Published:Updated:

ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள்!

ஐந்து ஆண்டுகள் கழித்துத் திறந்த கதவு...

ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள்!

ஐந்து ஆண்டுகள் கழித்துத் திறந்த கதவு...

Published:Updated:
##~##

'காதல் ஒரு பாவச்செயல் 

காதல் ஒரு பெருங்குற்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல் ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ - இது, ஒவ்வொரு இந்தியனின் அடிமனதிலும் இந்திய சமூகக் கட்டமைப்பு பொறித்திருக்கும் கல்வெட்டு 'வாசகங்கள்’.

சாதி மாறி காதலித்ததற்காக தவமிருந்து பெற்ற மகளையே ஐந்து ஆண்டுகளாகத் தனி அறையில் அடைத்து, சோறு தண்ணீர் தராமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் பெங்களூருவைச் சேர்ந்த பெற்றோர்.

கடந்த 3-ம் தேதி இரவு, பெங்களூருவில் பலத்த மழை. வானம் ஒரு பக்கம் ஓயாமல் அழுதுகொண்டிருக்க, மல்லேஸ்வரம் பகுதியில் ரேணுகப்பாவின் வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரலும் சேர்ந்து கேட்டது. இதனால் இரவெல்லாம் தூக்கம் தொலைத்த அக்கம் பக்கத்து வீட்டார் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். மறுநாள் காலை, மல்லேஸ்வர மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரபா, அந்த வீட்டுக்குள் நுழைந்து விசாரித்தபோதுதான், அந்த அதிரவைக்கும் சம்பவம் உலகத்துக்கே தெரியவந்தது.

ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள்!

''என் மகளுக்குப் பைத்தியம். எப்பவும் அழுதுகிட்டே இருப்பா. அதான் அந்த ரூமில் பூட்டிவெச்சிருக்கேன்'' என சாதாரணமாகச் சொல்லி, ஐந்து ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருந்த கதவுகளைத் திறந்தார் ரேணுகப்பா. சீவப்படாத தலை, வெட்டப்படாமல் நீண்டு வளர்ந்திருந்த நகங்கள், மலஜல நாற்றத்துடன் உடைகூட இல்​லாமல் கிடந்தார் அந்தப் பெண். ''என்னைக் காப்பாத்துங்க... என்னைக் காப்பாத்துங்க... ரொம்ப‌ பசிக்குது... என்னால பேச முடியலே!'' எனக் கதறிய அந்தப் பெண்ணை மீட்டு, பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள்!

''அந்தப் பெண்ணின் பெயர் ஹேமாவதி. பி.காம். படிச்சிருக்கா. எப்பவும் சிரிச்ச முகத்தோடு ரொம்ப அழகா இருப்பா. அன்பா நடந்துக்குவா. ஒரு தனியார் பேங்கில் வேலைசெஞ்சா. அப்போ அவளோடு வேலைசெஞ்ச வேற சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற பையனைக் காதலிச்சா. இந்த விஷயம் ஹேமாவதியோட அப்பாவுக்குத் தெரிஞ்சு வீட்டில்‌ பெரிய பிரச்னை ஆயிடுச்சு. மகளை சித்ரவதை செய்ய ஆரம்பிச்சாரு.

ஒரு கட்டத்தில் ஹேமாவதியை வேலைக்குப் போகவும் போன் பேசவும் தடைவிதிச்சார். மைசூரில் இருக்கும் தன்னுடைய சொந்தக்காரரின் வீட்டுக்கு அனுப்பிவெச்சார். மைசூரில் இருந்து ஹேமாவதி தப்பிச்சு வரவும், அவளுடைய அப்பாவும் இரண்டு தம்பிகளும் சேர்ந்து அவளை அடிச்சு, அந்த

ஹைடெக் சிட்டியில் காட்டுமிராண்டி மனிதர்கள்!

ரூமுக்குள்ள போட்டுப் பூட்டினாங்க. சாப்பாடு, தண்ணீர் எல்லாமே ஜன்னல் வழியாத்தான் கொடுப்​பாங்க. பாத்ரூம்கூட அங்கேயேதான். டிரஸ்கூட தர மாட்​டாங்க.

ரெண்டு, மூணு வருஷங்களுக்கு முன்னாடிகூட ரூம் முழுக்க 'ரமேஷ்... ரமேஷ்’னு எழுதிவெப்பா. யாராவது தேடி வந்தாலும், 'அவளுக்குப் பைத்தியம். பக்கத்துல போகாதீங்க. கடிச்சிருவா’னு பயமுறுத்​துவாங்க. இதனால், சொந்தக்காரங்களும் அண்டை வீட்டாரும் ஹேமாவதியைப் பார்க்காமலே பயந்து நடுங்கினாங்க'' என அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார் ஹேமாவதியின் உறவினர் ஒருவர்.

ஹேமாவதியின் தாயார் புட்டகவுரம்மா, ''என் மகளுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி சிக்கன் குன்யா வந்துடுச்சு. பக்கத்தில் வெச்சிருந்தா எல்லாருக்கும் பரவிடும்னு டாக்டர் சொன்னதால, தனி ரூமில் படுக்கவெச்சோம். ஏற்கெனவே அரைகுறையா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவளுக்கு, சிக்கன் குன்யா வந்ததால் பைத்தியம் முத்திப்போச்சு. மற்றபடி, அவளுக்குக் காதலும் கிடையாது. எந்தக் கத்திரிக்காயும் கிடையாது'' என்றார்.

நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஹேமாவதியைப் பார்க்கப் போனோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றியிருந்தாலும் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.எல்.சதீஸிடம் பேசினோம். ''ஹேமாவதி சில ஆண்டு​களாகத் தனிமையிலே அழுதுகொண்டிருந்​ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். சரியாக சாப்பிடாததால், ஊட்டச்சத்துக் குறைபாடும் இருக்கிறது. அவர் மனநிலை பாதிக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு வாரங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பூரண குணமடைவார்'' என்றார் நம்பிக்கையுடன்.

பெங்களூருவில் இருக்கும் பெண்ணிய செயல்பாட்டாளரான சிந்தியாவிடம் பேசினோம். ''21-ம் நூற்றாண்டில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில்கூட சாதியின் ஆணி வேர் ஆழப்பதிந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஹேமாவதி பிரச்னையைப் பொறுத்தவரை அத்தனைத் தவறையும் அவளது பெற்றோரே செய்திருக்கிறார்கள். இதனால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்'' என்றார்.

'இப்போ எல்லாம் யாரு சார் சாதி பார்க்குறா?’ என்பது எத்தனை அப்பட்டமான பொய்?

- இரா.வினோத்

படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism