Published:Updated:

மிரட்சியில் மம்தா பானர்ஜி!

வீதிக்கு வந்த மேற்கு வங்க மாணவர்கள்...

பிரீமியம் ஸ்டோரி
##~##

மேற்கு வங்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாணவர் புரட்சி மம்தாவை விழி பிதுங்கவைத்திருக்​கிறது. 

மேற்கு வங்கத்தில் நடைபெற இருந்த கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு திடீரென ஒத்திவைத்தது. இதனைக் கண்டித்து கடந்த 2-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எஃப்.ஐ.) கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்றவர்களை போலீஸார் கைதுசெய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். கைதுசெய்யப்பட்டவர்களில் எஸ்.எஃப்.ஐ. தலைவர் சுதீப்தா குப்தாவும் ஒருவர். அவரை வாகனத்தில் வைத்தே அடித்துக் கொன்று சாலையில் வீசிவிட்டதாகதான் மேற்கு வங்கம் கொந்தளிக்கிறது.

'சுதீப்தா குப்தாவை அழைத்துச் சென்றபோது, அவர் வாகனத்தில் இருந்து வெளியே தலையை நீட்டியபடி இருந்தார். அப்போது மின்சாரக் கம்பத்தில் தலை மோதி அவர் இறந்துவிட்டார்’ என முதல்வர் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்க போலீஸாரும் சொன்னாலும், அதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் அமைப்பினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 'போலீஸாரால் தலையில் அடிக்கப்பட்டுதான் அவர் இறந்துபோனார்’ என்று கொந்தளிக்கின்றனர் அவர்கள்.

மிரட்சியில் மம்தா பானர்ஜி!

சுதீப்தா குப்தா உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவ​மனைக்குச் சென்ற மம்தா, அங்கே கூடிநின்ற பல்லாயிரக்​கணக்கான மாணவர்களின், 'மம்தா ஒழிக’ என்ற கோஷத்தால் அதிர்ந்துபோனார். ''சுதீப்தா

மிரட்சியில் மம்தா பானர்ஜி!

குப்தாவின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எனது அரசு உடனடி​யாக செய்யும்'' என மம்தா விட்ட அறிக்கையும் பூமராங்காக அவர் பக்கம் திரும்பியுள்ளது.

சுதீப்தா குப்தாவின் தந்தை பிரணாப்குமார் குப்தா, ''நீங்கள் என்னைப் பணத்தால் வாங்க முடியாது. எனது மகனின் உயிருக்குப் பதிலாக, என்னால் எதையும் வாங்க முடியாது. நான் பிச்சைக்காரன் அல்ல. அமைதி வழியில் போராடிய எனது மகனை, உங்களின் போலீஸ் கொன்றுள்ளது. இதுதான் நீதியா? எனக்குத் தேவை நீதி. உங்களின் பணம் அல்ல. எனது மகனைக் கொன்ற போலீஸ், சட்டத்தின் முன்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உங்களால் எனக்குப் பணத்தைத் தர முடியும். இறந்துபோன எனது மகனை எனக்குத் திரும்பத்தர முடியுமா?'' என்று மம்தாவை நோக்கி சீற்றமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மம்தாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான வங்காளப் பத்திரிகைகள், இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்ட படுகொலை என்று விமர்சிக்கின்றன. 'எஸ்.எஃப்.ஐ-யின் செயல்பாடுகளை முடக்கி, மாணவர் மத்தியில் ஓர் அச்சத்தை தோற்றுவிக்க சுதீப்தா குப்தாவைத் திட்டமிட்டு கொன்றது மம்தாவின் அரசு’ என குற்றம்சாட்டப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவதால் மேற்கு வங்கம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்திய மாணவர் கூட்டமைப்பின் அங்கத்தவர்​களில் ஒருவரான அகில், ''மம்தா அரசு, சுதீப்தா குப்தாவைக் கொன்றதன் மூலம் மாணவர் போராட்​டங்களை அடக்க எந்த நிலைக்கும் செல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட மாணவி தான்யா பரத்வாஜை, நக்ஸல் எனக் கூறி மம்தா மிரட்டியதை இந்தியாவே பார்த்தது. அப்போதே மாணவர்களுக்கு நக்ஸல் பட்டம் கட்டி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை, அவர்களின் அரசியல் செயல்​பாடுகளை ஒடுக்கலாம் என மம்தா நினைத்தார். அதன் உச்சக்கட்டம்தான் சுதீப்தா குப்தாவின் படுகொலை.

உலகில் உள்ள பெரும்பாலான புரட்சிகள் மாணவர்களாலேயே நிகழ்த்தப்பட்டன என்பது வரலாறு. அண்மையில்கூட மாணவர்களின் போராட்டங்களால் தமிழ்நாடே ஸ்தம்பித்ததை நாங்கள் பார்த்தோம். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதைப் புரிந்துகொள்ளாத எந்த அரசும் நீண்ட காலம் ஆட்சி நடத்தியதாக சரித்திரம் இல்லை'' என்றார் சீற்றத்துடன்.

உலகின் மிகப் பெரிய புரட்சிகள் எல்லாம் சிறிய பொறியில் இருந்துதான் தொடங்குகின்றன என்ற வரலாற்றை ஆட்சியாளர்கள் புரிந்து​கொள்ள வேண்டும்!

- ம.அருளினியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு