Published:Updated:

ஜெயலலிதாவும் கருணாநிதியும் வரமாட்டார்கள்!

படபடக்கும் மேதா பட்கர்

ஜெயலலிதாவும் கருணாநிதியும் வரமாட்டார்கள்!

படபடக்கும் மேதா பட்கர்

Published:Updated:
##~##

மேதா பட்கர், 58 வயதிலும் அலைந்து திரிந்து இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் பெண் போராளி. மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரண்டு நாள் பயணமாக கடந்த 22-ம் தேதி காலை சென்னை வந்திருந்தார். இரண்டே நாட்களில் ஏராளமான பிரச்னைகளை விசாரித்துச் சென்றார். 

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராகச் சென்றது மணப்பாக்கத்துக்கு. 2007-ம் ஆண்டில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1069.99 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிடப்​பட்டது. அதில் பாதிக்கப்பட்டுள்ள கெருகம்பாக்கம், தரப்பாக்கம், மணப்பாக்கம், கோவூர் ஆகிய பகுதிகளில் உள்ள 947 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்தார். அவர்களின் குறைகளைக் கேட்டு, தன்னுடைய டைரியில் குறித்துக்கொண்டார். அந்த மக்களிடம், ''நான் இங்கே தேவையே இல்லை. உங்கள் நிலம், உங்களுக்கு மட்டும்தான் சொந்தம். என்னை விட நீங்கள்தான் சிறந்த போராளிகள். உங்கள் நிலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் வரமாட்டார்கள்!

உங்களைவிட்டுப் போகாது. போராட்டத்தை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இங்கே வர மாட்டார்கள். உங்கள் கவலைகளைக் கேட்க மாட்டார்கள். உங்களுக்கு நீங்கள்தான். அதை உணர்ந்தாலே போதும்'' என்று நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தார். அங்கிருந்து கிளம்பியவர், சோழிங்கநல்லூரில் இருக்கும் காந்தி நகருக்குச் சென்றார்.

மதியம் 12.30 மணி. கொளுத்தும் வெயில். விரிந்து பரந்த இடத்தில் இருக்கும் குடிசைகளை நடந்தே சென்று நேரில் பார்த்தவர், ''ஊரில் நிறைய மரங்களை நடுங்கள். வெயில் காலத்தில் நிழல் தரும்'' என்றபடியே ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தார். அங்கே கூடிய அந்த ஏரியா பெண்கள், ''சுத்தமான குடிதண்ணீர் இல்லை. தெரு விளக்குகள்  எரிவதே இல்லை. சரிசெய்யவும் இங்க ஆள் இல்லை'' என அடுக்​கடுக்காகக் குறைகளைச் சொல்ல, ''எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க? ரேஷன் கார்டு இருக்கிறதா? பைப் எங்கிருக்கிறது? என்ன வேலை, எவ்வளவு சம்பளம்?'' என அத்தனை தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். மறக்காமல் அதைக் குறிப்பெடுத்தும் கொண்டார்.

''நீங்கள் முதலில் ஒற்றுமையாக இருங்கள், ஒருவருக்கொருவர் உதவுங்கள். யார் உங்களைக் காலிபண்ணச் சொன்னாலும் திருப்பிக் கேள்வி கேளுங்கள். குடிசைகளை ஒழிப்போம்னு மொத்தமா மக்களை ஒழிக்கப் பார்க்கிறார்கள் போல இருக்கிறது'' என்று சிரித்தார். கண்ணகி நகர், அடையாறு குப்பம் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் மேதா.

பிற்பகலில் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்த மேதா, மக்கள் பிரச்னைகளை அவரிடம் விவரித்தார். அவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட கவர்னர், ''என் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லாப் பணிகளையும் உடனே செய்கிறேன். முதல்வரிடமும் இதுபற்றி உடனே அறிக்கை கேட்கிறேன்'' என்று வாக்குறுதி கொடுத்தார்.

மறுநாள்  காலை 8 மணிக்கு மரக்காணத்துக்குச் சென்றார். அங்கே கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்றார். அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்​பட்டுள்ளதால் மக்களைச் சந்திக்க போலீஸ் அனுமதிக்கவில்லை.

''நான் கூட்டமாகச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் அமைதியை ஏற்படுத்தவே போகிறோம். எங்களால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது'' என்று சொல்லி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். கொளுத்தப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டவர்... கூடியிருந்த மக்களிடம், ''என்ன பிரச்னை வந்தாலும் உங்களது இடத்தைவிட்டுப் போகாதீர்கள். கலவரத்தால் உங்களது குழந்தைகள் மனதளவில் பாதிப்படைந்திருப்பார்கள். தினமும் ஒரு மணி நேரம் அவர்களுடன் பேசுங்கள். எல்லாரும் ஒற்றுமையாக இருந்து போராடுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களது பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறோம்'' என்று சொன்னார்.

அன்று மதியம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்திய மேதா பட்கரிடம் பேசினோம். ''நகரத்தில் வாழும் மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான வசதிகளையும், அடிப்படை தேவை அனைத்தையும் அங்கேயே செய்து தர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் 'ராஜிவ் ஆவாஸ் யோஜனா’. அந்தத் திட்டத்தை யாரும் மதிப்பது கிடையாது. இந்த மக்களுக்காக நான் தொடர்ந்து போராடப்போகிறேன். முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டேன். கிடைக்கவில்லை. என் போராட்டம் முதல்வரின் கவனத்துக்குப் போயிருக்கும் என நம்புகிறேன்'' என்று நிதானமாகப் பேசினார்.

'போராடுவோம் போராடுவோம்... வெற்றி பெறும் வரை போராடுவோம்!’- செல்லும் இடங்களில் எல்லாம் இப்படித் தமிழிலேயே உரக்க ஒலிக்கிறது மேதாவின் குரல்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன், ஜெ.நந்தகுமார்

படம்: தே.சிலம்பரசன்