Published:Updated:

`ஒரே மாதத்தில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது!’- கள்ளச்சாராயத்துக்கு எதிராக அரியலூர் போலீஸ் அதிரடி

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

அரியலூர் மாவட்டத்தில்தான் கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் அதிகப் பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரியலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 6 பேரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறது காவல்துறை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 33 பேரை இவ்விவகாரத்தில் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல்
கள்ளச்சாராயம் காய்ச்சுதல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. தினமும் மது குடித்துப் பழகியவர்கள், அதை மறக்க முடியாமல் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். போதைக்காக, கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் சானிடைஸரைக் குடித்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு கிராமங்களில் உள்ள காட்டுப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகிறார்கள். அதனை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கிவருகிறார்கள் காவல்துறையினர்.

அந்த வகையில், அரியலூர் மாவட்டம் வடுக பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், சில்லக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் அம்மன்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் அனைவரும் சில்லகுடி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் நேரில் சென்று சோதனை செய்ததில் 200 லிட்டர் பேரலில் சுமார் 400 லிட்டர் சாராய ஊரல் சாராயத்தைக் கைப்பற்றியதோடு 4 நபரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சி கைது செய்யப்பட்டவர்கள்
கள்ளச்சாராயம் காய்ச்சி கைது செய்யப்பட்டவர்கள்

அதனைத்தொடர்ந்து ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குரவன் குட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், சுப்புராஜ் ஆகியோர் டாஸ்மாக் சரக்குகளைக் கள்ளத்தனமாக மற்றும் சட்ட விரோதமாக ஆண்டிமடம் டு விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறத்தில் விற்பனை செய்வதை அறிந்த ஆண்டிமடம் போலீசார் 837 மது பாட்டில்களைக் கைப்பற்றியதோடு இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சட்டத்திற்குப் புறம்பாகக் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், ஊரல் போடுதல் மற்றும் மதுபானங்களைக் கள்ளத்தனமாகப் பதுக்கி விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடக் கூடாது என எஸ்.பி சீனிவாசன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். அத்தோடு மீண்டும் சட்டத்திற்கு எதிரான வேலையில் நடந்துகொண்டால் கண்டிப்பாகக் குண்டர் சட்டம் பாயும் எனத் தெரித்ததோடு அதற்கென ஒரு டீமையும் அமைத்தார்.

அரியலூர் எஸ்.பி சீனிவாசன்
அரியலூர் எஸ்.பி சீனிவாசன்

அந்த டீம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் கடந்த மாதத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 6 நபர்கள் சேர்த்து மொத்தம் 33 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களை விட அரியலூர் மாவட்டத்தில்தான் கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் அதிகப் பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு