##~## |
'தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்’ என அதிரடி கிளப்பியிருக்கிறது மத்திய தகவல் ஆணையம். புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதிர்ந்துகிடக்கின்றன அரசியல் கட்சிகள்.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவும் ஊழலை ஒழிக்கவும் 2005-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்’. இந்தச் சட்டத்தின்படி 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். தகவல் தராத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். இந்தச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ரைட் அடித்திருக்கிறது மத்திய தகவல் ஆணையம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நம்ம ஊர் டிராபிக் ராமசாமி போல பொதுநல வழக்குகளைப் போட்டு டெல்லியைக் கலங்கடிப்பவர்கள் ஜனநாயக சீர்திருத்த அமைப்பைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பெய்ர்வால். இவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி., சி.பி.எம்., சி.பி.ஐ., தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய ஆறு கட்சிகள் வாங்கிய நன்கொடைகள், அவற்றை வழங்கியவர்களின் பெயர்கள் போன்ற விவரங்களை, தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது தகவல் தரவில்லை. உடனே இருவரும் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தனர். 'தகவல் அறியும் சட்டம் எங்களுக்குப் பொருந்தாது’ என வாதிட்டன அரசியல் கட்சிகள். மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சத்யானந்த மிஸ்ரா மற்றும் ஆணையர்கள், 'இந்தச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்’ என்று உத்தரவு போட்டனர். அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தேர்தல் செலவுகள் போன்ற விவரங்களை யாராவது கேட்டால் தகவல் தரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள், இதனால் அரண்டுகிடக்கின்றன.

தகவல் அறியும் சட்டத்தை கொண்டுவருவதற்கு முன், அதை ஆய்வுசெய்தது சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு. தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு பற்றி அவரிடம் பேசினோம். ''அரசியல் கட்சிகள் பற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களைக் கேட்டுப்பெற வழிவகை செய்யலாம். கட்சிகள் செய்யும் தவறுகளைக் கட்டுப்படுத்த தனியாக சட்டம் இருக்கும்போது தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்துவது அந்தச் சட்டத்தை பலவீனமாக்கும். மேம்போக்காக பார்த்தால், இது நல்ல விஷயமாகதான் தெரியும். உள்ளார்ந்து ஆராய்ந்தால் பெரிய கேடாக அமையும். பெரிய போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை மழுங்கடிக்க முயற்சிகள் நடக்கின்றன. அதிகாரிகள் வர்க்கம், தகவல் அறியும் சட்டத்தை முடக்கி, அதை செல்லாக்காசு ஆக்கப் பார்க்கிறார்கள்'' என்றார் சுதர்சன நாச்சியப்பன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களைப் போல அரசியல் கட்சிகள் பப்ளிக் அத்தாரிட்டிகள் அல்ல. கட்சியின் வரவு-செலவு, வருமான விவரங்கள் தேர்தல் கமிஷனிடமும் வருமான வரித் துறையிடமும் சமர்பிக்கப்படுகின்றன. அங்கே அந்தத் தகவல்களைக் கேட்டு வாங்கலாம். கட்சி எடுக்கும் முடிவுகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போன்ற உள் விவரங்களை எல்லாம் தரவேண்டிய நிலை உருவானால், அது உள்கட்சி சுதந்திரத்தை சீர்குலைக்கும்'' என்றார்.
தகவல் அறியும் உரிமைப் போராளி கோபாலகிருஷ்ணன் தகவல் ஆணையத்தின் உத்தரவை வரவேற்கிறார். ''தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற ஆற்றாமையில்தான் அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கின்றன. வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் எல்லாம் நன்கொடை வாங்குவதில் மட்டும் ஒரே விதத்தில் செயல்படுகின்றன. கட்சிகளுக்குக் கொடுத்த பல கோடி ரூபாய் நிதியை தங்கள் ஆண்டு அறிக்கையில் தொழில் நிறுவனங்கள் கணக்கு காட்டுகின்றன. ஆனால், அந்தப் பணத்தை வாங்கிய அரசியல் கட்சிகள் ஊமைகளாகி விடுகின்றன. நன்கொடையாக பணத்தைப் பெறும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், அந்த நிறுவனங்களுக்கு அளித்த சலுகைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதாலேயே, வாங்கிய நன்கொடைகளைக் காட்ட மறுக்கின்றன. பாதுகாப்புத் துறை, பிரதமர் அலுவலகம், சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டுவரச் சொல்லும் அரசியல் கட்சிகள், தங்களுக்கு என வரும்போது இரட்டை வேடம் போடுகிறார்கள். சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ நுழையும் அரசியல் கட்சிகளுக்கு அங்கே அலுவலகங்கள், டெலிபோன், உதவியாளர்கள் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. தேர்தல் நேரத்தில், பணம் செலுத்தினால்தான் சுயேச்சைகளுக்கு வாக்காளர் பட்டியல் தரப்படும். ஆனால், அரசியல் கட்சிகளுக்கு அவை இலவசமாக தரப்படுகின்றன. இப்படி அரசின் பயன்களை அனுபவிக்கும் கட்சிகள் இந்தச் சட்டத்துக்கு உட்பட்டவைதான்'' என்றார் கோபாலகிருஷ்ணன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசியல் கட்சிகள் உதாசீனம் செய்வது சரியானது அல்ல!
- எம்.பரக்கத் அலி
நன்கொடை... பத்மபூஷண்!
காங்கிரஸ், பி.ஜே.பி., அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகள் வருமான வரித் துறையிடம் அளித்த வருமான வரி கணக்கு விவரங்களை, தகவல் அறியும் சட்டத்தில் வருமான வரித் துறையிடம் கேட்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளை மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். மற்ற கட்சிகள் தங்கள் கணக்குகளைத் தரக் கூடாது என்று சொல்லிவிட்டது. காங்கிரஸ் தொடர்பாக கிடைத்த ஆவணங்களை அலசியபோது பெங்களூரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் காங்கிரஸுக்கு பெரிய தொகையை நன்கொடை அளித்திருக்கிறார். அடுத்த ஆண்டே அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல பல நிறுவனங்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸுக்கு 300.91 கோடி, பி.ஜே.பி-க்கு 141.25 கோடி நன்கொடையாக வந்திருக்கிறது.