Published:Updated:

ஒரு கல்.. ஒரு கண்ணாடி... ஒரு கலவரம்!

கல்பாக்க அணு உலைப் போராட்டம்...

பிரீமியம் ஸ்டோரி
##~##

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான பிரச்னைகள் ஓய்வதற்குள், கல்பாக்கம் அணு உலைக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்கின்றன. 

இந்திய அணு மின் கழகம் சார்பில் செயல்படும் சென்னை அணு மின் நிலையம் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு 220 மெகா வாட் திறன்கொண்ட இரண்டு யூனிட்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு உலையின் எரிபொருளாக இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புப் பணிகளுக்காக ஒரு மாதம் வரை இரண்டு யூனிட்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்படும். இப்போது முதல் யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. உற்பத்தி நிறுத்தப்பட்ட இரண்டாம் யூனிட்டில் பராமரிப்புப் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடக்கிறது. இந்த நிலையில் அணு உலைகளால் தங்கள் கிராமங்கள் பாதிக்கப்படுகிறது என சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

ஒரு கல்.. ஒரு கண்ணாடி... ஒரு கலவரம்!

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது​மக்களிடம் பேசினோம். ''கல்பாக்கத்தைச் சுற்றி சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மனமை, நல்லாத்தூர், கொக்கிலமேடு போன்ற 16 கிராமங்கள் அமைந்துள்ளன. இவை அணு உலைப் பகுதியில் இருந்து ஏழு கி.மீ. தொலைவுக்குள் இருக்கிறது. அணு மின் நிலையத்துக்குத் தேவையான குடிநீர், மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்கள் இந்தக் கிராமங்கள் வழியாகத்தான் அணு உலைக்குச் செல்கிறது. இந்தக் கிராமங்கள்தான் அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகளை முதலில் சந்திக்கின்றன.

இப்போது புதிதாக பாவினி என்ற மூன்றாவது யூனிட் கட்டப்பட்டு வருகிறது. இனி, புதிதாக அணு உலைகளை இங்கு தொடங்கக் கூடாது. சுற்று​வட்டாரக் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும். 24 மணி நேரம் இயங்கக்கூடிய உயர்தர இலவச மருத்துவமனை அமைத்துக் கொடுக்க வேண்டும். அணு மின் நிலையப் பள்ளிகளில் எங்கள் கிராமத்து மாணவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும்'' என்கின்றனர்.

ஒரு கல்.. ஒரு கண்ணாடி... ஒரு கலவரம்!

கடந்த 25-ம் தேதி கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் அணு உலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி​யில் முடிந்தது. மறுநாள் 26-ம் தேதி அணு உலையை முற்றுகையிட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். பலத்த கோஷங்களோடு அணு உலையை நோக்கி வந்தவர்களை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி-யான சேவியர் தன்ராஜ் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நேரத்தில் திடீரென அணு மின் நிலையத்துக்கு சொந்தமான ஒரு பேருந்தின் கண்ணாடி மீது யாரோ கல் வீச, அது உடைந்தது. கல் வீசியது யார் என்று பொதுமக்கள் கணிப்பதற்குள், அங்கிருந்த காவலர்கள் தடியடி நடத்தத் தொடங்கினர். பதறி ஓடியவர்களையும், மடக்கிப் பிடித்து அடித்தனர் காவலர்கள். இதில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் 18 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

அணு மின் நிலையத் தொழில்நுட்ப ஒருங்​கிணைப்பு மற்றும் மக்கள் விழிப்பு உணர்வுப் பிரிவுத் தலைவர் ஜலஜாவிடம் பேசினோம். ''இங்கு பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பேருந்து பிரச்னைதான் இவ்வளவுக்கும் காரணம். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்று தனியாகப் பேருந்துகள் உள்ளன. மற்ற பேருந்துகள் கிளம்பி 10 நிமிடங்கள் கழித்து அந்தப் பேருந்துகள் கிளம்பும். சோதனை முடிந்த பிறகே, அவர்கள் பேருந்தில் ஏற வேண்டும். அவர்களோ சோதனைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருவதால், அனைவரும் சோதனைக்கு உட்பட்டுதான் உள்ளேயும் வெளியேயும் அனுப்பப்படுகின்றனர். இப்படிக் கிளம்பிய போராட்டம், சிலரின் தூண்டுதலால் வேறு திசைக்கு சென்றுவிட்டது'' என்ற அவர், பொதுமக்களின் கோரிக்கைகள் பற்றியும் தன்னுடைய கருத்தைச் சொன்னார்.

''இங்கே உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, நாங்கள் பயன்படுத்த வேண்டுமானால்கூட, மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் 24 மணி நேரமும் அவர்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அதை தமிழக அரசுதான் நிறைவேற்ற முடியும்'' என்றார்.

தமிழக அரசால் முடிகிற காரியமா அது?

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு