பிரீமியம் ஸ்டோரி

'யுத்தம் என்னை ஜனங்களுக்குள் இறக்கியது. எல்லாவற்​றுக்கும் சாட்சியாயிருக்கக் கற்றுக்கொடுத்தது. ஜனங்களின் மொழியிலேயே ஜனங்களுக்கு விளங்கும் விதத்திலேயே எதையும் கூறுமாறு எனக்கது விதித்தது. அதனாலது எனது மொழியை இலகுவாக்கிக் கொடுத்தது. இருக்கின்ற எந்த வடிவத்திலும் திருப்திப்​படாத எதையும் இறுதி வடிவமாக ஏற்றுக்கொள்ளாத எல்லாவற்றையும் ஏதோ ஒரு கட்டத்தில் கடந்து போய்விடத் துடிக்கின்ற ஒருவித வேக மனோநிலையை எனக்குள்ளது உருவாக்கியது. இதிலிருந்து வந்தவை​தான் எனது இந்தப் பரிசோதனைகள். இதன்படி பார்த்தால், எனது முதல் நன்றி யுத்தத்திற்கே!’ - தனது எழுத்துலகம் பற்றி நிலாந்தன் கொடுக்கும் அறிமுகம் இது.

நன்றிக்கு உரியதா யுத்தம்? இல்லை. அது தன் வாழ்நாளில் எத்தகைய நடுக்கத்தை விதைத்தது என்பதைக் கவிதை மொழியில் சொல்கிறார் நிலாந்தன்.

இனி எனது நாட்களே வரும்

கண்ணியமில்லாத யுத்தம்

நாடு

தலைப்பிள்ளைகளைக் கேட்டது

மரணம்

பதுங்கு குழியின் படிக்கட்டில்

ஒரு கடன்காரனைப்போலக் காத்திருந்தது.

பராக்கிரமசாலிகளின் புஜங்கள்

குற்றவுணர்ச்சியால் இளைத்துப்போயின

கள்ளத் தீர்க்கதரிசிகளும் கலையாடிகளும்

ஏற்கெனவே சரணடைந்துவிட்டார்கள்

நன்றியுள்ள ஜனங்களோ

பீரங்கித் தீனிகளாய் ஆனார்கள்

ரத்தத்தால் சிந்திப்பவர்கள் மட்டும்

சரணடையாதே தனித்து நின்றார்கள்

ஓரழகிய வீரயுகம்

அதன் புதிரான வீரத்தோடும்

நிகரற்ற தியாகத்தோடும்

கடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தது.

- என்ற ஒரே கவிதையில் அரை நூற்றாண்டு வரலாறு அடங்கிப்​போனது.

'யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே’ என்ற மிக நீண்ட கவிதையும் அதற்குத் துணைக் குறிப்புகளாக அவர் எழுதியிருப்பதும் நுணுக்கமான வரலாற்றுப் பதிவு. 'பொதுவாகப் படித்த யாழ்ப்பாணத்தார் உலகில் உள்ள மூன்று 'ஜே’க்களைப் பற்றி அடிக்கடி கூறிப் பெருமைப்படுவது உண்டு. யூதர், யப்பானியர், யாழ்ப்பாணத்தார் ஆகிய மூன்று இனங்களின் ஆங்கில முதல் எழுத்துக்களே அவை. ஒருபுறம் கடும்பிடியாகப் பழைமை பேணுவார்கள். இன்னொருபுறம் மிக நவீனமானவற்றில் தமக்கு வசதியானதை எதுவித அசௌகர்யமும் இன்றித் தன்வயப்படுத்திவிடுவர். தமது சொந்தச் சாம்பலில் இருந்து புத்திளமையுடன் மீண்டெழும் மிக அரிதான வீரம் இம்மூன்று ஜனங்களுக்குரியது’ என்கிறார் நிலாந்தன்.

நிலாந்தன் கொடுத்திருப்பது யுகபுராணம். ஒரு யுகத்தின் முடிவைப் பற்றி மட்டும் அழுது புலம்பாமல் 'இனி எனது நாட்களே வரும்’ என்ற கட்டியம் கூறும் நம்பிக்கை இது.

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு