Published:Updated:

''பண்ணையார்களும் இடைத்தரகர்களும்..''

திருச்சியில் திரிகொளுத்திய கார்த்தி சிதம்பரம்

''பண்ணையார்களும் இடைத்தரகர்களும்..''

திருச்சியில் திரிகொளுத்திய கார்த்தி சிதம்பரம்

Published:Updated:
##~##

வேட்டி, சட்டை மட்டுமல்ல... விட்டால் எதிர் கோஷ்டியினரின் கோவணத்தையும் உருவும் கலாசாரம் காங்கிரஸில் மட்டுமே உண்டு. இதோ லேட்டஸ்ட் கூத்து... 

மறைந்த காங்கிரஸ் நிர்வாகிகளின் படத் திறப்பு விழா என்ற பெயரில் திருச்சி மாவட்டத்துக்குள் அடிக்கடி ஆஜராகிக் கூட்டம் போட்டு, தங்கள் அணிக்கு ஆள் திரட்டி வந்தார் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். மறைந்த முன்னாள் எம்.பி-யான அடைக்கலராஜ் படத்திறப்பு விழா கடந்த வாரம் திருச்சியில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனையும், ஜி.கே.வாசனையும் வெளுத்து வாங்க... மீண்டும் ஆரம்பித்துள்ளது அக்கப்போர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சிக் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், ''நான்கு முறை எம்.பி-யாகவும் தமிழக காங்கிரஸின் துணைத் தலைவராகவும் இருந்து மறைந்த அடைக்கலராஜுக்கு, நியாயமாக தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் படத்திறப்பு விழா நடத்தியிருக்க வேண்டும். அவர்கள் நடத்தாமல் போனதால், நாம் நடத்துகிறோம். காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளராக இருந்து மரணித்த சுதர்சனத்துக்கும் படத் திறப்பு விழாவை நம் கட்சியின் மாநிலத் தலைமை நடத்தவில்லை. தமிழ்நாட்டில் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்தச் சொல்லி மத்திய நிதியமைச்சர் சொன்னாலும் கேட்பதில்லை. அவர்களுக்கு கூட்டம் போடுவது என்றால், அவ்வளவு தயக்கம்.  ஞானதேசிகனைப் பார்த்து ஒன்று கேட்க விரும்புகிறேன்... நீங்கள் தலைவரான பிறகு எத்தனை கூட்டங்கள் போட்டுள்ளீர்கள்? கூட்டம் போடாமல், பிரசாரம் செய்யாமல் கட்சியை எப்படி வளர்க்க முடியும்?

''பண்ணையார்களும் இடைத்தரகர்களும்..''

காங்கிரஸ்காரர்கள் இனி திருச்சி ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். திருச்சியில் காங்கிரஸ் கொடிகளை அகற்றியவர்களை அடித்து விரட்டிய பிறகு, தமிழகத்தில் எங்கேயும் ஒருவர்கூட காங்கிரஸ் கொடி, பேனர்கள் கிழிக்கவில்லை. பதிலடி கொடுத்ததால், எதிரிகள் அடங்கிவிட்டனர். இனி எங்காவது காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தினால், திருச்சி பாணியில் அடித்து விரட்டுங்கள். பயப்பட வேண்டாம்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை ஆழமான அறிக்கை வெளியிடவில்லை. உண்மை அறியும் குழுவை அனுப்பவில்லை. விமர்சனம் செய்யத் தயங்கும் ஓர் இயக்கம், கட்சியாக இருக்கவே தகுதியற்றது. ராகுல் காந்தியின் எண்ணம் ஈடேறவிடாமல், இங்குள்ள சில பண்ணையார்களும் இடைத்தரகர்களும் செயல்படுகின்றனர். நாம் கட்சிக்கு உள்ளேயும் நியாயத்துக்காகப் போராட வேண்டும். அப்போதுதான் கட்சியைக் காப்பாற்ற முடியும்'' என்று அதிரடி கிளப்ப... விசில் ஒலியில் அதிர்ந்தது அரங்கம்.

''சொந்தக் கட்சித் தலைமையை இப்படி வெளிப்படையாக விமர்சிப்பது சரிதானா? ஞானதேசிகன் என்ன செய்யவில்லை? நீங்கள் என்ன செய்தீர்கள்?'' போன்ற கேள்விகளுடன் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம்.

''திருச்சியில் நான் பேசியதில் எந்தத் தவறும் கிடையாது. இதைச் சொல்ல எனக்கு பயமும் இல்லை, கூச்சமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏதாவது ஒரு தலைவர் இறந்துவிட்டால், அந்தக் கட்சியினர் இரங்கல் கூட்டத்தை பெரிய அளவில் நடத்துவார்கள். அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதியே நேரில் சென்று கலந்துகொள்வார். நம்முடைய கட்சியில் அந்த வழக்கம் இல்லை. கட்சியின் பொருளாளராக பல ஆண்டுகள் இருந்த மூத்த தலைவர் சுதர்சனம் இறந்த பிறகும், மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமை எந்த ஓர் இரங்கல் கூட்டமும் நடத்தவில்லை.

