Published:Updated:

இசைப்ரியாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும்!

துபாயில் இருந்து துன்பக் குரல்கைவிட்ட ஐ.நா... கதறும் அகதிகள்

இசைப்ரியாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும்!

துபாயில் இருந்து துன்பக் குரல்கைவிட்ட ஐ.நா... கதறும் அகதிகள்

Published:Updated:
##~##

டலுக்குத் தமிழில் பல பெயர்கள் உண்டு. அதில் கண்ணீர் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளலாம். சர்வதேசக் கடலில் ஈழத் தமிழர்களின் கண்ணீர்தான் உப்பு நீராகக் கலந்துகிடக்கிறது. 

தஞ்சம் தேடி உலகெங்கும் கடல் கடக்கும் ஈழத் தமிழர்கள், பல நாட்டு ராணுவத்தினரிடமும் பிடிபடு​கிறார்கள். அப்படி, துபாயில் பிடிபட்ட 45 பேரில் 19 பேரை இலங்கைக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டது ஐ.நா. அந்த 19 பேரில் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேவையாற்றிய ஹரிணி​யும் ஒருவர். இந்த நிலையில் இன்னொரு இசைப்ரியாவாக அவர் சிங்கள வெறிக்குப் பலியாகிவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்​கள் அந்த 19 பேரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்களுள் இருந்த ரமணன் நம்மிடம் பேசினார்.

இசைப்ரியாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும்!

''கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஈழ அகதிகள் 102 பேர் ஆஸ்திரேலியா செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிந்தலக்கரை வந்தோம். அங்குள்ள காளி கோயிலில் கூடினோம். அந்தக் கூட்டத்தில் நானும் என் மகளும் என் மனைவியும் இருந்தோம். முதலிலேயே படகில் ஏறிய நாங்கள் 45 பேர் போலீஸில் சிக்காமல் ஆஸ்திரேலியா நோக்கிக் கிளம்பினோம். நானும் என் மனைவியும் படகில் வந்துவிட்டோம். என் குழந்தை பின்னால் வந்த குழுவினருடன் வருவதாக இருந்த நிலையில், அவள் காவலரிடம் சிக்கிக்கொண்டாள். நானும் என் மனைவியும் இப்போது துபாயில் இருக்க, என் குழந்தை திருச்சியில் இருக்கிறாள். அக்டோபர் மாதம் 9-ம் தேதி சிந்தலக்கரையிலிருந்து கிளம்பிய படகு சர்வதேசக் கடல் எல்லையில் சென்றுகொண்டிருந்தபோது படகில் ஓட்டை விழுந்துவிட்டது. படகில் இருந்த தண்ணீரை இறைத்து சோர்ந்துபோன நாங்கள் சேட்டிலைட் போன் மூலம் ஆஸ்திரேலிய நேவிக்குத் தகவல் கொடுத்தோம். கொஞ்ச நேரத்தில் சரக்குக் கப்பல் வந்து எங்களைக் காப்பாற்றியது. எங்கும் இருட்டு... மொழியும் தெரியவில்லை. நாங்கள் ஆஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுவதாக நம்பினோம். ஆனால், எங்களைத் துபாயில் இருக்கும் ஜபர் அலி என்ற துறைமுகத்தில் இறங்கச் சொன்னார்கள். சில தொண்டு நிறுவனங்களும் வந்தது. அவர்களிடம் 'நாங்கள் தஞ்சம் தேடி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டோம். எங்களை இங்கே கொண்டுவந்து விட்டனர். இலங்கையிடம் எங்களை ஒப்படைக்க மாட்டோம் என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டு கப்பலைவிட்டு இறங்க மறுத்தோம். 'துபாய் அரசு உங்களை இலங்கைக்கு அனுப்பாது’ என்று அவர்கள் உத்தரவாதம் கொடுத்ததன் பேரில் இறங்கினோம். ஆனால், இப்போது ஐ.நா. எங்களைக் கைவிட்டுவிட்டது. எங்களில் 19 பேரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை ஐ.நா. எடுத்துவிட்டது'' என்றார் ரமணன்.

இசைப்ரியாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும்!

துபாயில் கரை சேர்க்கப்பட்ட 45 பேரில் மிக முக்கியமாகப் புலிகளின் ராணுவப் பேச்சாளராக இருந்த இளந்திரையனின் மனைவியும் குழந்தைகளும் வேறு சில போராளிகளும் இருந்துள்ளனர். இவர்களில் எட்டு பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக்​கொண்டது. அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித்துள்ளது. ஏற்கெனவே ஏழு பேரை கொழும்புவுக்குத் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வரவில்லை. அவர்களை துபாய் அரசு கொழும்புவுக்கே திருப்பி அனுப்பத் தயாராகிவருவதாகக் கண்ணீருடன் கூறுகிறார்கள் இந்த அகதிகள்.

அந்தக் குழுவில், புலிகள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளாராக இருந்த ஹரிணி என்றழைக்​கப்படும் லோகினி ரதி மோகன் இருக்கிறார். அவரிடம் பேசினோம். ''புலிகளின் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினேன். 2009-ல் நாங்கள் தப்பித்து தமிழகத்துக்கு வந்தோம். எங்களை இலங்​கைக்குத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்ற வாக்​குறுதி வழங்கப்பட்டதன் பேரிலேயே நாங்கள் தரையிறங்கினோம். ஆனால் இப்போது, அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு எங்களை இலங்கைக்குப் போகச் சொல்கிறது. எங்களை சுதந்திரமாக ஊடகங்களிடம் பேசவோ, வெளி உலகுடன் தொடர்புகொள்ளவோ அனுமதிக்​காமல் அடைத்துவைத்திருக்கிறார்கள். நாங்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் இசைப்ரியாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும். தவிர, என் கணவர் ஒரு நாட்டில், என் பெற்றோர், தங்கைகள் ஒரு நாட்டில் எனத் திசைக்கொருவராய் சிதறிக்கிடக்கிறோம். எங்காவது ஒரு நாட்டுக்குத் தப்பி அங்கிருந்து சிதறிக்கிடக்கும் எங்கள் குடும்பங்கள் ஒன்றுசேர வேண்டும். நாங்களும் நல்ல வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத்தான் கடல் கடக்கிறோம். எந்த நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என நினைக்கிறோமோ, அந்த நாட்டுக்குப் போய் சேர்ப்பதற்காகவா எங்களை நடுக்கடலில் இருந்து காப்பாற்றினார்​கள்?'' என்கிறார் லோகினி ரதி மோகன்.

''நாங்கள் 45 பேரும் தங்கியிருக்கும் இந்த இடத்தில் கதவில்லாத ஒரு கழிவறை உள்ளது. இந்தக் குறுகலான குடோனுக்குள் எங்களை அடைத்துவைத்து வெளியில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களாகப் பிறந்ததைத் தவிர, வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத நாங்கள் கொல்லப்படுவதையோ, சித்ரவதைக்குள்ளாவதையோ இன்னொரு முறை ஐ.நா. வேடிக்கை பார்க்கப்போகிறதா?'' என்று வேதனையோடு கேட்கிறார்கள்.

பதில் சொல்லத்தான் யாரும் இல்லை!

- டி.அருள் எழிலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism