வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (07/02/2015)

கடைசி தொடர்பு:12:52 (07/02/2015)

கல்லூரி தாளாளர் வீட்டு பணிப்பெண் கும்பலால் பலாத்காரம் செய்து கொலை!

கொடைக்கானல்:  கொடைக்கானலில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் அலெக்சாண்டர். இவர் ஒரு தனியார் கல்லூரியில் தாளாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டிச்செல்வி  என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பாண்டிச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை 5.30 மணிக்கு பிரதீப் அலெக்சாண்டரின் மகன் சந்தீப்  பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது வீட்டுக்குள்ளே  வாலிபர் ஒருவர்  போதையில் தட்டு தடுமாறிய நிலையில் இருந்தார். பாண்டிச்செல்வி 15 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து  விரைந்து வந்து போலீசார் பாண்டிச்செல்வியின் உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். போதையில் இருந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது பாண்டிச்செல்வியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரியவந்தது.

பிடிபட்ட வாலிபருக்கு கொடைக்கானல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் வந்த 2 பேர்  குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலாத் தலமான கொடைக்கானல் நகரில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்