காங்கிரஸ் கட்சி திராவிட கட்சிகளோடு போட்டி போட வேண்டும் என்றால், அவர்​களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. தமிழக அரசியல்படி சில விஷயங்களில் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும். இதில் காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது, செயல்படவில்லை என்று உண்மையை ஒப்பிட்டுத்தான் பேசினேன். இதில் காங்கிரஸ் தவறிவிட்டது, செயல்படவில்லை என்று உண்மையை ஒப்பிட்டுத்தான் பேசினேன். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே அதை ஏற்றுக்கொண்டனர்.

மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதுவரை அவர் பட்ஜெட் தாக்கல் செய்த ஒவ்வோர் ஆண்டும் தமிழக காங்கிரஸ் சார்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடத்துவது வழக்கம். அரசாங்க ரீதியாக நாங்கள் என்ன செய்துள்ளோம் என்று மக்களுக்குச் சொல்ல வேண்டிய முக்கியமான நிகழ்வு இது. இந்த ஆண்டு அந்தக் கூட்டத்தையே நடத்தாதது மாபெரும் தவறு. அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடத்தி, பட்ஜெட் விளக்க வேண்டிய நிலைமை நிதி அமைச்சருக்கு. இது நமது இயலாமைதானே என்றுதான் கேள்வி எழுப்பினேன்.

தமிழ்நாட்டில் இப்போது காங்கிரஸ் கமிட்டி என்பதே கிடையாது. எனக்கு தெரிந்தவரை தலைவர்கள்தான் இருக்கிறார்களே தவிர, நிர்வாகி​கள் என்ற கமிட்டியே இல்லை. சுதர்சனத்துக்குப் பிறகு இதுவரை பொருளாளர் என ஒருவரை நியமித்துள்ளார்களா? பொதுக் குழு என ஒன்றைக் கூட்டியுள்ளார்களா? அகில இந்தியக் கமிட்டி உறுப்பினர்களை அழைத்து கூட்டம் போட்டார்களா?  நான் சத்தியமூர்த்தி பவன் வருவதில்லை என்று கூறுகிறார்கள். என்னை சாப்பிடக் கூப்பிட்டால்தானே வர முடியும்? முதலில் கூட்டத்தைக் கூட்டச் சொல்லுங்கள். நான் வருகிறேனா, இல்லையா என்று பார்ப்போம். ஞானதேசிகன் செயல்பட வேண்டும். அவர் செயல்பட்டால் எனக்கு சந்தோஷம்!'' என்றார் அமைதியாக.

- தி.கோபிவிஜய், அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், பா.கார்த்தி

 ''ஓஹோ... கார்த்தி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளாரா?''

யுவராஜா பதிலடி

''பண்ணையார்களும் இடைத்தரகர்களும்..''

கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜா பதிலடி கொடுக்கிறார்.

''கார்த்திக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஞானதேசிகனை சந்தித்து, படத் திறப்பு விழாவுக்கு அழைத்திருக்க வேண்டும். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இருந்து மறைந்தவர்களில் எத்தனை பேர் இறுதிச் சடங்குக்கு கார்த்தி நேரில் சென்றார்? மாதத்தில் 20 நாட்கள் வெளிநாட்டில் இருப்பார். 10 நாட்கள்தான் இந்தியா வருவார். அதுவும் தொழிலுக்காகத்தான். பார்ட் டைம் அரசியல்வாதி அவர். திடீரென அவரது படம் போட்ட கட் அவுட்டுகள் ரோட்டில் தென்பட்டால், 'ஓஹோ.. கார்த்தி சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் போல’ என்று தெரிந்துகொள்ளலாம். ப.சிதம்பரத்தின் மகன் என்ற அடிப்படையைத் தவிர, அவரது பங்களிப்பு என்ன? தமிழகத்தில் இருக்கும் 84 ஏ.ஐ.சி.சி. உறுப்பினர்களில் அவரும் ஒருவர். அவர் இந்தக் கட்சிக்காக என்ன செய்தார்? ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது கூட்டம் பேசி இருப்பார். ஞானதேசிகன் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. அவர் தலைவராக வந்த பிறகுதான் தமிழ்நாடு காங்கிரஸைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களையும் ஒரே மேடையில் உட்காரவைத்து கூட்டங்கள் நடத்தினார். எனவே, ஞானதேசிகனைக் குறை சொல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவர் அரசியலில் இருக்கிறாரா? பிசினஸில் இருக்கிறாரா? அரசியலில் பிசினஸும் பிசினஸில் அரசியலும் செய்கிறாரா என்பதை அவர் முதலில் விளக்கட்டும்.

சென்னையில் சிதம்பரம் தலைமையிலும், கும்பகோணத்தில் வாசன் தலைமையிலும் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நேரத்தில் தீவிரமாக நடந்த மாணவர் போராட்டத்தால், ஒத்திவைக்கப்பட்டது. இந்த உண்மை தெரியாமல், கட்சி விவகாரத்தை பொது இடத்தில் பொறுப்பில்லாமல் பேசி, தன் தந்தையின் பெயரையும் சேர்த்துக் கெடுக்கிறார் கார்த்தி சிதம்பரம்'' என்றார் சூடாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism