Published:Updated:

எஃப்.ஐ.ஆர். போடவே 15 மாதம் ஆச்சு!

கடமலைக்குண்டு வசந்தி விவகாரம்..

எஃப்.ஐ.ஆர். போடவே 15 மாதம் ஆச்சு!

கடமலைக்குண்டு வசந்தி விவகாரம்..

Published:Updated:
##~##

தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய கொடுமை இது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் இரண்டு பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு 15 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. 

கடமலைக்குண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்தி என்ற பெண், தன்னை இரண்டு போலீஸ்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று ஜூ.வி-யிடம்தான் முதன்முதலில் கண்ணீர் வடித்தார். அதை, 8.7.12 தேதியிட்ட இதழில் அம்பலப்​படுத்தினோம். ஒரு பெண் முதல்வராக இருக்கும் ஆட்சியில் ஒரு பெண்ணுக்கு காவல் நிலையத்தில் ஏற்பட்ட அவமானம் விரைவில் துடைக்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தோம். காலம் கடந்து இப்போதுதான் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் சிறப்பு ஆய்வாளர் அமுதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஃப்.ஐ.ஆர். போடவே 15 மாதம் ஆச்சு!

இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவுசெய்யவைக்கவே வசந்தி கடுமையாகப் போராடினார். இதனால், அவர் சந்தித்த கொலை மிரட்டல்கள் ஏராளம். மிரட்டலுக்குப் பணியாததால் ஏராளமாகப் பணம் தருவதாகவும் ஆசை காட்டிப் பார்த்தது அந்த அதிகாரக் கும்பல். வசந்தி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால்... நீதிமன்றம், மக்கள் மன்றம் என்று நடையாய் நடந்து முதல் கட்ட வெற்றியை அடைந்துள்ளார்.

எஃப்.ஐ.ஆர். போடவே 15 மாதம் ஆச்சு!

கடமலைகுண்டு காவல் நிலையத்​தில் 2012 பிப்ரவரி 11-ம் தேதி வசந்தி பலாத்காரம் செய்யப்பட்டார். நடந்ததை வெளியில் சொன்னால் விபரீதம் ஆகிவிடும் என்று வசந்தியை காவல் நிலையத்திலேயே மூன்று நாட்கள் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததோடு... வசந்தி மீதே பொய் வழக்குப் போட்டு, நிலக்கோட்டை, பெரியகுளம், மதுரை, திருச்சி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று துன்பப்படுத்தினர். இதையும் 'என்ன செய்யப்போகிறார் முதல்வர்?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பதிவுசெய்திருந்தோம். தொடர்ந்து இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்துப் பதிவுசெய்து வந்தோம்.

மதுரை எவிடென்ஸ் அமைப்பின் உதவியோடு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார் வசந்தி. அந்த வழக்கில், தேனி மாவட்ட எஸ்.பி-யான பிரவின்குமார் அபினபு, நீதிபதியின் கடும் கண்டனத்துக்கு ஆளானார்.இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டார் நீதிபதி. இந்த

எஃப்.ஐ.ஆர். போடவே 15 மாதம் ஆச்சு!

உத்தரவைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.எஸ்.பி-யான ராசாத்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், வேல்முருகன், சப் இன்ஸ்​பெக்டர் தேவி ஆகியோர் கடந்த 25 நாட்களாக விசாரித்து, முக்கிய ஆதாரங்களைத் திரட்டினர்.

கடந்த 22-ம் தேதி வசந்தியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட போலீஸ்​காரர்களின் போட்டோக்களைக் காட்டியபோது, வசந்தியின் கடைசி மகன், 'அம்மா... உன்னை அடிச்சவன், அம்மா... உன்னை அடிச்சவன்’ என அந்தப் போட்டோவைப் பார்த்து அலறியிருக்கிறான். இதையடுத்து, தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வசந்தியை அழைத்துச் சென்று, ஏழு மணி நேரம் விசாரித்தனர். அன்று மாலையே, கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார், சிறப்பு ஆய்வாளர் அமுதன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

கற்பழிப்பு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்​படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட 11 பிரிவுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சட்டம், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகள் என மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் சிறப்பு ஆய்வாளர் அமுதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.

வசந்திக்காக சட்டப் போராட்டம் நடத்திவரும் எவிடென்ஸ் கதிர், ''ஒரு பெண்ணின் நீதிப் போராட்டத்துக்கு வழக்குப் பதிவுசெய்யவே 15 மாதங்கள் ஆகியிருக்​கின்றன. பெண் முதல்வராக இருக்கும் இந்த மாநிலத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், ஒரு சாதாரண போலீஸ்காரர் இறந்தாலே பக்கம் பக்கமாக இரங்கல் செய்தி எழுதுகிறார். ஆனால், ஒரு பெண்ணுக்கு கொடுமை நடந்திருந்தும்... பத்திரி​கைகள், ஊடகங்கள் இவ்வளவு தூரம் எழுதியும், எதுவும் நடக்காததுபோல் அமைதியாக இருக்கிறார்'' என்று வருத்தப்பட்டார்.    

வசந்தியிடம் பேசினோம். ''என்னை விசாரிச்ச அதிகாரிங்க, 'உண்மையைப் பயப்படாமச் சொல்​லும்மா’னு கரிசனமாக் கேட்டாங்க. அவங்ககிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன். இனி, என்னை மாதிரி யாரும் இதுபோல கொடுமையை அனுபவிக்கக் கூடாது. நானே கடைசியா இருக்கணும்'' என்றார்.

வழக்குப் பதிவுசெய்ததோடு கடமை முடிந்து​விடவில்லை. உண்மைக் குற்றவாளிகள் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் போலீஸ் துறையைக் கையில் வைத்துள்ள முதல்வருக்கு இருக்கிறது.

- சண்.சரவணக்குமார்