இதற்கெல்லாமா...? அதிரவைக்கும் தற்கொலை காரணங்கள்! | uicide, Tamil Nadu, 104 service

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (19/02/2015)

கடைசி தொடர்பு:18:35 (19/02/2015)

இதற்கெல்லாமா...? அதிரவைக்கும் தற்கொலை காரணங்கள்!

நாகரிக வாழ்க்கை மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள், ஆடம்பர வாழ்க்கைக்காக ஆயுள் நாட்களை குறைத்து கொள்(ல்)கின்றனர்.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் கோழைத்தனமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஒருமணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007ல் 1,22,637 பேரும், 2008ல் 1,25,017 பேரும், 2009ல் 1,27,151 பேரும், 2010ல் 1,34,599 பேரும், 2011ல் 1,35,585, 2012ல், 1,35,445 பேரும் தற்கொலை செய்திருப்பதாக தேசிய குற்ற பதிவுத்துறை (என்.சி.ஆர்.பி) குறிப்பிட்டுள்ளது.

மாநில அளவில் பார்க்கும் போது 2009ல் மேற்கு வங்கம் முதலிடத்திலும், ஆந்திர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 2010ல் தமிழகம் முதலிடத்திலும், மேற்கு வங்கம் இரண்டாம் இடத்திலும், ஆந்திரா மூன்றாவது இடத்திலும் இருந்தது. 2011ல் மேற்கு வங்கம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் தமிழகம் மூன்றாவது இடத்திலும் இருந்தது. 2012ல் மீண்டும் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் உள்ளது. 2012ல் தமிழகத்தில் 16,927 பேரும், மகாராஷ்டிராவில் 16,112 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இதில் 2009ல் 2010 மாணவர்களும், 2010ல் 2479 மாணவர்களும், 2011ல் 2381 மாணவர்களும் தற்கொலை செய்திருக்கிறார்கள். தற்கொலை செய்பவர்களில் 37 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு கொள்கின்றனர். 8.4 சதவிகிதத்தினர் விஷம் குடிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2012ல் இந்தியாவில் 50,062 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள். அதில் பெண்களை விட ஆண்களே அதிகம். 34,631 ஆண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள். 2012ல் சென்னையில் 2183 பேர் தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாறு தற்கொலை எண்ணங்கள் இந்தியர்கள் மனதில் தலைவிரித்தாடுவதற்கு போதிய கவுன்சலிங் இல்லாததே காரணம் என்கின்றனர் மனநிலை ஆலோசகர்கள்.

தற்கொலை எண்ணங்களை தடுக்க, தமிழக அரசால் செயல்பட்டு வரும் 104 சேவையில் ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட போன் அழைப்புகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக வருவதாக 104 சேவையின் விழிப்புணர்வு பிரிவு மேலாளர் பிரபுதாஸ் தெரிவித்தார். மேலும், 104 சேவை தொடங்கப்பட்டத்திலிருந்து இதுவரை 100 தற்கொலை சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் 104 பிரிவுக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், தனக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகமாக வருவதாக சொல்லி இருக்கிறார். அவரிடம் பேசிய 104 மனநிலை ஆலோசகர்கள், அந்த நபரின் பிரச்னைகளை கேட்டறிந்து அதற்கேற்ப ஆறுதலும், அறிவுரைகளையும் சொல்லி இருக்கிறார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் கவுன்சலிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனை மனநல டாக்டர் மூலம் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுத மாணவர்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் சில மாணவர்களுக்குத் தேர்வு குறித்த பயம் அதிகளவில் இருக்கிறது. இதற்கு தீர்வு காண இப்போது 104 சேவைக்கு அதிகளவில் போன் அழைப்புகள் வருகின்றன. சமீபத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் 104 சேவையை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர், 104 பிரிவு ஊழியர்களிடம் தன்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு குறித்த பயத்தை போக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுள்ளார். அவரின் வேண்டுகோளின்படி செல்போனிலேயே மாணவ, மாணவிகளுக்கு 104 பிரிவு ஊழியர்கள் தேர்வு குறித்து ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்கள். இதே போன்று தனியாகவும் மாணவர்கள் இப்போது 104 சேவையை தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

தற்கொலை எண்ணத்திலிருந்து மாறிய ஒருவர் பெயர் குறிப்பிடாமல் நம்மிடம் கூறுகையில், "காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே சென்றேன். காதலியை பிரிந்து வாழ முடியாமல் பல நாட்கள் தூங்காமல் தவித்தேன். இதன்பிறகு தற்கொலை செய்ய முடிவு செய்தேன். வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்த போது அதை அம்மா பார்த்து என்னை காப்பாற்றி விட்டார். இதன்பிறகு வீட்டில் உள்ளவர்களும், மனநல ஆலோசகர் கொடுத்த தன்நம்பிக்கையால் இப்போது புதுப்பிறவி எடுத்துள்ளேன்" என்றார்.

"இப்போது எல்லாம் சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுபவர்களில் சிலர் தற்கொலைக்கு முயலும் போது பரிதாபமாக இறந்து இருக்கிறார்கள். தற்கொலைக்கு முயன்று தப்பித்தவர்களில் பலருக்கு பெரும்பாலும் அந்த எண்ணங்கள் ஏற்படுவதில்லை" என்று மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் தற்கொலையின் வலி அந்தளவுக்கு கொடுமையானது. இன்றையக்காலக்கட்டத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்துவேறுபாடுக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் மாமியார், மருமகள் பிரச்னையில் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நிகழும். ஆனால், இப்போது பள்ளி பருவத்திலேயே இந்த எண்ணம் மாணவ சமுதாயத்தில் தலைதூக்கி நிற்கிறது. பேனா, பென்சில் பிரச்னைக்கு கூட தற்கொலை செய்வதாக சிலர் மிரட்டுகிறார்கள். ஆசிரியர் அவமானப்படுத்தியதாக கூறி தற்கொலை செய்த மாணவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஈவ்.டீசிங், ராகிங் கொடுமையாலும் தற்கொலைகள் நிகழ்கின்றன. சம்பவம் நடக்கும் போது மட்டும் விழிப்படைந்து அதன்பிறகு அனைவரும் அதை மறந்து விடுகிறார்கள். தற்கொலையை தடுப்பது என்பது தனிப்பட்ட மனிதனின் மனநிலையால் மட்டுமே முடியும். எந்த பிரச்னை என்றாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள பழகினால் தற்கொலை அரக்கனை விரட்டி விடலாம்.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக்கத்தின் முன்னாள் இயக்குனர் சத்யநாதன் கூறுகையில், "தற்கொலை எண்ணங்கள் எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்பதை சொல்ல முடியாது. மனஅழுத்தம் காரணமாக இந்த எண்ணம் உருவாகும். பிரச்னைகளை எதிர்கொள்ள தைரியமில்லாதவர்கள் கோழைத்தனமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை எண்ணங்களை தடுக்க மனதைரியம் தேவை. அதோடுஅரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் என்.ஜி.ஓ மூலம் தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களுக்கு கவுன்சலிங் நடத்தலாம். இதன் மூலமாகவும் தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும்" என்றார்.

-எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்