Published:Updated:

30 ஆயிரத்துக்கு வாங்கி... ஒரு லட்சத்துக்கு விற்று...

அம்பலத்துக்கு வந்த விபசார நெட்வொர்க்

30 ஆயிரத்துக்கு வாங்கி... ஒரு லட்சத்துக்கு விற்று...

அம்பலத்துக்கு வந்த விபசார நெட்வொர்க்

Published:Updated:
##~##

விபசாரக் கும்பலிடம் சிக்கி, தப்பிவந்த ஆந்திர இளம்பெண் ஒருவர் கொடுத்த தகவலால், மிக ரகசியமாக நடந்துவந்த விபசார நெட்வொர்க் அம்பலத்​துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில், ஆளும்கட்சியின் திருச்சி நிர்வாகி ஒருவரும் கைது​செய்யப்பட்டிருக்கிறார்.   

தஞ்சை மாவட்டம் பாப​நாசத்தைச் சேர்ந்த 25 வயதான கார்த்திகா, கணவரைப் பிரிந்து வாழ்கிறார். பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர், தொழில் நிமித்தமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றுவந்துள்ளார். கடந்த மாதம், ஆந்திராவில் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி​யிருந்தபோது 17 வயது மைனர் பெண்ணிடம், 'உன் அழகுக்கு சினிமாவில் நடித்தால் நிறைய சம்பாதிக்கலாம். எனக்கு தமிழ்நாட்டில் பல சினிமா டைரக்டர்களைத் தெரியும்’ என ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டிருக்கிறாள். சில தினங்களுக்குப் பிறகு கார்த்திகாவின் போனுக்குத் தொடர்புகொண்டு பேசிய அந்தப் பெண், கார்த்திகாவின் அழைப்பின் பேரில் மே 28-ம் தேதி காலை சேலம் வந்துசேர்ந்தாள். அன்று இரவு மூன்று நபர்களிடம் அந்த ஆந்திரப் பெண்ணை அறிமுகம் செய்துவைத்த கார்த்திகா, 'இவர்களுடன் போ நீ சினிமாவில் நடிக்க ஏற்பாடுசெய்வார்கள்’ என அனுப்பிவைத்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

30 ஆயிரத்துக்கு வாங்கி... ஒரு லட்சத்துக்கு விற்று...

நடந்த சம்பவங்களை திருச்சி போலீஸார் விவரிக்கிறார்கள்.

''கன்னிப் பெண்ணுடன் உறவுகொண்டால், பதவிகள் தேடி வரும்; ஆயுள் கூடும் என்று யாரோ சோதிடரின் வாக்கை நம்பி, கன்னிப் பெண்ணைத் தேடிக்கொண்டு இருந்திருக்கிறார் துறையூர் நகராட்சித் தலைவரும், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான பொன்.காமராஜ். சினிமாக்காரர்கள் என்ற பெயரில் கார்த்திகாவிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஆந்திரப் பெண்ணை வாங்கிய சிவா, அந்தப் பெண்ணை பொன்.காமராஜுடன் காரில் அனுப்பிவைத்திருக்கிறான். காமராஜ், ஆந்திரப் பெண்ணைக் காரில் வைத்தும் துறையூரில் உள்ள தன் பண்ணை வீட்டில் வைத்தும் பலாத்காரப்படுத்திவிட்டு, தனது டிரைவருடன் திருச்சி அனுப்பிவைத்திருக்கிறார்.

30 ஆயிரத்துக்கு வாங்கி... ஒரு லட்சத்துக்கு விற்று...

அதன் பிறகு, பங்களாதேஷைச் சேர்ந்த முகமது சபீகுல் இஸ்லாம் என்பவனிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆந்திரப் பெண்ணை விற்றிருக்கிறான் சிவா. 'குளித்து​விட்டு வருகிறேன்’ என்று பாத்ரூமுக்குச் சென்ற ஆந்திரப் பெண், வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்துத் தப்பினாள். வழியில் தென்பட்ட ஒருவரிடம் தன்னைக் காப்பாற்றும்படி தெலுங்கில் கெஞ்ச, அவர் எங்களிடம் தகவல் சொன்னார்.

அந்தப் பெண்ணுக்குத் தன்னைக் கடத்திவைத்திருந்த வீடு எதுவென்று அடையாளம் தெரியவில்லை. கார்த்திகாவின் போன் நம்பர் மட்டுமே அவளிடம் இருந்தது. அதன் மூலம் கார்த்தி​காவை மடக்கி, அந்த வீட்டு விலாசத்தைப் பெற்றோம். நாங்கள் ரெய்டு போனபோது சிவா, பிரபு, சபீகுல் இஸ்லாம் ஆகிய மூவரும் சிக்கினர்.

30 ஆயிரத்துக்கு வாங்கி... ஒரு லட்சத்துக்கு விற்று...

சேலத்தைச் சேர்ந்த சிவாவுக்கு மிகப் பெரிய விபசார நெட்வொர்க் உள்ளது. ஐந்தாறு மொழிகள் சரளமாகப் பேசுகிறான். அவனது நண்பன் பிரபுவை சினிமா டைரக்டர் என்று பெண்களிடம் அறிமுகம் செய்துவைத்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி அந்தப் பெண்களின் கற்பை சூறையாடியிருக்கிறான்.

விவகாரம் வெளியே வந்ததும் தனது டிரை​வரையும் காரையும் போலீஸிடம் ஒப்படைத்த பொன்.காமராஜ், 'என்னை விட்டுவிடுங்கள். டிரைவர் மீது கேஸ் போட்டுக்கொள்ளுங்கள்’ என்று ஆளும் கட்சிப் பிரபலங்கள் மூலம் கோரிக்கைவைத்தார். இந்த விஷயம் உளவுப் பிரிவு போலீஸார் மூலம் முதல்வரின் கவனத்துக்குப் போனது. கோபமடைந்த முதல்வர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொன்.காமராஜை நீக்கிவிட்டு அவர் மீது வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பும்படி சொன்னதாக, எங்களுக்குத் தகவல் வந்தது. நெஞ்சு வலி எனக் காரணம் சொல்லி திருச்சி தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகி இருந்த பொன்.காமராஜைக் கைதுசெய்தோம்'' என்றனர்.

தன் கட்சியைச் சேர்ந்தவர் என்ற​போதும் பாலியல் பலாத்காரக் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தர​விட்ட முதல்வர் ஜெயலலிதா, இந்த விபசார நெட்வொர்க்கின் சங்கிலித் தொடர்புகளை கண்டறிந்து வேரோடு அறுத்தெரிய விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism