Published:Updated:

தலையில் அடித்த ஆசிரியர்... மனநிலை பாதித்த மாணவன்!

எங்கே செல்லும் இந்த பாதை?

தலையில் அடித்த ஆசிரியர்... மனநிலை பாதித்த மாணவன்!

எங்கே செல்லும் இந்த பாதை?

Published:Updated:
##~##

மாணவனின் திறன் அறிந்து மெச்சி மேலும் நல்லறிவு ஊட்டுவது ஆசிரியருக்கு அழகு. இதோ இங்கே ஓர் ஆசிரியரின் வெறியாட்டத்தால் மாணவனின் நிலை என்ன ஆனது, அவனது குடும்பம் என்ன கதியில் இருக்கிறது பாருங்கள்... 

சென்னை அயனாவரம் அரசு மனநல மருத்துவமனை வார்டு ஒன்றில் எதையோ வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தான் 16 வயது சிறுவன் அப்பாஸ் அலி. அவனுக்கு பக்கத்திலேயே அவனது அப்பா இஸ்மாயில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகன் பேசும் நிலையில் இல்லை. அப்பாதான் பேசினார். ''திண்டி​வனம் சர்க்கார் தோப்பு எங்க ஊரு. மொத்தம் மூணு குழந்தைங்க. மூணு பேருமே திண்டிவனம் தேசிய மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாங்க. இவன் மூத்தவன். அந்த ஸ்கூல்ல 12-வது படிச்சிட்டு இருந்தான். நல்லாப் படிப்பான். ஸ்கூல்ல 2-வது ரேங்க் எடுக்கிற பையன். எல்லா வாத்தியார்கிட்டயும் இவனுக்கு நல்ல பேருதான்.

தலையில் அடித்த ஆசிரியர்... மனநிலை பாதித்த மாணவன்!

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஸ்கூல்ல செய்முறைத் தேர்வு நடந்த நேரத்தில், பக்கத்துல இருந்த பையன் என் மகன்கிட்ட பேசியிருக்கான். இதனால, கோபமான அந்த ஸ்கூல் வாத்தியார் வெங்கட்ராமன், என் பையனை நெத்தியிலயும், பின் மண்டையிலயும் ஓங்கி அடிச்​சிருக்கார். சோகமா வீட்டுக்கு வந்த அவன் ராத்திரி முழுக்கத் தூங்கலை. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தான். கோபமாக் கத்த ஆரம்பிச்சான். அவன் செய்கையே வழக்கத்துக்கு மாறா இருந்தது. மறுநாள், மிலாடி நபி. பள்ளிவாசலுக்கு தொழுகைக்குப் போன இடத்துலயும் முறைதவறி நடந்துக்கிட்டான். 'உன் பையனுக்கு என்னாச்சுப்பா... இப்படி நடந்துக்க மாட்டானே?’னு அங்க வந்தவங்களும் என்கிட்ட கேட்டாங்க. அப்போதான் வாத்தியார் அடிச்சதுல நம்ம பையனுக்கு ஏதோ ஆயிடுச்சுனு புரிஞ்சுக்கிட்டேன். உடனே, டாக்டரைப் பார்த்தேன். எந்தப் பலனும் இல்லை. அந்த ஸ்கூலுக்குப் போய், 'அடிச்ச அந்த வாத்தியாரை அன்பா என் பையன்கிட்ட பேசச் சொல்லுங்க... அப்படியாவது என் பையன் குணமாகிறானானு பார்க்கலாம்’னு கெஞ்சினேன். பள்ளி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடிமறைக்கிறதுலதான் குறியா இருந்தது. யாரும் கண்டுக்கலை. அதனால, ப்ளஸ் டூ பொதுத் தேர்வையே என் பையனால எழுத முடியலை. பேராசிரியர் கல்யாணி அய்யா மூலமா போலீஸ்ல புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கோர்ட்டுக்குப் போனேன். என் பையன் மனநிலை மாறக் காரணம் என்னன்னு கூறும்படி திண்டிவனம் கோர்ட் ஆர்டர் போட்டது. இப்போ, இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கோம். இருபது நாளா இங்கதான் இருக்கோம். சைக்கிள்ல டீ வியாபாரம் செஞ்சு வாழ்க்கையை ஓட்டுறவன் நான். ரெண்டு மாசமா வேலைக்குப் போகலை. குடும்பத்தோட சென்னையில தங்கிச் சாப்பிடுற அளவுக்கு வசதியும் இல்லை. ரொம்பக் கஷ்டத்துல இருக்கேன். பையனோட ஒரு வருஷப் படிப்பும், வாழ்க்கையும்

தலையில் அடித்த ஆசிரியர்... மனநிலை பாதித்த மாணவன்!

வீணாப்போச்சு. என் பையனை நல்லபடியா என்கிட்ட குணமாக்கிக் கொடுத்துட்டாங்கன்னா போதும்'' என்று தழுதழுத்தவர், ''எம் புள்ளையோட இந்த நிலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மீதும், அந்த வாத்தியார் மேலயும் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கணும்'' என்று  வேண்டுகோள் வைத்தார்.

நாம் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தமிழகத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி அங்கே வந்து விசா​ரணை நடத்தினார். ''பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியளித்தார்.

தலையில் அடித்த ஆசிரியர்... மனநிலை பாதித்த மாணவன்!

இந்த விவகாரத்துக்காகப் போராடும் தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன், ''தமிழக வகுப்பறைகளில் தண்டனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறி இந்த மாணவனை அடித்தது மாபெரும் குற்றச்செயல். கல்வித் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை. இந்த மாணவனைக் குணப்படுத்தி இறுதி வரை படிக்கவைப்பதுடன், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது அரசின் கடமை'' என்றார் தீர்க்கமாக.

சம்பந்தப்பட்ட தேசியப் பள்ளித் தலைமை ஆசிரியர் குமாரதேவனிடம் பேசினோம். ''மாணவன் அப்பாஸ் அலி அருகில் உள்ள மாணவனுக்கு விடை சொல்லிக் கொடுத்திருக்​கிறான். இதனால் ஆசிரியர் வெங்கட்ராமன், அவன் முதுகில் தட்டிக் கண்டித்துள்ளார். அவன் மனநிலை பாதிப்படை​யும் அளவுக்கு  எதுவும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கடந்த மாதம் 16-ம் தேதியே இடைநீக்கம் செய்து​விட்டோம். மாணவனிடம் ஆசிரியரை மன்னிப்பு கேட்கவும் செய்துவிட்டோம்'' என்றார்.

மாணவனுக்கு சிகிச்சையளிக்கும் மருத்து​வர்களோ, ''ஆசிரியர் அடித்தபோது, மாணவன் பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்​கிறான். அந்தப் பயத்தில் இருந்து அவன் இன்னும் மீளவில்லை. தொடர்ந்து சிகிச்சை கொடுத்தால், அவனைப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்'' என்றனர்.

மாணவனிடம் ஆசிரியர் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? அந்த ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்படுவதால்தான், மாணவனின் மனநிலை சரியாகிவிடுமா? ஓர் ஆசிரியரின் துடுக்குத்தனத் தின் காரணமாக ஒரு மாணவனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதே?

- தி.கோபிவிஜய், நந்தகுமார்

படங்கள்: பா.கார்த்திக், டி.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism