Published:Updated:

செக்ஸ் புகார் குரியனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?

கொதிக்கும் பெண்கள் அமைப்புகள்

செக்ஸ் புகார் குரியனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?

கொதிக்கும் பெண்கள் அமைப்புகள்

Published:Updated:
##~##

நண்டைச் சுட்டு நரிக்குக் காவல் வைத்ததாக கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அந்தக் கதையாகத்தான் இருக்கிறது, பி.ஜெ.குரியனை பெண்கள் பாதுகாப்பு மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த விவகாரம்.

 கேரளத்துச் சிறுமியை 40 நாட்களாக அறையில் அடைத்துவைத்து 40-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்து சீரழித்த சம்பவம் நடைபெற்று, 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்ட பெண், அந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கையை நீட்டுவது, இப்போது ராஜ்ய சபா துணைத் தலைவராக இருக்கும் பி.ஜெ.குரியனை நோக்கித்தான். அதையெல்லாம் ஒரு பொருட்​டாகவே நினைக்காமல் குரியனுக்கு அடுக்கடுக்காகப் பதவி​களைக் கொடுத்து அழகு பார்க்கிறது காங்கிரஸ். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கோ, தீர்ப்பின் திசைதெரியாமல் நீண்ண்டுகொண்டே செல்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் பெண்கள் மற்றும் சிறுமியர் பாதுகாப்பு விழிப்புஉணர்வு குறித்து ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மாநாடு நடத்தியது. மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு பற்றி உரையாற்ற, நமது அரசாங்கம் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டவர் பி.ஜெ.குரியன் என்பதுதான் வேதனை.

செக்ஸ் புகார் குரியனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?

மாநாட்டில் குரியன் கலந்துகொள்ளப்​போகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன்,  'பாலியல் பலாத்கார வழக்கில் 18 ஆண்டுகளாக நீதித் துறையின் கண்களைக் கட்டி கண்ணாமூச்சி ஆடும் அதிகார பலம்மிக்க ஒருவரை எப்படி அழைக்கலாம்?’ என்று, மாநாடு நடத்தும் மலேசிய அமைப்புக்கு மெயில்கள் பறந்தன. இந்தியப் பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பான என்.டபிள்யு.எம்.ஐ. என்ற அமைப்பு சார்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் கையெழுத்துக்களைப் பெற்று, தங்களது கடும் எதிர்ப்பைப் பதியவைத்தனர். 'இந்தியாவில் இப்படிப்பட்ட சூழல் இருப்பது எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் குரியனை நாங்கள் அழைத்திருக்க மாட்டோம்’ என மீடியாக்களிடம் சொன்னார்கள் மலேசிய அமைப்பினர். ஆனால், அனைத்து சர்ச்சைகளையும் மீறி அந்த மாநாட்டில் கலந்துகொண்டு, மாநாட்டை சிறப்பித்து(!) விட்டு வந்துவிட்டார் குரியன்.

பல்வேறு எதிர்ப்புகள், பிரச்னைகளுக்கு இடையே நீதிக்காகப் போராடிவரும் சூரியநெல்லி சம்பவப் பெண்ணிடம் பேச முயன்றோம். அவர் மன உளைச்சலில் இருந்ததால், அவர் சார்பாக அவரின் தாயார் ரீட்டா பேசினார். ''18 ஆண்டுகளில் பல்வேறு குளறுபடிகள் செய்து குற்றவாளிகள் தப்பித்துக்​கொண்டே வருகின்றனர். வழக்கின் முக்கிய சாட்சியும் குற்றவாளியுமான தர்மராஜ், 'பி.ஜெ.குரியன்​தான் குற்றவாளி. நான்தான் அவரை குமுளி கெஸ்ட் ஹவுஸில் விட்டுவிட்டு வந்தேன்’ என்று, சமீபத்தில் கர்நாடகாவில் இருந்து மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தான். தலைமறைவாக இருந்த அவனை கேரளப் போலீஸார் பிடித்துவந்து கோர்ட்டில் நிறுத்தியபோதோ, 'எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் பெண் யார் என்றுகூட தெரியாது’ என்று மழுப்பிவிட்டான். அவனை அடித்து மிரட்டி பொய் சொல்ல வைத்து​விட்டனர். அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல எல்லோரும் பயப்படும் நிலைதான் இன்றும் தொடர்கிறது. இப்படிப்பட்டவர்தான் பெண்களின் பாதுகாப்புக்காகப் போராடப்போகிறாரா? அவர் மலேசியா சென்றுவந்ததை நாளேடுகளில் பார்த்தபோது, நமது ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று நொந்துகொண்டோம்.

சென்ற மாதம் டெல்லியில் இருந்து ஒரு பெண் பத்திரிகையாளர் எங்களைப் பேட்டி எடுத்தார். பேட்டி எடுத்து டெல்லிக்குக் கிளம்பியவரை, குரியன் ஆட்கள் மிரட்டினர். அதைச் சட்டைசெய்யாமல் துணிச்சலாக அந்தப் பெண், செய்தியை வெளியிட்டார். அதற்காக அந்தப் பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுபோல், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளி ஆண்டு விழாவில் அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமி சூரியநெல்லி சம்பவத்தை மோனோஆக்டிங் செய்துள்ளார். அதை அறிந்து அந்தச் சிறுமி வீட்டுக்கு குரியனே நேரடியாகச் சென்று, இனிமேல் சூரியநெல்லி பெயரைப் பயன்படுத்தினால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். அதிகாரத்தில் உள்ளதால் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்.

சோனியா காந்திக்கு தனிப்பட்ட முறையில் பலமுறை புகார் அனுப்பியுள்ளோம். சோனியாவின் மகளும் எனது மகளும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என சோனியா காந்திக்கு உணர்வுப்பூர்வமாகக்கூட புகார் அனுப்பியுள்ளோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. என் மகள் வேலை செய்யும் இடத்திலும் தொல்லைகள் கொடுத்து வீண்பழி சுமத்தி, ஒன்பது மாதங்கள் அவளை சஸ்பெண்ட் செய்தனர். மறுபடியும் அவள் வேலைக்குச் சேர்ந்ததும் உயர் அதிகாரிகளை ஏவிவிட்டு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதும் மனம் புண்படும்படியாகப் பேசுவதும் என தொடர்ந்து தொல்லை தருகின்றனர். நாங்கள் அடிபணிந்து வீழ்ந்துவிடுவோம் என்று நினைக்கின்றனர். இந்த நாட்டில் ஏதோ ஒரு மூலையில் எங்களுக்கான நீதி ஒளிந்திருக்கிறது. அதைத் தேடித்தான் எங்கள் போராட்டமும் இருக்கிறது'' என்றார் நம்பிக்கையுடன்.

நாமும்தான்!

- சண்.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism