Published:Updated:

பதவிஉயர்வை சரண்டர் செய்கிறேன்!

வெடிக்கும் வெள்ளத்துரைFollow-up

பதவிஉயர்வை சரண்டர் செய்கிறேன்!

வெடிக்கும் வெள்ளத்துரைFollow-up

Published:Updated:
##~##

தங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் வீரப்பன் வேட்டையில் பணியாற்றிய சிறப்பு அதிரடிப் படையின​ரால் தடைபட்டு இருப்பதாக 1979-ம் வருட பேட்ஜ் எஸ்.ஐ-க்களின் ஆதங்கத்தை கடந்த 22.5.13 தேதியிட்ட ஜூ.வி-யில் 'வீரப்பன் வேட்டை போலீஸாருக்காக எங்களை புறக்கணிப்பதா?’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். இது சம்பந்தமாக வீரப்பன் விவகாரத்தில் பதவிஉயர்வு பெற்ற சிறப்பு அதிரடிப் படையினர் தரப்பில் இருந்து நம்மிடம் சிலர் பேசினர். 

''1979-ல் எஸ்.ஐ. பணிக்கு வந்தவர்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வானவர்கள். இப்படித் தேர்வானவர்களுக்கு சீருடைப் பணி​யாளர் தேர்வாணையத்தில் ஒரு தேர்வு நடத்தி, அதில்  எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் சீனியாரிட்டி கணக்கிடப்பட்டது. ஆனால், 1979-ம் ஆண்டு பேட்ச் எஸ்.ஐ-க்களில் ஒரு பிரிவினர் இந்த மதிப்பீட்டு முறையை எதிர்த்து, கோர்ட்டுக்குப் போனார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதவிஉயர்வை சரண்டர் செய்கிறேன்!

டி.என்.பி.எஸ்.சி. மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தங்களுக்கு சீனி​யாரிட்டி வழங்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். அந்த வழக்கில், 'சீனியாரிட்டியை முடிவுசெய்யும் விவகாரத்தில் அரசே தகுந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்’ என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வந்தது.

ஜெயலலிதா அறிவித்த முடிவு என்பதாலோ என்னவோ கடந்த தி.மு.க. ஆட்சியில், 'வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்தவர்களுக்கு ஸ்பெஷல் சீனியாரிட்டி

பதவிஉயர்வை சரண்டர் செய்கிறேன்!

நிர்ணயிக்கத் தேவை இல்லை’ என்று ஒரு ஆர்டர் போட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். தி.மு.க. அரசின் உத்தரவை எதிர்த்து எங்களில் சிலர் நீதிமன்றத்துக்குப் போனார்கள். நீதிமன்றமோ, 'வீரப்பன் ஆபரேஷன் என்பது தனிமனித சாதனை அல்ல. அது பலரின் கூட்டு முயற்சி. எனவே அதற்காக பதவிஉயர்வு தேவை இல்லை’ என்று தீர்ப்பு அளித்தது.

அ.தி.மு.க. அரசு மீண்டும் பொறுப்பேற்ற​தும், 'வீரப்பன் தேடுதல் வேட்டையில் பணியாற்றிய சிறப்பு அதிரடிப் படை வீரர்களுக்கு பதவிஉயர்வு அளிப்பதற்கு சீனியாரிட்டி ஃபிக்ஸ் பண்ணலாம்’ என்று உத்தரவு வந்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, 1987 பேட்ச் எஸ்.ஐ-க்கள் நீதிமன்றம் போனார்கள். அரசின் உத்தரவை அமல்படுத்தினால், தங்களில் 17 பேருக்குப் பதவிஉயர்வு தள்ளிப்போகும் என்பது அவர்களின் வாதம். அவர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையில், 'வீரப்பன் தேடுதல் வேட்​டையில் ஈடுபட்ட அனைவருக்கும் மற்ற தகுதிகளைக் கணக்கில்கொள்ளாமல் சிறப்புச் சலுகையாக பதவிஉயர்வு வழங்கியதே தவறு’ என்று நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. உண்மை இப்படி இருக்க, எங்களால்தான் தங்களது பதவிஉயர்வு தடைபட்டிருப்பதாக 1979 பேட்ச் எஸ்.ஐ-க்கள் குறைபட்டுக்கொள்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர் இருந்தனர். அவர்களுக்குப் பதவிஉயர்வுகள் வழங்கப்பட்டதில் ஏகப்பட்ட முறைகேடு நடந்திருப்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. அதிகாரிகள் வீட்டில் சமையல் வேலை பார்த்தவர்களும் வேறு சில இடங்களில் பணியில் இருந்தவர்களும் பதவிஉயர்வுப் பட்டியலில் திணிக்கப்பட்டது உண்மை. அதற்காக உண்மையிலேயே களத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்புகளை மறுப்பதும், அவர்கள் மீது வீண் பழி போடுவதும் முறையாகாது'' என்று வேதனைப்பட்டனர்.

வீரப்பன் வேட்டையால் பதவிஉயர்வு பெற்றவர்​களில் இப்போது மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருக்கும் வெள்ளத்​துரையும் ஒருவர். அவரிடம் பேசினோம். ''சிறப்பு அதிரடிப் படை வீரர்கள்தான் மற்றவர்களின் புரமோஷனுக்குத் தடை​யாக இருக்கிறார்கள் என்பது தவறான தகவல். வீரப்பன் தேடுதல் வேட்டையில் எங்களுடைய பணி என்ன என்பது முதல்வருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் எங்களுக்கு பதவிஉயர்வு கொடுத்​தார். அரசு எங்களுக்கு கொடுத்த பணியை கடும் சிரமங்களுக்கு இடையில் செய்துமுடித்தோம். அதற்காக அரசு எங்களுக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்தது. அதையே சிலர் கேள்விக்குறியாக்குவதால் அரசு கொடுத்த பதவிஉயர்வை சரண்டர் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய பேட்ச்சுக்கு எப்போது பதவிஉயர்வு கிடைக்கிறதோ, அதே சமயத்தில் எனக்கும் கிடைத்தால் போதும்'' என்றார் ஆதங்கத்துடன்.

இது ஒரு பக்கம் இருக்க, 'வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்​களுக்கு அரசு கொடுத்திருக்கும் சலுகைகளையும் பதவி​உயர்வையும் திரும்பப்பெற வேண்டும்’ என்று நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.

மரணத்துக்குப் பிறகும் தொடர்கிறது வீரப்பன் விவகாரம்!

- குள.சண்முகசுந்தரம்

படம்: எஸ்.சாய் தர்மராஜ்