Published:Updated:

நான் எங்கும் தப்பியோட மாட்டேன்!

பாய்ந்த போலீஸ்... பயப்படாத பாஸ்கரன்

நான் எங்கும் தப்பியோட மாட்டேன்!

பாய்ந்த போலீஸ்... பயப்படாத பாஸ்கரன்

Published:Updated:
##~##

17   ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பாஸ்கரன். 

மே 27-ம் தேதி... பாஸ்கரன் நடிக்கும் 'தலைவன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, முன்னணி நடிகர்களின் விழாவை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆரின் டிரெண்ட் வார்த்தையான, 'ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே...’ என்று ரசிகர்களைப் பார்த்து பாஸ்கரன் அழைக்க... மறு நாளே அவர் கைதுசெய்யப்படும் சூழல் உருவானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது, ஜூ.வி-க்கு பேட்டியளித்த அவர், ''1995-ல் ஜெ.ஜெ. டி.வி-யில் வேலைசெய்தேன். யாரோ செய்த தவறுக்காக என்னைப் பலிகடா ஆக்கினர். எட்டு மாதங்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது தவறுசெய்தவர், இப்போது பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். சிறைத் தண்டனை அனுபவித்த எனக்கு, பரிசோ பாராட்டோ கிடைக்கவில்லை. 1995-ம் ஆண்டிலேயே எல்லா அரசியல் விளையாட்டையும் பார்த்தவன். என்னைக் கைதுசெய்தால் சும்மா இருக்க மாட்டேன். அமைதியாக சினிமா பக்கம் செல்ல இருந்த என்னை, அரசியலுக்கு இழுக்காதீர்கள்'' என்று ஆவேசமாக சொன்னார்.

நான் எங்கும் தப்பியோட மாட்டேன்!

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டுக்கு உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் டீம் சென்றது. வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டியிடம், 'பாஸ்கரனைக் கைதுசெய்ய வந்திருக்கிறோம்’ என்றனர். அவர் கதவைத் திறக்க மறுக்கவே, கேட் மீது ஏறி உள்ளே குதித்த போலீஸார், கேட்டின் உள்புறத்தில் போடப்பட்டிருந்தப் பூட்டை உடைத்து கேட்டைத் திறந்தனர். தூங்கிக்கொண்டிருந்த பாஸ்கரனை எழுப்பினர். '6 மணிக்கு வெளியே வருகிறேன். எங்கும் தப்பியோட மாட்டேன்’ என்று சொன்னார் பாஸ்கரன்.  

நான் எங்கும் தப்பியோட மாட்டேன்!

காலையில் எழுந்து வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து குளித்துவிட்டு, காலை 6.50 மணிக்கு போலீஸாரிடம் சரண்டர் ஆன பாஸ்கரனிடம், '3 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் உங்களைக் கைதுசெய்துள்ளோம்’ என்று போலீஸார் தெரிவித்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பாஸ்கரன் மீது புகார் கொடுத்துள்ள கடலூர் சாரங்கபாணியிடம் பேசினோம். ''2002-ல் கடலூர் சிவில் சப்ளை துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினேன். அங்கு வேலைசெய்த இளவழுதி, அவருடைய நண்பர் பருத்தி சேகர் ஆகியோர் எனது தங்கை மகளுக்கு டீச்சர் வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டினர். பாஸ்கரனிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், சுலபமாக காரியத்தை சாதித்துவிடலாம் என்றனர். அவர்களின் பேச்சை நம்பி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு நாங்கள் அனைவரும் சென்றோம். அங்குதான் பாஸ்கரனைச் சந்தித்தோம்.

திருவாரூரில் நான் பணியாற்றியபோது, வண்டாம்பாளையத்தில் அரிசி ஆலை ஒன்றை எடுத்து நடத்திவந்தார் தினகரன். அந்த ஆலையில் அரிசி ஏற்றும்போது, தினகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினரோடு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தை பாஸ்கரனிடம் கூறினேன். அதற்காக பாஸ்கரன் இரண்டு லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்துவிட்டு, மூன்று லட்சம் ரூபாய் மட்டும் போதும் என்றார். அந்த மூன்று லட்ச ரூபாயையும் மூன்று தவணைகளாகக் கொடுத்தேன். பணத்தைக் கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை வேலை கிடைக்கவில்லை.  

இதனால், பண்ருட்டிக்குப் பக்கத்தில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் எனது தங்கை மனநலம் பாதிக்கப்பட்டுக்கிடக்கிறார். இந்த மோசடி குறித்து அப்போதே விழுப்புரத்தில் பலமுறை புகார்கள் கொடுத்தோம். 2012 மார்ச் மாதம் சென்னை கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்தோம். அந்தப் புகார் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் கடந்த 31-ம் தேதி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

பாஸ்கரனின் வழக்கறிஞர் விஜய், ''தனிப்பட்ட நோக்கத்தில் பாஸ்கரன் கைதுசெய்யப்​பட்டுள்ளார். போலியான குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம்'' என்றார்.

'தலைவன்’ பாஸ் ரசிகர் மன்றத் தலைவர் பூவை அசோக்குமாரிடம் பேசினோம். ''எங்கள் தலைவர் வளர்ந்துவரும் நல்ல கலைஞர். வழக்குகள் போட்டு அவரை நசுக்குவது வேதனை​யாக இருக்கிறது. மன்றத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் வைத்தோம். அதை தீவைத்துக் கொளுத்தினர். ஈ.சி.ஆரில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை அழித்தனர். எம்.ஜி.ஆர். போல ரசிகர்கள் மீது அவர் உயிருக்கு உயிராக இருக்கிறார். எனவேதான் 'ரத்தத்தின் ரத்தமே...’ என்று ஆடியோ ரிலீஸின்போது பேசினார். ஏழைகளுக்கு லட்சக்கணக்கான தொகையில் நலத் திட்ட உதவிகளை செய்துவருகிறோம். இப்போதுகூட பள்ளிக் குழந்தை​களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகம் கொடுத்துவருகிறோம். அவர் மூன்று லட்சத்தை  ஏமாற்றிவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. எனக்கு எது நேர்ந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். எனவே அமைதியாக இருக்கிறோம்'' என்றார்.

டாக்டர் வெங்கடேஷைத் தொடர்ந்து, பாஸ்கரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டாவது சீசனில் அடுத்தது யாரோ?

- எஸ்.முத்துகிருஷ்ணன், க.பூபாலன்

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், பா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism