Published:Updated:

''வாக்கிங் போனவரை வம்புக்கு இழுத்துக் கொன்னுட்டாங்க!''

கதறும் மகள்... அலட்சிய போலீஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுக்​கிடக்கிறது என்பதற்கு செங்கல்பட்டு சம்பவம் சாட்சி! 

செங்கல்பட்டு அருகே உள்ளது வெங்கடாபுரம் கிராமம். தனது மனைவிக்கு முதலாம் ஆண்டு திதி கொடுப்பதற்காக, திருப்பதியில் இருந்து தனது குடும்பத்தினருடன் வெங்கடாபுரத்துக்கு வந்தார் ராமன். அங்கே தனது மருமகன் ரங்கநாதன் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 31-ம் தேதி மாலை மகளையும் பேத்தியையும் அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றவரை வம்புக்கு இழுத்துக் கொன்றுவிட்டது ஒரு ரௌடி கும்பல்.

நடந்ததை விவரிக்கிறார் ராமனின் மகள் பத்மஸ்ரீ. ''சம்பவம் நடந்த அன்று சாயங்காலம் எங்க அப்பாவுடன் நானும் அக்கா மகள் அக்ஷயாஸ்ரீயும் தெருமுனை வரைக்கும் வாக்கிங் போய்ட்டு வரலாம்னு கிளம்பினோம். அப்ப எதிர்ல மூணு பேர் வந்தாங்க. திடீர்னு குழந்தை அக்ஷயாஸ்ரீயை மிரட்டி பயமுறுத்தினாங்க. அவ ஓடிவந்து என் மேல விழுந்தா. ஏன் இப்படிக் கிண்டல் செய்றீங்கன்னு கேட்டேன். வாய் கூசும் அளவுக்குத் தப்புத் தப்பாப் பேசுனாங்க. எங்கப்பா 'ஏன்டா இப்படிப் பண்றீங்க?’னு கேட்டார். உடனே திடீர்னு ஒரு கம்பால என் பின் தலையில் அடிச்சாங்க. என் அப்பா​வையும் தாக்க ஆரம்பிச்சாங்க. தடி, இரும்பு பைப்பெல்லாம் வெச்சி அவரை என் கண் எதிர்லயே அடிச்சு சாய்ச்சாங்க. நான் கதறினேன். அக்ஷயாஸ்ரீ வீட்டுக்குத் தகவல் சொல்ல ஓடினாள். என்னோட தலைமுடிய பிடிச்சு தரதரன்னு ரோட்டுல இழுத்துக்கிட்டுப் போனாங்க. நான் கத்தின சத்தம் கேட்டு எங்க வீட்டுல இருந்து வந்தவங்கதான் என்னைக் காப்பாத்தினாங்க. நான் அவ்வளவு சத்தம் போட்டும் கிராமத்தில இருந்து யாரும் எங்களைக் காப்பாத்த வரலை. இந்தத் தெருவில் நூறு பேருக்கு மேல் வேடிக்கை பார்த்தாங்க. இந்த ஊருக்கு இதைவிட என்ன அசிங்கம் வேணும்?'' என்றார் கண்ணீரோடு.

''வாக்கிங் போனவரை வம்புக்கு இழுத்துக் கொன்னுட்டாங்க!''

ராமனின் மருமகன் ரங்கனாதனிடம் கேட்டோம். ''ராமன் 63 வயதானவர். அவருடைய பெரிய மகளைத்தான் நான் திருமணம் செஞ்சுக்கிட்டேன். திருப்பதி தேவஸ்தானத்துல வேலை செய்ததால், கீழ்

''வாக்கிங் போனவரை வம்புக்கு இழுத்துக் கொன்னுட்டாங்க!''

திருப்பதியில உள்ள பவானி நகர்லயே செட்டில் ஆகிட்டாங்க. யாரிடமும் அதிர்ந்துகூட பேச மாட்​டார். திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ச்சகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த வருடம் எங்க அக்கா இறந்துட்டாங்க. அவருக்கு முதல் திவசம் கொடுக்கணும்னு ஆசைப்பட்டார். நான்கு நாள் திவசம் செய்வது எங்க பழக்கம். அதற்காக 28-ம் தேதி குடும்பத்தோட இங்கே வந்து தங்கியிருந்தாங்க. என் மாமாவும் அவரோட சின்ன பெண் பத்மஸ்ரீயும் பேத்தி அக்ஷயாஸ்ரீயும் வாக்கிங் போய்ட்டு வரும்போது எங்க வீட்டிலிருந்து சுமார் 200 அடி தொலைவில்தான் இந்த சம்பவம் நடந்தது.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தோம். அதற்குள் அந்த ரௌடிங்க ஓடிட்டாங்க.  பத்மஸ்ரீக்கும் தலை​யில் காயம். உடல் முழுக்கத் தடியால அடிச்சிக் காயப்படுத்தி இருந்தாங்க. அவருக்குப் பின் மண்டையில பலமா அடிபட்டதால், கொஞ்ச கொஞ்சமா சுயநினைவு இழந்துகொண்டிருந்தார். உடனே அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு போனோம். பத்மஸ்ரீயை மட்டும்தான் எங்களால காப்பாத்த முடிஞ்சது. சிகிச்சை பலனளிக்காம செவ்வாய்க்கிழமை அதிகாலை ராமன் இறந்துட்டார்.

''வாக்கிங் போனவரை வம்புக்கு இழுத்துக் கொன்னுட்டாங்க!''

வந்த ரௌடிகளுக்கு சுமார் 20-25 வயசு இருக்கும். அத்தனைப் பேரும் போதையில் இருந்ததா சொல்றாங்க. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக இருக்குது. தெருவில் போறவங்களை எல்லாம் குடிச்சிட்டு கிண்டல் செய்வாங்க. கடையிலயே உக்காந்து தண்ணியடிக்கறாங்க. கஞ்சா அடிக்கிறாங்க. ஒருத்தரை மட்டும் அடையாளம் கண்டு இருப்பதாக போலீஸ் சொல்றாங்க'' என்றார் வேதனையுடன்.

அதே நாளில் செங்கல்​பட்டை அடுத்த திருப்போரூர் கூட்டுச்சாலையில் செவ்வாய்​கிழமை இரவு ஐந்து ரௌடிகள் சேர்ந்து சாதிக் என்ற வியா​பாரியைக் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு தாக்கி​யுள்ளனர். சாதிக்கைத் தாக்கியதும் இதே கும்பல்தான் என்பது தெரியவந்துள்ளது.

''செங்கல்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை கொடி​கட்டிப் பறக்கிறது. போலீஸாருக்கு மாமூல் கொடுத்துவிடுவதால் அவர்கள் கண்டுகொள்வதில்லை. கஞ்சா அடிக்கிற கும்பல் பண்ற அட்டகாசம் எல்லை மீறிப் போயிட்டுருக்கு. பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியாத சூழ்நிலை'' என்கிறார்கள் பொதுமக்கள்.

இதுகுறித்து செங்கல்பட்டு டி.எஸ்.பி-யான குமார், ''கொலையாளிகளில் 'வாலு’ எழுமலை என்ப​வனைப் பிடித்து இருக்கிறோம். முனிராஜ், 'திக்குவாய்’ எழுமலை ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்துவிட்டார்கள். அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை பற்றி புகார் வந்திருக்கிறது. ரௌடிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

எல்லாம் முடிந்த பிறகுதான், போலீஸ் வருவாங்களோ?

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு