Published:Updated:

பறக்காத அரசு விமானம்... விழுங்கும் கோடிகள்!

விமான வில்லங்கம்

பறக்காத அரசு விமானம்... விழுங்கும் கோடிகள்!

விமான வில்லங்கம்

Published:Updated:
##~##

விமானங்களை அதிக அளவில் பயன்​படுத்தி செலவு இழுத்துவைக்கும் அரசியல்வாதிகளைக் கேள்விபட்டிருக்​கிறோம். ஆனால், அரசு விமானத்தையும் ஹெலிகாப்டரையும் பயன்படுத்தாத காரணத்தால் இழப்பு​களை ஏற்படுத்தும் ஆட்சியாளர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தக் கொடுமை வேறு எங்குமில்லை... தமிழகத்தில்தான்! 

தமிழக அரசுக்கு சொந்தமாக ஒரு விமானமும் ஒரு ஹெலிகாப்டரும் இருப்பதே பலருக்கும் தெரியாது. காரணம், அந்த அளவுக்கு அவை பயன்பாட்டில் இல்லை. பயன்படுத்தப்படாமல் 'பராமரிப்பு’ என்ற பெயரில் அவை கோடிகளை விழுங்குகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை, 'ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு வாங்குகிறது. இந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் தமிழக அரசின் சின்னமான கோபுரச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கவர்னர், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி.களின் வசதிக்காகவும் அவசரத் தேவைக்காவும்தான் ஹெலிகாப்டரும் விமானமும் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் பொதுத் துறைதான் இவற்றைப் பராமரிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பறக்காத அரசு விமானம்... விழுங்கும் கோடிகள்!

1995-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முதன்முறையாக தமிழக அரசுக்கு விமானம் வாங்கப்​பட்டது. அமெரிக்கா நாட்டுத் தயாரிப்பான அந்த விமானத்தின் பெயர் 'செஸ்னா சைட்டேஷன்’. இந்த

பறக்காத அரசு விமானம்... விழுங்கும் கோடிகள்!

விமானத்தில் எட்டு பயணிகளும் இரண்டு விமானிகளும் ஒரு பராமரிப்பு எஞ்ஜினியரும் பயணம் செய்யலாம். இந்த விமானம் வாங்கப்பட்டபோது அதன் விலை 19.85 கோடி ரூபாய்.  

அடுத்து ஹெலிகாப்டர்... 1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் முதலில் ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டரை 1990-ம் ஆண்டு மேற்கு வங்காள அரசுக்கு, தமிழக அரசு விற்றுவிட்டது. மீண்டும் 1995-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 19.69 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. 10 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த அந்த ஹெலிகாப்டரைக் கொடுத்துவிட்டு, 2006-ம் ஆண்டு புதிய ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. இதுதான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் பெயர் 'பெல் 412’.

இனி செலவுகளைப் பார்ப்போம். இந்த விமானமும் ஹெலிகாப்டரும் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில்தான் நிறுத்தி​வைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாத வாடகை ஒரு லட்சம். விமானம், ஹெலிகாப்டர் வாங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை , விமான நிலைய வாடகை மட்டும் 1.25 கோடி ரூபாய்.  

அரசு விமானத்தையும் ஹெலிகாப்டரையும் ஓட்டும் பைலட்டுகள் இந்திய விமானப் படையில் இருந்துதான் தேர்வுசெய்யப்படுகிறார்கள். விமானத்தை ஓட்டுவதற்கு ஒரு பைலட்டும் ஹெலிகாப்டரை ஓட்டுவதற்கு இரண்டு பைலட்களும் உள்ளனர். விமானத்தை ஓட்டும் பைலட்களுக்கு அலவன்ஸ் எல்லாம் சேர்த்து மாதச் சம்பளம் ஒரு லட்சத்து 39 ஆயிரம். ஹெலிகாப்டரை ஓட்டும் பைலட்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சத்து 40 ஆயிரம் சம்பளம். எரிபொருளுக்கு மாதம் 3.40 லட்சம் ரூபாய் செலவாகிறது, 1995 முதல் 2013 வரை விமானத்துக்கும், ஹெலிகாப்டருக்கும் சேர்த்து 6 கோடியே 64 லட்சம் ரூபாய் எரிபொருளுக்காக செலவாகி இருக்கிறது.

விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக மட்டும் வருடத்​துக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகிறது. வாங்கப்பட்ட காலத்தில் இருந்து பராமரிப்புச் செலவு மட்டும் 12 கோடியே 80 லட்சம் ரூபாய் கரைந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்துதான் உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. கோடிகளில்தான் இவற்றின் விலை. இவற்றை வாங்கிய வகையில் ஆன செலவுகள் 14 கோடியே 18 லட்சம்.

அரசு ஹெலிகாப்டர் ஆங்காங்கே இறங்குவதற்காக தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஆன செலவு 19 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்.

கவர்னர், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி.கள்தான் அதிகமாக இதில் பயணம் செய்கிறார்கள். இதற்காக விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் ஆன ஒட்டுமொத்த செலவு 37 கோடியே 8 லட்சத்து 90 ஆயிரத்து 965 ரூபாய். விமானமும் ஹெலிகாப்டரும் வாங்குவதற்குக் கொடுத்த பணம் 41 கோடி. இப்போது கிட்டத்தட்ட அதே அளவுக்கு விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் தீனி போட்டிருக்கிறோம்.

இவ்வளவு கோடிகளை விழுங்கியிருக்கும் ஹெலிகாப்​டரும் விமானமும் எந்த அளவுக்​குப் பயன்பட்டிருக்​கிறது என்று கேட்டால் வயிறு எரியும். அரசு ஹெலிகாப்டர் 2003-ம் ஆண்டில் இருந்து இதுவரை 2,793 டிரிப் அடித்து மொத்தம் 2,796 மணி நேரம்தான் பறந்திருக்கிறது. அரசு விமானமோ 2003-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை  303 டிரிப் அடித்து 438 மணி நேரம் பறந்து இருக்கிறது. 2009 ஆண்டில் இருந்து இந்த விமானம் பறக்கவே இல்லை. 2008-ம் ஆண்டில் கவர்னராக இருந்த பர்னாலாதான் கடைசி​யாக இந்த விமானத்தில் பயணித்தவர். தமிழக வி.ஐ.பி-கள் தவிர ஆந்திரா, குஜராத் முதல்வர்கள், திரிபுரா கவர்னர், அத்வானி, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் போன்ற வி.ஐ.பி.கள் பயன்படுத்தியுள்ளனர்.

பறக்காத அரசு விமானம்... விழுங்கும் கோடிகள்!

மற்ற விமானங்களோடு கணக்கிட்டால் அரசு விமானமும் ஹெலிகாப்டரும் பறந்த தூரம் சொற்பமே. ஹெலிகாப்டர்களையும் விமானங்களையும் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு சில முறை வெறுமனே வானில் வட்டமடிக்கின்றன.

''விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி ஒரு விமானத்தை ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது இயக்கவேண்டும். ஹெலிகாப்டர்களை ஒரு மாதத்துக்கு 100 மணி நேரமாவது இயக்கவேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் வாடகைக்கு எடுப்பதே சிறந்தது. அதே போலத்தான் விமானங்​களும்!'' என்கிறார்கள் ஏர்போர்ட் அதிகாரிகள்.

எல்லாம் சரி... அரசு விமான​மும், ஹெலிகாப்டரும் இருந்தும், முதல்வர் ஜெயலலிதா அதை முழுமையாகப் பயன்படுத்துவது இல்லை. தனியார் ஹெலிகாப்ட​ரையே அதிகம் பயன்படுத்துகிறார். சுவஜாஸ் ஏர்சார்ட்டர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் அரசு அலுவலுக்காக கடந்த ஆண்டு ஜெயலலிதா பறந்த வகையில் 18 லட்சத்து 26 ஆயிரத்து 974 ரூபாய் செலவு.

இது எப்படி இருக்கு?

- எம்.பரக்கத் அலி

படங்கள்: கே.ராஜசேகர், சு.குமரேசன்

 விமானம் விற்று ஆம்புலன்ஸ்!

செஸ்னா அரசு விமானத்தின் மீது விமர்சனங்களும் உண்டு. 1991-1996 ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்து 96-ல் தி.மு.க. பொறுப்புக்கு வந்தது. அப்போது இந்த விமானம் தொடர்பாக சட்டசபையில் விவாதம் வந்தது. 'ஆடம்பரச் சின்னமாக இருக்கும் அரசு விமானத்தைப் பராமரிக்க அதிக செலவாகிறது. அதனால், விமானத்தை விற்றுவிட்டு ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்’ என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி சொன்னார். ஆனால், விமானத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் விமானம் யாருக்கும் பயன்படாமல் வெறுமனே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசின் ஹெலிகாப்டரில் அடிக்கடி பயணம் செய்தார்.

 கொலை வழக்கில் விமானம்!

சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணையில் அரசின் செஸ்னா விமானத்தின் பங்களிப்பு முக்கியமானது. அரசு விமானத்தில் வி.வி.ஐ.பி-களும் அவர்களது பாதுகாப்பு அதிகாரிகளும்தான் பயணம் செய்வார்கள். ஆனால், முதன்முறையாக ஒரு போலீஸ் அதிகாரிக்கு விமானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. சங்கர்ராமன் கொலை வழக்குக்காக எஸ்.பி. பிரேம்குமார் இந்த விமானத்தில் பறந்தார். ஆந்திராவின் மெகபூர் நகரில் இருந்த ஜெயந்திரரை நள்ளிரவில் கைதுசெய்து இந்த விமானத்தில்தான் சென்னைக்கு அழைத்துவந்தார். வழக்கின் முக்கியக் குற்றவாளியான அப்புவை ஆந்திராவில் இருந்து கைதுசெய்து அழைத்துவந்ததும் இந்த விமானத்தில்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism