயமான விலையைத் தேர்வு செய்து பல மட்டங்களில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். பிறகுதான் அதற்கான ஆவணங்கள் தயாரிக்​கப்பட்டு டெண்டர் வழங்கப்படும்.

தகுதி இல்லாத நிறுவனமா... தரமில்லாத மெஷினா?

டெண்டர் எடுக்கும் நிறுவனங்களுக்கும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. டெண்டர் கோரும் நிறுவனத்தின் அனுபவம், சொத்து மதிப்பு, பணித்திறன் போன்றவை அதில் அடங்​கும். ஜி.பி.எஸ். கருவிகள் வழங்க அ.தி.மு.க. அரசு டெண்டர் கொடுத்துள்ள இன்ஜினரி டெக்னாலஜிஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்​துக்கு இந்தத் தகுதிகள் எதுவும் இல்லை. 200 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுக்கும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு வெறும் எட்டு லட்ச ரூபாய்தான் உள்ளது. குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுக்குத்தான் டெண்டர் வழங்கப்பட வேண்டும்.

தகுதி இல்லாத நிறுவனமா... தரமில்லாத மெஷினா?

ஆனால், இந்த நிறுவனத்துக்கு அந்தத் தகுதி​யும் இல்லை. கேட்டால், இது கிளை நிறுவனம் இதனுடைய மெயின் நிறுவனத்துக்கு அந்தத் தகுதிகள் இருக்கிறது என்கிறார் அமைச்சர். அப்படியானால், மெயின் நிறுவனத்தின் பெயரிலேயே டெண்டர் கேட்டிருக்கலாமே... எதற்காக அவசரகதியில் ஒரு கிளையை ஆரம்பித்து அதன் பெயரில் டெண்டர் கேட்க வேண்டும். ஏனென்றால், மெயின் நிறுவனத்தின் இயக்குனர்களில் இருவரின் பெயர் பிளாக் லிஸ்ட்டில் உள்ளது. அவர்களுக்கு எந்தவிதமான டெண்டரும் வழங்க முடியாது என்ற விதி உள்ளதால், இப்படி ஏமாற்று வேலை செய்யப்​பட்டுள்ளது.''

'பத்திரிகைச் செய்திகளை வைத்து குற்றம் சுமத்துகிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களைச் சொல்ல உங்களுக்குத் தகுதி இல்லை’ என்று அமைச்சர் சொன்னார். சபாநாயகர் தனபால், 'பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாக வைத்து சபையில் குற்றம் சாட்டுவதை அவைக் குறிப்பில் பதிவுசெய்ய முடியாது’ என்று மறுத்தார். 'முறைகேடு என்று நீங்களே முடிவு கட்டிவிட்டீர்கள். பிறகு எதற்காக உங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டார் ஜெயலலிதா. இவர்கள் மூவருக்கும் இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை'' என்று சொன்னார்.

இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி, ''பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கு​வதற்கான புதிய ஜி.பி.எஸ்.கருவிகள் நவீன முறையில் வழங்க முடிவுசெய்யப்பட்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிட​மும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பேருந்துகளில் முறையான கள ஆய்வு செய்யப்பட்டு, டெண்டர் புள்ளிகள் கோரப்​பட்டன. அதில் நான்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. நேரடித் தேர்விலும், மிக குறைவான விலையில் தரமான எந்திரம் வழங்க முன்வந்தது என்ற அடிப்படையிலும் இன்ஜினிரி என்ற நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இன்ஜினிரி நிறுவனத்தின் முதன்மை நிறுவனச் செயல்பாடுகளையும் அனுபவத்தையும் பரிசீலித்தே இந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை நிறுவனம் வேறு பல தொழில்களில் காலடி எடுத்துவைக்கும்போது அதற்கு தகுந்த பெயரை வைத்துக்கொள்வார்கள். பெயரை மாற்றுவதால், அந்த நிறுவனத்தின் தரம் குறைந்துவிடாது. மாறியும்விடாது. தெட்சிணாமூர்த்தி என்ற பெயரை மாற்றி கருணாநிதி என்று வைத்துக் கொண்டதால் அவரின் குணமும் தரமும் மாறிவிட்டதா?'' என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார்.

ஏதோ ஒரு சந்தேக ரேகை படர்ந்துவிட்டது. அமைச்சர்தான் அதற்கு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும்!

- ஜோ.ஸ்டாலின்

படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு