Published:Updated:

`350 கிலோ வெங்காயம் மிஸ்ஸிங், கண்டுபிடிச்சுக் கொடுங்க..!' -போலீஸைப் பதறவைத்த பெரம்பலூர் விவசாயி

வயலில் விதைப்புக்காக விவசாயி முத்துக்கிருஷ்ணன் வைத்திருந்த 350 கிலோ சின்ன வெங்காயங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

வெங்காயம்
வெங்காயம்

`வெங்காயத்தைக் காணவில்லை' என்று பெரம்பலூரில் விவசாயி ஒருவர் கொடுத்துள்ள புகார், போலீஸ் வட்டாரத்தைப் பதறவைத்துள்ளது.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம்

வெங்காய விலையின் ஏற்றம் மக்களுக்குக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. வெங்காய விலை தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் வீடியோக்கள் வைரலாகிவருகின்றன. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலையத்தில் வயலில் விதைக்க வைத்திருந்த விதை வெங்காய மூட்டைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனர் என்றுகூறி போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறார் விவசாயி முத்துக்கிருஷ்ணன்.

`வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டதால், வியாபாரிகள் வெங்காயத்தை விற்க போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல்கூட உருவாக வாய்ப்புள்ளது' என்கின்றனர் விவசாயிகள்.

பெரம்பலூர் மாவட்டம், கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (40). இவர், தனது வயலில் சின்ன வெங்காத்தைப் பயிரிட முடிவு செய்து, 350 கிலோ விதை வெங்காயம் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை வயலில் விதைப்புக்காக வைத்திருந்த 350 கிலோ சின்ன வெங்காயங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

வெங்காயம்
வெங்காயம்

விதை வெங்காயத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் கண்டுபிடித்து வெங்காயத்தை மீட்டுத் தரக்கோரி, பாடாலூர் போலீஸாரிடம் விவசாயி முத்துக்கிருஷ்ணன் புகார் மனு கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில், போலீஸார் விதை வெங்காயத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

ஆதார் அட்டைகளை அடகுவைத்து `வெங்காயம்’ கடன்! - உ.பியில் நூதன போராட்டம்

சின்னவெங்காயம் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், மர்ம நபர்களால் வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பாடாலூர் போலீஸாரிடம் பேசினோம். ``இப்படியொரு புகாரை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாடு முழுவதும் வெங்காயத்துக்குப் பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. பருவமழை சரியாகப் பெய்வதால் விதைப்புக்கு வெங்காயத்தைத் தேடி விவசாயிகள் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் விதை வெங்காயத்தை வாங்கி வைத்திருந்திருக்கிறார் விவசாயி முத்துக்கிருஷ்ணன். விதைக்காக இந்த வெங்காயத்தை யாராவது திருடி இருக்கலாம். இதை அங்கு இருக்கும் விவசாயிகள் எடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என்கின்றனர்.