Published:Updated:

சொன்னதோ மெமரி கார்டுகள்; இருந்ததோ 3,646 ஐபோன்கள்! - மும்பை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

சித்திரிப்புப் படம்
News
சித்திரிப்புப் படம்

மும்பை விமான நிலையத்தில் ரூ.42 கோடி மதிப்பிலான 3,646 ஐபோன்கள்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை விமான நிலையத்துக்கு ஹாங்காங்கிலிருந்து வந்த இரண்டு பார்சல்களில் மெமரி கார்டுகள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவற்றின்மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது, உள்ளே விலையுயர்ந்த ஐபோன்கள் ஆயிரக்கணக்கில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்த ஐபோன் 13 மாடல்கள் அதிகமாக இருந்தன. அவற்றின் ஒவ்வொன்றின் ஆரம்பகட்ட விலை ரூ.70,000. சில போன்களின் விலை 1.8 லட்சம். அவற்றை இந்தியாவுக்கு நேரடியாக இறக்குமதி செய்தால் மத்திய அரசுக்கு 44 சதவிகிதம் வரி செலுத்தவேண்டியிருக்கும். மொத்தம் 3,646 ஐபோன்களும், 12 கூகுள் பிக்ஸல் 6 புரோ போன்களும், ஒரு ஆப்பிள் வாட்சும் பறிமுதல் செய்யப்பட்டன.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42.86 கோடி. சுங்கவரிச் சட்டத்தின் கீழ் அவை அனைத்தையும் வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பை வெறும் ரூ.80 லட்சம் என்று அவற்றை இறக்குமதி செய்தவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்தியாவில் தற்போது ஐபோன் பயன்பாடு 15 சதவிகிதமாக இருக்கிறது. மத்திய அரசு இந்தியாவில் மொபைல்போன்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களை வலியுறுத்திவருகின்றன. 2017-ம் ஆண்டு இந்தியாவில் ஐபோன் உற்பத்தி ஐந்து சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 75 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஐபோன் 13 மாடல்கள் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில் இந்த அளவுக்கு, அதிகமாக இந்தியாவுக்குக் கடத்தி கொண்டு வரப்பட்டிருப்பது இந்தியாவில் மொபைல்போன் உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யார் இந்த அளவுக்குக் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்துவ‌ருகின்றன‌ர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz