Published:Updated:

''நாங்கள் குருவைத் தேடி கைலாசத்துக்குப் போகிறோம்!''

சர்ச்சையில் சவுளி மடம்

''நாங்கள் குருவைத் தேடி கைலாசத்துக்குப் போகிறோம்!''

சர்ச்சையில் சவுளி மடம்

Published:Updated:
##~##

'அளவுக்கு மீறினால் அனைத்துமே நஞ்சு’ என்பதை, யாகம் வளர்த்து தீயில் குதித்து அற்பக் காரணங்களுக்காக அற்புதமான உயிரை மாய்த்துக்கொண்ட மூன்று சாமியார்கள் உலகுக்குச் சொல்லி​விட்டுப் போயிருக்கும் புதுமொழி இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கர்நாடகத்தில் நிகழ்ந்திருக்கும் 'கல்ட்’ சம்பவத்தால், ஒட்டுமொத்த இந்திய மடங்களே அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன. 

மடத்தை ஆள்வது யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்நாடக மாநிலத்தின் வடக்கு எல்லையில் இருக்கிறது பீதர் மாவட்டம். இங்கு 1989-ம் ஆண்டு 'கணேஷ்வரர் அவதூத் சுவாமி’ என்பவர் சவுளி மடத்தை 14 ஏக்கர் பரப்பளவில் நிறுவினார். அவருடன் பல ஊர்களைச் சேர்ந்த‌ 30-க்கும் மேற்பட்ட சாமியார்கள் வசித்துவந்தனர். கடந்த சில வருடங்களாகவே மடத்தின் சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்பதில் அசோக் சுவாமிக்கும் அதே மடத்தைச் சேர்ந்த வேறு சில சாமியார்களுக்கும் பலத்த போட்டி நிலவியது. அசோக் சுவாமி தன் சாதிக்காரர்களையும் பக்தர்களையும் சேர்த்துக்கொண்டு, தலைமை மடாதிபதியான கணேஷ்வரர் சுவாமிகளுக்கு எதிராகச் செயல்படுவதும் மற்ற சாமியார்களை மிரட்டுவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் மனம் நொந்துபோன தலைமை மடாதிபதி கணேஷ்வரர் சுவாமி தனக்கு வயதாகிவிட்டதால் திறமை வாய்ந்த நல்ல சாமியார் ஒருவரை இளைய மடாதிபதியாக்க முடிவெடுத்தார். எப்படியாவது தான் இளைய மடாதிபதியாக ஆகிவிட வேண்டும் என அசோக் சுவாமி அனைத்து தளங்களிலும் காய்களை நகர்த்தியபோதும், தலைமை மடாதிபதி கணேஷ்வரர் சுவாமி, மாருதி சுவாமி என்பவரை இளைய மடாதிபதியாக கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அறிவித்தார்.  

''நாங்கள் குருவைத் தேடி கைலாசத்துக்குப் போகிறோம்!''

மாயமான மாருதி சுவாமி

இளைய மடாதிபதியாக மாருதி சுவாமி பதவியேற்றதைத் தொடர்ந்து மடத்தின் அனைத்து சாமியார்களும், 'இனி மடம் புதுப் பொலிவு பெறும்’ என்ற நம்பிக்கையுடன் வலம்வந்தனர். தலைமை மடாதிபதி கணேஷ்வரர் சுவாமிகளும் மாருதி சுவாமியின் நிர்வாகத் திறமையைப் பாராட்டினார். கடந்த டிசம்பர் 31-ம் தேதி மடத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடந்தபோது, யாரோ அடையாளம் தெரியாத சிலர் மடத்துக்குள் நுழைந்து மாருதி சுவாமியைக் கொல்ல முயற்சித்துள்ளனர். அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். மடத்தின் பெயர் கெட்டுப் போய்விடும் என்பதால் கணேஷ்வரர் சுவாமிகள் போலீஸில் புகார் கொடுக்கவில்லையாம். இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 31-ம் தேதி இரவு மடத்தில் தூங்கிக்கொண்டு இருந்த இளைய மடாதிபதியான மாருதி சுவாமியை யாரோ கடத்திவிட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ''இன்று வரை அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்றே யாருக்கும் தெரியாது'' என்கிறார்கள் மடத்துடன் தொடர்பில் இருப்பவர்கள்.

அனைவரின் வாழ்விலும் அமைதி நிலவட்டும்!

இளைய மடாதிபதி மாருதி சுவாமி தாக்கப்பட்டது, கடத்தப்பட்டது ஆகிய தொடர் துர்சம்பவங்களால் மனதளவிலும் உட‌லளவிலும் நலிந்துபோனார் தலைமை மடாதிபதி கணேஷ்வரர் சுவாமிகள். மீடியாக்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் இத்தனை காலம் தான் கட்டிக்காத்த மடத்தின் கண்ணியம் கெட்டுவிட்டதைத் தாங்க‌ முடியாமல்  விரக்தியடைந்தவர், 'சமீப காலமாக மடத்தில் நடக்கும் சில சம்பவங்கள் வருந்தத்தக்கவை. பிறருக்கு குணமளிக்கும் நாமே பல நேரங்களில் குற்றவாளியாக நிற்கிறோம். பிறர் குற்றங்களைப் போக்கும் மடாதிபதிகளிடமே குற்றங்கள் நிரம்பி இருக்கின்றன. மனவேதனை காரணமாக சிவப்பாதம் சேருகிறேன். அனைவரின் வாழ்விலும் அமைதி நிலவட்டும். ஓம் நமச்சிவாய’ என, கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த‌ பிப்ரவரி 28-ம் தேதி மடத்தின் வளாகத்தில் இருக்கும் கோயிலின் கர்ப்பக் கிரகத்திலேயே விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

''நாங்கள் குருவைத் தேடி கைலாசத்துக்குப் போகிறோம்!''

உயிர் குடித்த யாகம்!

தலைமை மடாதிபதி கணேஷ்வரர் சுவாமி கள் தற்கொலை செய்துகொண்ட வழக்கைப் பதிவுசெய்த பீதர் மாவட்டக் காவல் துறை, சாமியார் என்பதால் போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லையாம். அவரது பக்தர்களும் சிஷ்யர் களும், 'தலைமை மடாதிபதி கணேஷ்வரர் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்துவிட்டார்’ என மடத்தின் வளாகத்திலேயே அவருக்கு நினைவு மண்டபம் அமைத்தனர். தலைமை மடாதிபதி இறந்துவிட்டார், இளைய மடாதிபதி மாருதி சுவாமியையும் காணவில்லை என்பதால் நிர்வாகப் பொறுப்பை ஈரா ரெட்டி சுவாமிகள் என்பவர் கவனித்துவந்தார். இந்த நிலையில் மூன்று பேர் இறப்புத் தகவல் வந்துள்ளது.

''தலைமை மடாதிபதி தற்கொலை செய்து கொண்டதால் மடம் தீட்டாகிவிட்டது என, ஏப்ரல் 8-ம் தேதி விடிய விடிய சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. 4 மணிக்கே யாகம் முடிந்து விட்டதால் மற்ற சாமியார்கள், அவரவர் அறைகளுக்கு போய்விட்டனர். திடீரென அதிகாலை 5 மணிக்கு கரும்புகையும் ஒருவித நாற்றமும் வர அக்கம் பக்கத்தில் இருந்த சாமியார்கள் ஓடிவந்து பார்த்தபோது, ஆந்திர மாநிலம் மண்ணூரைச் சேர்ந்த ஈராரெட்டி சுவாமி, பேகூரைச் சேர்ந்த ஜெகநாத சுவாமி, சவுளி கிராமத்தைச் சேர்ந்த பிரணவ் சுவாமி ஆகிய மூவரும் யாக குண்டத்தில் குதித்து தீயில் கருகிப்போயிருந்தனர்'' என, அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார் மடத்தில் துப்புரவு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர்.

''நாங்கள் குருவைத் தேடி கைலாசத்துக்குப் போகிறோம்!''

மூன்று கடிதங்களும், ஒரு சி.டி-யும்!

'இது உண்மையிலே தற்கொலையா... அல்லது சொத்துக்காகக் கொலை செய்யப்பட்டார்களா?’ என பீதர் மாவட்டப் போலீஸ் கண்காணிப்பாளர் தியாகராஜன் தலைமையில் போலீஸார் விசாரணையில் குதித்துள்ளனர். அவரிடம் பேசினோம். ''மடம் முழுக்கத் தேடியதில் மூன்று கடிதங்களும், ஒரு வீடியோ சி.டி-யும் சிக்கியது. 15 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவில் மூன்று பேரும் ஒருவருக்கு அடுத்து இன்னொருவர் என, 'கணேஷ்வரஸ்ரீ சுவாமிகள் எங்கள் குரு. நாங்கள் குருவைப் பார்க்க அவரைத் தேடி கைலாசத்துக்குப் போகிறோம். ஓம் நமச்சிவாய’ எனச் சொல்லியபடி பிரார்த்தனை செய்கின்றனர். இப்படி வீடியோ ஆதாரம் பேசிவிட்டுப்போன மூவரும் மீண்டும் ஏன் கடிதம் எழுதினர் எனத் தெரியவில்லை. உண்மையில் அந்தக் கடிதங்களை எழுதியது யார்? கணேஷ்வரர் சுவாமியின் மரணத்தில் ஏதேனும் மர்மம் இருக்கிறதா? மாருதி சுவாமியார் எங்கே இருக்கிறார்? இந்த சம்பவங்களின் பின்ணனியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்றார்.

மடங்களின் பிடியில் கர்நாடகா!

கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ''மடங்களின் நிர்வாகத்தில் இதுவரை போலீஸும் அரசும் தலையிட்டது இல்லை. அவர்களின் பிரச்னையை அவர்களேதான் பேசித் தீர்த்துள்ளனர். இந்த விவகாரத்திலும் நல்ல முடிவு எடுப்பார்கள்'' என்று நழுவுகிறார்.

காங்கிரஸோ, பி.ஜே.பி-யோ கர்நாட​கத்தை எந்தக் கட்சி ஆண்டாலும், உண்மையில் மாநிலத்தையே ஆள்வது மடங்கள் என்ற இரும்புக் கோட்டைகள்​தான். மடங்களில் நடந்த விஷயங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. போலீஸ் விசாரணையில்தான் முழு உண்மை தெரியவரும்!

- இரா.வினோத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism