Published:Updated:

காவல் நிலையத்தில் வாலிபர் படுகொலை: சி.பி.ஐ விசாரணை கோரி உள்துறை செயலாளரிடம் மனு!

விகடன் விமர்சனக்குழு
காவல் நிலையத்தில் வாலிபர் படுகொலை: சி.பி.ஐ விசாரணை கோரி உள்துறை செயலாளரிடம் மனு!
காவல் நிலையத்தில் வாலிபர் படுகொலை: சி.பி.ஐ விசாரணை கோரி உள்துறை செயலாளரிடம் மனு!
காவல் நிலையத்தில் வாலிபர் படுகொலை: சி.பி.ஐ விசாரணை கோரி உள்துறை செயலாளரிடம் மனு!

சென்னை: ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த கோரி தமிழக உள்துறை செயலாளரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சி மனு அளித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் முகம்மது பிலால், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மாவை இன்று சந்தித்து அளித்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செய்யது முகம்மது என்ற இளைஞர், அருள்தாஸ் என்ற மெக்கானிக் அளித்த கொலை முயற்சி புகார் தொடர்பாக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் காவல்துறையினரின் கடும் தாக்குதலுக்கு ஆளான செய்யது முகம்மது உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பலியான செய்யது முகம்மது சப்-இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியால் சுடப்பட்டு, தற்காப்பு நடவடிக்கைக்கான தாக்குதல் என சம்பவத்தை திசை திருப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலியான செய்யது முகம்மது மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் இல்லை. விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதும், அவரை சுட்டுக் கொல்வதும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

சமீபத்தில் சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரால் சிறுவன் சுடப்பட்டது முதல் பல்வேறு காவல்நிலைய மரணங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர், சட்டம்- ஒழுங்கை மீறும் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களது குற்றங்களை மறைக்க முயற்சி மேற்கொள்வதும், குற்றவாளியான அதிகாரியை காப்பாற்றும் வகையில் அறிக்கை விடுவதும் காவல்துறை மதிப்பை கெடுக்கும் செயலாகும்.

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக்கூத்தாக்கிவிடும். காவல் நிலையங்களில் இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடருமானால் காவல்துறை மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையும் இல்லாமல் போகும்.

ஆகவே இந்த சம்பவத்தை உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறை வழிகாட்டுதலின் படி, கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் தொடர்புடைய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவத்தில் பலியான இளைஞர் செய்யது முகம்மது கூலி வேலை செய்து தனது குடும்ப பொருளாதாரத்தை நிவர்த்தி செய்துவந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரின் இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட உள்துறைச் செயலாளர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.