Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

Published:Updated:
என்ன செய்தார் எம்.பி? - கரூர்
##~##

லஷ்யாவும் நவீனும் உயிருக்கு உயிராகக் காதலித்தனர். இருவர் வீட்டிலும் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு. காரணம் சாதி அல்ல... கட்சி! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருவரின் அப்பாக்களும் வெவ்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள். பெற்றோர் பிடிவாதமாக எதிர்க்க... காதலர்களும் விட்டுக்கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் தன் மகள் திருமணத்துக்கு ஒப்புக்​கொண்ட அந்த அப்பா, 'நீ தாராளமாப் போய்க் கல்யாணம் பண்ணிக்​கோம்மா. உன் விருப்​பத்துக்கு நான் தடையா நிற்க மாட்டேன். ஆனா, உன் கல்யாணத்துக்கு நான் வர மாட்​டேன். எனக்கு என் கட்சிதான் முக்கி​யம்’ என்று உறுதி​யாக நின்றார். அப்பா இல்லாமல் கல்யாணமும் நடந்தது. அந்த அளவுக்கு கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் அப்பா... கரூர் தொகுதி எம்.பி-யான தம்பிதுரை. இவர் மகள் காதலித்துக் கரம்பிடித்து இருப்பது, காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வேலூர் ஞானசேகரனின் மகன்.

கட்சிக்கு இவ்வளவு விசுவாசமாக இருப்பவர், தன்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்? அவரை வெற்றி பெறவைத்த கரூர் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார்? தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறாரா? தொகுதி முழுக்கப் புகுந்து புறப்பட்டு ஸ்கேன் செய்தோம்.

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

தம்பிதுரை சார்பாக அனைத்து நல்லது கெட்டதுகளையும் அவரது மைத்துனர் 'கேஸ்’ பாலு என்பவர்தான் கரூரில் இருந்து கவனித்துவருகிறார். கட்சிக்காரர்கள் தம்பிதுரையிடம் காட்டும்

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

பவ்யத்தைவிட, பாலுவிடம்தான் அதிகமாக பம்முகிறார்கள். கோஷ்டி அரசியலுக்கு இடம் கொடுக்காமலேயே நகர்வதுதான் கட்சியில் தம்பிதுரையின் ப்ளஸ். அதே நேரத்தில், அமைச்சர் செந்தில்​பாலாஜியின் ஆதரவாளர்கள், இவரைப் போட்டியாகவே கருதி காய் நகர்த்துகிறார்கள்.

கரூர் மாவட்டத் தி.மு.க-வினர், ''கடந்த முறை எங்கள் கட்சியைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி, இந்தத் தொகுதி எம்.பி-யாக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் ஒன்பது பாலங்கள் கட்டிக் கொடுத்தார். கரூர் - சேலம் ரயிலைக் கொண்டுவரவும் அவர்தான் முயற்சி எடுத்தார். இப்போது அந்தப் பணி முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது எம்.பி-யாக இருக்கும் தம்பிதுரை கரூர் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. மண்மங்கலத்தில் ஒரு பாலம் கட்டித் தருவதாக தேர்தல் சமயத்தில் சொன்னார். இன்று வரை அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  

கரூரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. கரூர், புஞ்செய் புகழூர், தோட்டக்குறிச்சி, நஞ்சை புகழூர், கடம்பக்குறிச்சி, சோமூர், இனாம் கரூர், மண்மங்கலம் உள்ளிட்டப் பகுதிகளுக்கு திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்துதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இப்போது எங்களுக்கு 25 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆனால் எங்களுக்குக் குடிநீர் எடுக்கும் கட்டிப்பாளையத்தில் இருந்து டி.என்.பி.எல். காகித ஆலைக்கு ராட்சத மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுகின்றனர். இதை எம்.பி-யின் கவனத்துக்கு பலமுறை கொண்டுசென்றுவிட்டோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றைக்கு ஆட்சி, அதிகாரம் அத்தனையும் அவர்கள் கையில் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய மனசு மட்டும் இல்லை.

கரூரில் இருந்து சென்னைக்குப் போக, மங்களூர் எக்ஸ்பிரஸ் என்று ஒரு ரயில் மட்டும்தான் இருக்கிறது. கே.சி.பழனிசாமி இருந்த சமயத்தில், ரயில்வே அதிகாரிகளுடன் பேசி கரூர் கோட்டாவுக்காக ஒரு மூன்று அடுக்கு ஏ.சி. கோச்சும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கோச்சும் வாங்கியிருந்தார். ஆனால் தம்பிதுரை எம்.பி-யானதும், அந்தக் கோட்டா என்ன ஆனது என்றே தெரியவில்லை. கரூரில் இருந்து சென்னை செல்லும் மக்களுக்கு ரயிலில் தனி கோட்டா எதுவும் ஒதுக்குவது இல்லை. இதனால் இடம் கிடைப்பதில் பெரும் சிக்கல் உண்டாகிறது'' என்று வருத்தப்பட்டனர்.

அரவக்குறிச்சி, மணப்பாறை, விராலிமலை, வேடச்சந்தூர் என நாம் சென்ற இடங்களில் எல்லாமே குடிநீர் பிரச்னை பிரதானமாக இருக்கிறது. அரவக்குறிச்சி தாலுக்காவில் பல கிராமங்களில் குடிநீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் கணக்கில் நடக்க வேண்டிய அவலம். இளையாங்கோட்டை என்ற இடத்தில் நங்காஞ்சி ஆற்றில் தடுப்பு அணை கட்டியிருப்பதால், அமராவதி ஆற்றில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தம்பிதுரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கொதித்தனர் அந்தப் பகுதிவாசிகள்.

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

''அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் விவசாயம்​தான் பிரதான தொழில். இங்கே முருங்கைக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு தேர்தலின்போதும் போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களும் கொடுக்கும் வாக்குறுதிகளில் இது இருக்கும். ஆனால், ஜெயித்த பிறகு யாரும் கண்டுகொள்வது இல்லை'' என்கின்றனர் ராஜபுரத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர்.

வேடச்சந்தூரைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள், ''எங்கள் தொகுதி, வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்குத் தீவனம்கூட இல்லாமல் செத்து மடிகின்றன. உண்மையில் பாதிக்கப்பட்ட யாருக்கும் இங்கே நிவாரணம் கிடைக்க​வே இல்லை. எம்.பி-யும் அதைப்பற்றி எல்லாம் கண்டு​கொள்ளவே இல்லை'' என்று வேதனைப்பட்டனர். .

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

கரூர் நகரை ஒட்டிய பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடத்தைத் தேர்வுசெய்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதற்குப் பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகள் கிளம்பின. 'நகரத்துக்கு மிக அருகிலேயே புதிய பேருந்து நிலையம் தேவையா? அதை வேறு இடத்துக்குக் கொண்டுபோகலாம்’ என்று குரல்கள் உயர்ந்தன. தம்பிதுரையிடம் மக்கள்  மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் தம்பிதுரை வாய் திறக்காமல் இருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

விராலிமலை, வேடச்சந்தூர், மணப்பாறை என்று நாம் சென்ற அத்தனை பகுதிகளிலும், 'நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்களின் நிதியில் கட்டப்பட்டது’ என்ற பெயருடன் நாடக மேடைகள் அமைக்கப்​பட்டுள்ளன. ''ஊருக்குப் பொதுவா ஏதாவது நிகழ்ச்சி நடத்துறதுக்காக கட்டிக் கொடுத்திருக்காங்க. கல்யாணத்தில் தொடங்கி காதுகுத்து வரை இங்கே பல நிகழ்ச்சிகள் நடக்கும். நிறைய தடவை இங்கே வந்து மனு வாங்கியிருக்கார். ஆனா காரியம் எதுவும் நடக்கலைங்களே...'' என்று குமுறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்,

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

''வாக்கு கேட்க தம்பிதுரை வந்தபோது, 'நான் ஜெயித்து எம்.பி. ஆனதும், நம்ம தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு என்னுடைய கல்லூரியிலேயே இலவசமாக சீட் கொடுப்பேன்’ என்று பிரசாரம் செய்தார். இந்த நான்கு வருடங்களில் அப்படி யாருக்கும் தம்பிதுரை சீட் கொடுக்கவில்லை. தம்பிதுரைக்கு சொந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டம். அதனால் இங்கே அதிகமாக வருவதும் கிடையாது'' என்று சீறுகின்றனர்.

ஆனால் அ.தி.மு.க-வினரோ, ''வாரத்துக்கு ஒருமுறை தொகுதிக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார். கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் குறை கேட்கிறார். மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அப்படி இருக்கும்போது எங்கள் எம்.பி-யால் என்ன செய்ய முடியும்? அவரால் முடிந்தவரை எல்லாமே செய்திருக்கிறார். திரும்பவும் முதல்வர் கரூரில் அவருக்குத்தான் சீட் கொடுக்கப்போகிறார். அவரும் ஜெயிக்கத்தான்போகிறார். விடுபட்ட பணிகளை முடித்துக் கொடுப்பார்'' என்கின்றனர்.

கரூர், ராமனுஜ நகரில் உள்ள தம்பிதுரையின் அபார்ட்மென்ட்க்குச் சென்றோம். உள்ளே இருந்த பெண், ''நீங்க எதுவா இருந்தாலும் சாதிக் அண்ணன்கிட்டப் பேசிக்கோங்க. அவருதான் எம்.பி-யோட பி.ஏ.'' என்று சொல்லி அவரது செல்போன் எண்ணைக் கொடுத்தார். அவரைத் தொடர்புகொண்டோம். ''நான் எம்.பி.​கூடத்தான் இருக்கேன். அவர்கிட்டயே தர்றேன்'' என்று சொல்ல, தம்பிதுரை நம்மிடம் பேசினார்.

''என்னுடைய சாதனைகளைப் பற்றி நானே சொல்வது சரியாக இருக்குமா? இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். முன்பு நான் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான், சேலம் - கரூர் ரயில்வே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினேன். இப்போது நான் எம்.பி-யானதும் தொடர்ந்து போராடி, 350 கோடி ரூபாய் செலவுசெய்து வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதை என்னுடைய வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு யூனியன் வாரியாக முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு உடல் ஊனமுற்றோர் என்பதற்கான சான்றிதழ் வழங்கவும் உதவித்தொகை கிடைக்கவும் ஏற்பாடுசெய்திருக்கிறேன்.

கரூரிலும் மணப்பாறையிலும் செயல்படும் என்னுடைய அலுவலகத்துக்கு மக்கள் எந்த நேரத்திலும் சென்று மனு கொடுக்கலாம். அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்கிறேன். அதிகாரிகளுக்கு நான் பணிந்து அனுப்பும் நகலை, புகார் கொடுத்தவருக்கும் அனுப்புகிறோம்.

மருத்துவ உதவி என்று யார் எங்கள் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே செய்துகொடுத்துவிடுவோம். மாதம் 1,500 ரூபாய் சம்பாதிக்கும் கூலித் தொழிலாளிகளுக்கு, தினமும் 100 கிலோ மீட்டர் தூரம் ரயிலில் சென்றுவர 25 ரூபாய்க்கு பாஸ் வழங்கப்படுகிறது. என்னுடைய தொகுதியில் இதுவரை 25 ஆயிரம் கூலித் தொழிலாளிகளுக்கு அந்த பாஸ் வாங்கிக் கொடுத்து கொடுத்திருக்கிறேன். வருடத்துக்கு ஐந்து கோடி ரூபாய் தொகுதிக்கு செலவுசெய்ய அரசு நிதி ஒதுக்குகிறது. அதை ஒவ்வொரு யூனியனுக்கும் 30 லட்சம் வீதத்தில் செலவுசெய்திருக்கிறோம். கிராமத்துக்கு கிராமம் நாடக மேடை, ரேஷன் கடைக் கட்டடம், சமுதாயக் கூடம் கட்டிக் கொடுத்திருக்கிறோம்'' என்று நிதானமாகச் சொன்னார்.

தொகுதி மக்களுக்கு தம்பிதுரை விசுவாசமாக இருந்தாரா என்பது, வரும் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட்டால் தெரிந்துவிடும்.

என்ன செய்தார் எம்.பி? - கரூர்

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism