Published:Updated:

தண்ணீர் கண்ணீர்!

மிரட்டி ஓடவைக்கும் சென்னை

தண்ணீர் கண்ணீர்!

மிரட்டி ஓடவைக்கும் சென்னை

Published:Updated:
##~##

தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள் சென்னை மக்கள். 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர்மட்​டம் குறைந்து வருவதால், குடிநீர் சப்ளை குறைக்கப்​பட்டுவிட்டது. ஓரளவுக்குக் கைகொடுத்து வந்த வீராணம் ஏரியும் வறண்டுவிட்டதால், சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பெரும் சிக்கல்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லெட்சுமி, ''கடந்த 20 நாட்களாகவே குடிநீர் சப்ளை சரிவர இல்லை. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், பிரச்னை சரியாகிவிடும் என்கின்றனர். ஒருநாள் தண்ணி வந்தால், அடுத்த நாள் வருவது இல்லை. எங்கள் பகுதி மக்களுக்காக கைப்பம்பு வைத்துக் கொடுத்துள்ளனர். அதில் அடித்துத்தான் தண்ணீர் எடுக்கிறோம். லாரி மூலமும் சரியாகத் தண்ணீர் வருவது இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், வேறு இடத்துக்குச் சென்றாலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள். ஒரு குடம் தண்ணீர் எடுப்பதற்கே திண்டாட்டமாக இருக்கிறது. வசதியானவர்கள் கேன் வாட்டர் வாங்கிக் குடிக்கிறார்கள். லாரி தண்ணீர் வாங்கிக் குளிக்கிறார்கள். ஆனால், எங்கள் பாடு திண்டாட்டமாக இருக்கிறது'' என்றார்.

தண்ணீர் கண்ணீர்!

'தேவை இயக்கம்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்​பாளர் இளங்கோவிடம் பேசினோம். ''வட சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீரைத் தேடி குடங்களுடன்  அலைகின்றனர். வியாசர்பாடி பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. அதுவும் தண்ணீரும் இரண்டு மணி நேரத்தில் கட்டாகிவிடுகிறது. எம்.கே.பி. நகரில் ஒரு குடம் தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். குடிநீருக்காக மக்கள் படும் அவஸ்தைகளைப் பார்த்தால், வேதனையாக இருக்கிறது.

செம்பரம்பாக்கம் மற்றும் சென்னீர்​குப்பம் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்​கள் தினமும் கோடிக்கணக்கான லிட்டர் நீரை ராட்சத பம்ப்கள் மூலம் உறிஞ்சி பாட்டில் நீர் தயாரிக்கின்றனர். அவர்​

தண்ணீர் கண்ணீர்!

களுக்கு மும்முனை மின்சாரம் தங்கு தடை​யின்றி கிடைக்கிறது. எந்தக் கட்டணமும் நிபந்தனையும் இல்லாமல் தண்ணீரை உறிஞ்சி கொள்ளை லாபத்துக்கு விற்கின்றனர். ஆனால், சென்னையில் வரி செலுத்திவாங்கும் குடிநீருக்கு அல்லல்படுகிறோம்'' என்றார் வேதனையுடன்.    

சென்னை பெருநகர குடிநீர் வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசினோம். ''சென்னை மாநகராட்சி​யோடு இணைத்த புதிய பகுதி​களுக்கு குடிநீர் விநியோகம் முறையாக நடக்கிறது. தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய ஏழு மண்டலங்களில் மறுசீரமைப்பு முறையில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், அழுத்தம் காரண​மாக ஒரு பகுதியில் தண்ணீர் அதிகமாக வந்தால் இன்னொரு பகுதியில் தண்ணீர் குறைவாக வரும். மறுசீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன், இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும்.  

குடிநீர் கிடைக்காத பகுதிகளில் 335 லாரிகளில் 4,200 முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தவிர, ஒப்பந்த அடிப்படையிலும் 25 லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகத்தை அதிகரிப்பதற்காக 731 இடங்​களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கத் திட்டமிட்டு, இப்போது வரை 300 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

பூண்டி ஏரியில் 341 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 844 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 1,034 மில்லியன் கன அடி என்று மொத்தம் 2,219 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருக்கிறது. தவிர நெய்வேலி கிணற்றுத் தளங்களில் இருந்து 80 மில்லியன் லிட்டரும், பிற வழிகள் மூலம் 55 மில்லியன் லிட்டரும், மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 170 மில்லியன் லிட்டர் குடிநீரும் கிடைக்கிறது. இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம்'' என்றனர்.

அதே சமயத்தில், ''குடிநீர் ஏரிகளில் இப்போ​துள்ள இருப்பு நீரைக்கொண்டு, வரும் ஜூலை 15-ம் தேதி வரைதான் சமாளிக்க முடியும். இப்போது நடைபெற்று வரும் கிருஷ்ணா நதி நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் ஜூன் 15-ம் தேதிக்குள் முடிந்துவிட வேண்டும். ஆனால், அது குறிப்பிட்ட காலத்தில் முடியுமா என்பது சந்தேகமே. இதனால், ஜூலை 15-ம் தேதிக்குப் பிறகு தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கவே செய்யும்'' என்றும் சில அதிகாரிகள் கிலி கிளப்புகிறார்கள்.

தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் இதே நிலைமைதான். பாவம் மக்கள்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism