Published:Updated:

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள்!

நடுங்கவைக்கும் நாமக்கல்

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள்!

நடுங்கவைக்கும் நாமக்கல்

Published:Updated:
##~##

சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தேவிஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அரசுப் பள்ளி​களில் இவர்தான் மாநிலத்தில் முதல் இடம். இதே பள்ளியில் 493, 492 ஆகிய மதிப்​பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் இதே பள்ளி தட்டியிருக்கிறது. 450 மதிப்பெண்களுக்கு மேல் 87 மாணவிகளும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 202 மாணவிகளும் வாங்கிக் குவித்து​ள்ளனர். 

கணிதத்தில் 15 பேர், அறிவியலில் 15 பேர், சமூகவியலில் 6 பேர் சென்டம் வாங்கியுள்ளனர். அந்த சந்தோஷத்தை முழுமை​யாகக் கொண்டாட முடியாமல் வருத்தத்தில் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன பிரச்னை?

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள்!

பள்ளியின் தலைமையாசிரியர் தியாகராஜனை சந்தித்தோம். ''எங்கள் பள்ளியில் 2,880 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கிறோம். பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துகிறோம். பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகளை ப்ளஸ் டூவிலும் உயர்ந்த இடத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம். ஆனால், எங்கள் பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவிகளை நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளிகள், ஹாஸ்டல் இலவசம், உணவு இலவசம், யூனிஃபார்ம் இலவசம் என்று சொல்லி, மாணவிகளின் பெற்றோர்களையும் ஏமாற்றி இழுத்துச்சென்றுவிடுகிறார்கள். இந்த வருடம் 470 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவிகளை மொத்தமாக அவர்கள் இலவச மோகம் காட்டி இழுத்துச் சென்றுவிட்டனர். 300 மதிப்பெண்களுக்கு குறைவாக உள்ள மாணவிகள் மட்டுமே எங்களிடம் வருகிறார்கள். அதனால் எங்களைப் போன்ற அரசுப் பள்ளிகள் மேல்நிலைத் தேர்வில் சாதிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் வேதனையுடன்.

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள்!

பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கௌதமன், ''கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வில் 480 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய குழந்தைகள் மேல்நிலைப் பள்ளி படிப்பு எங்கே படித்தனர் என்று பார்த்தாலே, நாமக்கல் தனியார் பள்ளிகளின் உண்மை நிலையைக் கண்டறிய முடியும். அரசுப் பள்ளிகள் என்றால், கேள்விகேட்க ஆள் இல்லை என்று நினைக்கிறார்கள். அதனால்தான் எங்கள் பள்ளியின் வாசலில் அவர்கள் பள்ளியின் விளம்பர போர்டு​களை வைத்திருக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்​கள் சிரத்தை எடுத்து உருவாக்கிய குழந்தை​களை, பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்யவைத்து, 100 சதவிகிதத் தேர்ச்சி என்று விளம்பரப்படுத்திக்​கொள்கிறார்கள்.

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள்!

ஒவ்வொரு தனியார் பள்ளியின் வெற்​றிக்குப் பின்பும், அரசுப் பள்ளி ஆசிரியரின் உழைப்பு இருக்கிறது. எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை சரஸ்வதி காலையில் எட்டு மணிக்கே பள்ளிக்கு வந்துவிடுவார். மாலை ஆறு மணிக்குதான் வீட்டுக்குச் செல்வார். தன்னுடைய மாணவி மாநிலத்தில் இரண்டாம் இடம் என்றதும் அந்த ஆசிரியை துள்ளிக்குதித்தார். இப்போது எல்லோருமே சந்தோஷத்தைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறோம்.

எங்களைப் போன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கஷ்டப்பட்டு உருவாக்​கிய மாணவர்களை தனியார் பள்ளிகள் இலவசங்களைக் காட்டிக் கடத்திக்கொண்டு போகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டும் தமிழக முதல்வர், இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்'' என்று ஆதங்கத்தோடு சொன்னார்.  

தஞ்சாவூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் நம்மிடம், ''டெல்டா பாசன மாவட்டங்களில் பெரும்பாலும் விவசாயக் கூலி மக்கள்தான் அதிகம். விவசாயத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தெரிந்துகொண்டு, ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில், திருப்பூரில் இருந்து, சில நிறுவனங்கள் லாரியில் வந்து மில்லுக்கும், சாயப்பட்டறைகளுக்கும் ஆள் பிடித்துச் செல்வார்கள். அதைப் போல இப்போது, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, நாமக்கல் தனியார் பள்ளிகள் தங்களது வாகனங்களில் வந்து அதிக மதிப்பெண் வாங்கும் மாணவ, மாணவிகளின்

பிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள்!

குடும்பத்தாரை மனமாற்றம் செய்கிறார்கள். இந்த ஆண்டும் 450 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவர்களை எல்லாம், அந்தப் பள்ளிகள் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டன'' என்றார்.

மக்கள் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்வி​மணியிடம் பேசினோம். ''இது ஆசிரியர்களின் குமுறல்கள் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த கல்வி ஆர்வலர்களின் குமுறலும் இதுதான். இதைத் தடுக்க மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். ஆந்திராவைப் போன்று மேல்நிலைப் பள்ளியின் இரண்டு ஆண்டுகளும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும். ஏரியா விட்டு ஏரியா சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்ல வேண்டும்.

மனப்பாடம் மட்டுமே செய்தால் அதிக மதிப்​பெண் வாங்க முடியும். ஆனால் எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளை இவர்களால் சந்திக்க முடியாது. உதாரணத்துக்கு 2008-ல் ஐ.ஐ.டி. நடத்திய நுழைவுத் தேர்வில், ஆந்திராவில் இருந்து 1,697 பேர் தேர்வானார்கள். தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்கள், 202 பேர் மட்டுமே. இதற்குக் காரணம் நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள மெட்ரிக் பள்ளிகளே'' என்றார்.

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் இளங்கோவனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ''நல்ல மதிப்பெண்கள் வாங்கி, படிக்க வசதி இல்லாத குழந்தைகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பது நல்ல விஷயம்தானே? இதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக இழுப்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம். அரசுப் பள்ளி ஆசிரியர்களை நாங்கள் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் திறமை எங்களுக்கும் தெரியும்'' என்று விளக்கம் தந்தார்.  

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism