Published:Updated:

முதலீட்டாளர் மாநாடு பெயரில் மோசடி! - அ.தி.மு.க-வை குறிவைக்கிறதா ரூ.33 கோடி வழக்கு?

எஸ்.மகேஷ்

சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மோசடிப் புகார் சில ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன்பின்னணியில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோகித், ரீனா
ரோகித், ரீனா

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 33 கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் இந்திய செயல் அலுவலராக ராஜீவ் பிரதன் பணியாற்றுகிறார். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``எங்கள் நிறுவனத்தை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோகித் ரபீந்திரநாத், அவரின் மனைவி ரீனாநாத், மகன் மானிக்நாத் ஆகியோர் தொடர்புகொண்டனர். அப்போது அவர்கள், வெளிநாட்டில் தங்களது நிறுவனங்களுக்கு நல்ல ஆர்டர் இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பி, பல தவணைகளில் வங்கி மூலம் 33 கோடி ரூபாயை சம்பந்தப்பட்டவர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிப்போர்ட்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிப்போர்ட்

51 சதவிகித ஷேரையும் எங்கள் நிறுவனம் பெற்றது. ஆனால், பணத்தை முதலீடு செய்தபிறகுதான் உண்மை தெரிந்தது. அதாவது, போலியான நிறுவனங்களிலும் தங்களின் சொந்த வங்கிக் கணக்குகளிலும் 33 கோடி ரூபாயை மாற்றம் செய்து எங்கள் நிறுவனத்தை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த சில ஆண்டுகளாக விசாரித்துவருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராஜீவ் பிரதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த வழக்கு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் விசாரித்தபோது சில உண்மைகள் தெரியவந்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ராஜீவ் பிரதன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோகித் ரபீந்திரநாத், அவரின் மனைவி ரீனாநாத், இவர்களின் மகன் மானிக் நாத் மற்றும் ரங்கசாமி சுகுமாறன், லதா விஜயகுமார், ஷேஷாதரி திருமலை, ராஜாமணி குமாரவேல் ஆகிய 7 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 30.11.2017 முதல் விசாரணை நடந்துவருகிறது.

Representational image
Representational image

விசாரணையில் ரோகித் ரபீந்திரநாத் என்பவர் புகார்தாரரிடம் பணம் பெறுவதற்கு முன், சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அலுவலகத்தில் 22.1.2014-ம் தேதி 41 பக்கங்கள் கொண்ட மதிப்பீட்டு அறிக்கை போடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 37-வது பக்கத்தில் சில மாற்றங்கள் செய்து தென்னிந்திய செயல் இயக்குநர் கேமுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது" என்றார்.

புகார் கொடுத்த ராஜீவ் பிரதன் தரப்பில் பேசியவர்கள், ``தமிழக அரசு நடத்தும் முதலீட்டாளர் மாநாட்டில் எங்கள் நிறுவனத்தை பங்கேற்க வைப்பதாக ரோகித் ரபீந்திரநாத் கூறினார். அதை நம்பி எங்கள் நிறுவனத்திலிருந்து கேம், சென்னை வந்தார். அவரை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலரும் கேமிடம் பேசியுள்ளனர். அதன்பிறகுதான் சட்டப்படி நாங்கள் முதலீடு செய்தோம். ராஜீவ் பிரதன் கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தபிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Representational image
Representational image

அதுதொடர்பாக விசாரித்தபோது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் தரப்பு ரோகித் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்துவருவது தெரியவந்தது. இதுகுறித்து முதல்வருக்கு வேண்டப்பட்ட ஒருவரின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது நீங்கள் புகார் கொடுத்தவர்கள் பெரிய இடம் என்று பதில் கிடைத்தது. இதனால்தான் சட்டரீதியாக போராடிவருகிறோம். இதற்கிடையில் பணத்தைக் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதற்கு எங்கள் நிறுவனத்தின் சேர்மன் சம்மதிக்கவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் ஆர்வம் காட்டுகின்றனர். சென்னையில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளைச் சந்தித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக மட்டுமே சொல்கின்றனர். ஆனால், 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆருக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு, ``மேலிட செல்வாக்கு காரணமாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுவருகிறது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

ரோகித் ரபீந்திரநாத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சரணிடம் கேட்டபோது, ``கம்பெனியில் இரண்டு ஷேர் ஹோல்டர்ஸ் பிரச்னை தொடர்பாக வழக்கு நடந்தது. இந்த வழக்கிலிருந்து நான் விலகிவிட்டேன்" என்றார் சுருக்கமாக.

எப்.ஐ.ஆர் நகல்
எப்.ஐ.ஆர் நகல்

ரோகித் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``லண்டன் கம்பெனி குறித்த முக்கிய தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளோம். இந்த வழக்கை சட்டரீதியாக நாங்கள் சந்தித்துவருகிறோம். மேலும், இந்த வழக்கில் யாருடைய தலையீடும் இல்லை" என்றனர்.

ரோகித் ரபீந்திரநாத் மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞரை தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.