Published:Updated:

குடி நோயாளியால் வந்த கேடு!

பதற்றத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

து நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பார்கள். அது 100 சதவிகிதம் உண்மை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சத்தியமங்கலம் கிராமம். இங்கு உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்புத் தேர்வு மையமாக உள்ளது. மேல்பாப்பாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், ராஜாதேசிக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இங்குதான் தேர்வுகளை எழுதினார்கள். கடந்த 1-ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. 221 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள்களைப் பையில் அடுக்கி சீல்வைத்து, சத்தியமங்கலம் தபால் நிலையத்தில் ஒப்படைத்தார் பள்ளித் தலைமை ஆசிரியர். அவர் ஒப்படைத்த விடைத் தாள்கள் கல்வித் துறை அலுவலகத்துக்குச் செல்லாமல் பாதியிலே மாயமடைந்திருப்பது, கல்வித் துறையையே கலக்கியுள்ளது.

குடி நோயாளியால் வந்த கேடு!

சத்தியமங்கலம் அஞ்சல் அலுவலக ஊழியர்களிடம் பேசினோம். ''இரண்டு பண்டல் விடைத்தாள்களையும் ஒரே பையில் போட்டு சக ஊழியர் சௌந்தர்ராஜனிடம் ஒப்படைத்துவிட்டோம். அவரின் வேலை, இந்த விடைத்தாள்களைத் திண்டிவனம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே மெயில் சர்வீஸிடம் ஒப்படைப்பது. அவர், திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் செல்லும் 'வள்ளிச்செல்வன்’ என்ற பேருந்தில்தான் வழக்கமாக செல்வார். ஆனால், அன்று அந்தப் பேருந்து வருவதற்கு முன்பே டவுன் பஸ்ஸில் ஏறி செஞ்சி சென்றுவிட்டார். செஞ்சியில் மீண்டும் வள்ளிச்செல்வன் பேருந்தைப் பிடித்து திண்டிவனம் சென்றுள்ளார். இது தவிர, எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது'' என்றார்கள்.

மாவட்ட கல்வி அலுவலர் மணி, ''சத்தியமங்கலம் தேர்வு மையத்தில் இருந்து விடைத்தாள்கள் வரவில்லை என்றதும் ரயில்வே மெயில் சர்வீஸில் விசாரித்தோம். 'தபால் ஊழியர் சௌந்தராஜனிடம், தபால் நிலைய ரசீது மட்டும் உள்ளதே தவிர, விடைத்தாள்கள் இல்லை. அவரிடம் சரியான பதிலும் இல்லை’ என்றனர். பதறியடித்துகொண்டு அங்கு சென்றபோதுதான் அவர் விடைத்தாள்களைத் தவறவிட்டிருந்த விஷயம் தெரிந்தது'' என்கிறார்.

குடி நோயாளியால் வந்த கேடு!

இந்தத் தகவல் காட்டுத் தீப்போல பரவ, மறுநாள் காலை கலெக்டர், எஸ்.பி., ஆர்.டி.ஓ., தாசில்தார் எனப் பல தரப்பிலும் விசாரணையில் இறங்கினர். எஸ்.பி. மனோகரிடம் பேசியபோது, ''தபால் நிலைய ஊழியர் சௌந்தர்ராஜன் மொடாக் குடிகாரராக இருந்துள்ளார். தபால் நிலையத்தில் இருந்து விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு செஞ்சி பேருந்து நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு, மீண்டும் பஸ் பிடித்து திண்டிவனம் சென்றுள்ளார். போதையில் விடைத்தாள்களை எங்கு வைத்தார், என்ன செய்தார் என்ற எந்த ஞாபகமும் அவருக்கு இல்லை. திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வந்த பிறகுதான் விடைத்தாள்களின் நினைவு வந்திருக்கிறது. ஆனாலும் எங்கு வைத்தோம் என்பது தெரியவில்லை. உடனடியாக அவருக்குப் பணி இடைநீக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நான்கு தனிப் படைகளை அமைத்து விடைத்தாள்களைத் தேடிவருகிறோம். விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்'' என்றார் நம்பிக்கையுடன்.

மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

குடி நோயாளியால் வந்த கேடு!

இது விழுப்புரம் மாவட்ட விவகாரம் என்றால், கடலூர் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் இன்னொரு வகை...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பி.முட்லூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 545 மாணவர்கள் கடந்த மாதம் 29-ம் தேதி, தமிழ் இரண்டாம் தாள் தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தையும் நான்கு பண்டல்களாகப் பிரித்து சீல் வைத்து விருத்தாசலம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே மெயில் சர்வீஸுக்கு பள்ளியில் இருந்து அனுப்பிவைத்தனர். இரவு 2.30 மணிக்கு விருத்தாசலத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய விடைத்தாள்களும் புதுக்கோட்டைக்கு செல்லும் ரயிலில் ஏற்றப்பட்டன.

ரயில் பெட்டியின் கதவைச் சரியாகப் பூட்டாமல் சென்றுவிட்டனர் ஊழியர்கள். ரயில் கிளம்பி சிறிது தூரம் சென்ற நிலையில், முட்லூர் பள்ளியின் நான்கு விடைத்தாள் கட்டுகளில் ஒன்று கீழே விழுந்துவிட்டது. புதுக்கோட்டையில் ரயில் ஊழியர்கள் பண்டல்களை இறக்கிவைக்கும்போதுதான், இதைக் கவனித்தனர். உடனே விருத்தாசலம் ஊழியர்களுக்குத் தகவல் சொல்ல, ரயில்வே டிராக்கில் சிதறி சின்னாபின்னமாகிக்கிடந்த 177 விடைத் தாள்களைக் கண்டெடுத்து அங்கேயே வைத்து எரித்துவிட்டனர். அந்த மாணவர்களுக்கு தமிழ் முதல் தாளில் எடுத்த மதிப்பெண்ணையே, இரண்டாம் தாளுக்கும் வழங்கிவிடுவோம் என்கிறது தேர்வுத் துறை.

மாணவர்களின் எதிர்காலம் எத்தகைய பொறுப்பற்ற மனிதர்களின் கையில் சிக்கி இருக்கிறது என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் உதாரணம்!

- ஆ.நந்தகுமார், க.பூபாலன்

படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு