Published:Updated:

இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன தவறு செய்தது?

இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன தவறு செய்தது?

##~##

''என் குழந்தையைக் கருணைக் கொலை செய்யுங்கள்'' என்று, கன்னியாகுமரி கலெக்டரிடம் மனுக் கொடுத்துத் திடுக்கிடவைத்தவர்கள் டென்னிஸ் குமார் தம்பதி. 11 மாதக் குழந்தை டேனி ஸ்டெனோவின் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்திருந்தனர். நிறைய முடியுடன் அழகாக இருந்தது குழந்தை. இந்தக் குழந்தையையா கருணைக் கொலைசெய்ய அனுமதி கேட்டனர்? 

நடந்தது என்ன?

குழந்தையின் தாய் மேரி சுஜா சொல்கிறார். ''எங்க ஊர் குழிக்கோடு என்ற கிராமம். நான் தொடக்கப் பள்ளியில் டீச்சர். அவர் (டென்னிஸ் குமார்) கூலி வேலை செய்றார். கருத்தரித்த நாளில் இருந்து மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் செக்கப் செஞ்சுட்டு இருந்தோம். குழந்தை நல்லா ஆரோக்கியமா இருக்குனு சொன்னாங்க. போன வருஷம் ஜூன் 4-ம் தேதி செக்கப் செய்யப் போனப்ப, 'குழந்தை பிறக்க ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி  வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. ஆனா, அன்னைக்கு

இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன தவறு செய்தது?

ராத்திரியே வலி தாங்க முடியாம 2 மணிக்கு திரும்பவும் அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகிட்டோம். எனக்கு ரத்தப்போக்கு நிற்கவே இல்ல. உயிர் போகும் அளவுக்கு வலி.

நாங்க போனப்ப மருத்துவமனையில் டாக்டர்கள் யாருமே இல்ல. நர்ஸ் மட்டும்தான் இருந்தாங்க. நான் வலியால துடிச்சுட்டு இருந்தும், டாக்டர்களுக்குத் தகவல் போய் அவங்க வர்றதுக்கு 4 மணி ஆகிருச்சு. 5 மணிக்கு மேல்தான் அறுவைசிகிச்சை தொடங்கினாங்க. சிசேரியன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. எங்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம்'' என்று நிறுத்தினார்.

மறுநாள் காலை விடிந்தது. ஆனால், அவர்​களுக்கு மட்டும் விடியவே இல்லை.

''குழந்தையை உடனே ஐ.சி.யு. வார்டுக்கு மாத்திட்டாங்க. அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்னு குழந்தையை எடுத்துட்டுப் போனாங்க. நான் குழந்தையை முழுசா பார்த்து கையில் தூக்கிக் கொஞ்சுறதுக்கே ரெண்டு நாள் ஆகிருச்சு. குழந்தை நலமா நார்மலா இருக்கிறதா, பரிசோதனை செய்த டாக்டர்கள் சொன்னாங்க. ஆனா, ரெண்டு நாள் கழிச்சு குழந்தை சுயநினைவு இல்லாம இருந்தது. பதறிப் போய் டாக்டர்கள்கிட்ட சொன்னோம். பரிசோதனை செஞ்சவங்க, அவனுக்கு என்ன ஆச்சுனு சரியா சொல்லலை. திரும்பவும் கால் எல்லாம் மரத்து, சுயநினைவு இல்லாமப் போனான். அப்பதான், 'குழந்தை பிறக்கும் முன் தொப்புள் கொடி பிரிந்து இருந்ததால், கிருமித்தொற்று ஏற்பட்டுருச்சு’னு சொன்னாங்க. டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்கு வந்த பிறகும், அடிக்கடி சுயநினைவு இல்லாமலே இருந்தான். திடீர்னு அவனுக்கு வலிப்பும் வர, எங்களுக்கு உயிரே போயிடுச்சு.  

திரும்பவும் பல டெஸ்ட்கள் எடுத்தாங்களே தவிர, எதுவும் சரியாகலை. இவ்வளவு நடந்த பிறகும் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம, 'குழந்தை ஆரோக்கியமாதான் இருக்கு’னு அந்த மருத்துவ​மனையில் சொன்னாங்க. 'நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் அளவு சரியில்லை. சரியாக் கொடுத்தா, எல்லாம் சரியாகிடும்’னு சொன்னாங்க. அவங்க திரும்பவும் பரிசோதனை செய்யும்போதே, அடிக்கடி வலிப்பு வந்தது. நாங்க பொறுமை இழந்து சண்டை பிடிச்ச பிறகுதான், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போங்கனு சொன்னாங்க. அங்கு எம்.ஆர்.ஐ. மற்றும் இ.இ.ஜி டெஸ்ட் எடுத்தவங்க, குழந்தையின் பின்னந்தலையில் பாதிப்பு இருப்பதாகச் சொன்னாங்க. சரியான சிகிச்சை இல்லாததால், பார்வை நரம்பில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு இருக்குனு சொன்னாங்க. அவங்க சொன்னபடி மருந்துகள் கொடுத்தோம். ஆனா, எந்த முன்னேற்றமும் இல்லை. பரிசோதனை செஞ்ச எல்லா டாக்டர்களுமே, 'குழந்தை பிறந்தப்ப சரியான சிகிச்சை அளிக்கலை. அதில்தான் ஏதோ பிரச்னை’னு சொன்னாங்க. சிகிச்சை அளிச்ச மருத்துவமனையில் கேட்டதற்கு, 'உங்களால் என்ன பண்ண முடியுமோ... பண்ணிக்கோங்க’னு அலட்சியமா சொல்றாங்க. சாதாரணக் கூலித் தொழிலாளிகள்தானே... என்ன பண்ண முடியும்னு நினைக்கிறாங்க'' என்றவர், கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டார்.

''குழந்தை இதுவரை எங்களைப் பார்த்து சிரிச்​சது இல்ல. கழுத்து சரியா நிக்க மாட்டேங்குது. அடிக்கடி வலிப்பு வருது. கண்பார்வைப் பற்றி இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுதான் சொல்ல முடியும்னு டாக்டர்கள் சொல்றாங்க. இருந்த நகை எல்லாம் வித்து அஞ்சு லட்சம் செலவும் பண்ணியாச்சு. என் பையனோட நிலை​மைக்குக் காரணமான டாக்டர்கள் மேல நடவ​டிக்கை எடுக்கணும். என் குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை இனி யாருக்கும் ஏற்படக் கூடாதுனு பரிதவிப்புலதான் கலெக்டர்​கிட்ட கருணைக் கொலை பண்ணுங்கனு மனு கொடுத்தோம்'' என்றவர் கதறி அழ ஆரம்பித்தார்.

குழந்தையை நம் கையில் கொடுத்தனர். தூங்கிக்கொண்டிருந்தவன், விழித்தான் 'ங்கா’ என ஏதோ சொல்ல முயற்சித்தான். 'தவறு செய்தவர்களைத் தண்டியுங்கள்’ என்பதைத் தாண்டி வேறு என்ன சொல்லப்போகிறான்?

-நா.சிபிச்சக்கரவர்த்தி

படம்: பா.கார்த்திக்

அடுத்த கட்டுரைக்கு