Published:Updated:

`ரூ.1 கோடி கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார்?'- சி.எம் செயலர் முதல் அமைச்சர் வரை சிக்கவைத்த பாலியல் வழக்கு

கைது செய்யப்பட்ட பெண்கள்

`வித்யா, சோனியா, நிஷா ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை மட்டும் 92. அனைத்தும் ஹை குவாலிட்டி வீடியோக்கள்.'

`ரூ.1 கோடி கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார்?'- சி.எம் செயலர் முதல் அமைச்சர் வரை சிக்கவைத்த பாலியல் வழக்கு

`வித்யா, சோனியா, நிஷா ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை மட்டும் 92. அனைத்தும் ஹை குவாலிட்டி வீடியோக்கள்.'

Published:Updated:
கைது செய்யப்பட்ட பெண்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கார்ப்பரேஷன் அதிகாரி ஹர்பஜன் சிங் என்பவர் பலசியா காவல்நிலையத்தில் கடந்த செப்டம்பரில் புகார் ஒன்றை அளித்தார். அதில், `ஷிவானி மற்றும் ப்ரீத்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்ற பெண்கள் என்னுடன் உறவு வைத்துக்கொண்டனர். அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டி வருகின்றனர். பலமுறை அவர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டேன். இப்போது 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் புலி வாலாக மாறும் என யாரும் நினைக்கவில்லை. சம்பந்தப்பட்ட இருபெண்களையும் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை நடத்தியது போலீஸ். இந்த விசாரணையில் போபால், இந்தூரைச் சேர்ந்த மேலும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாநிலத்தையே உலுக்கும் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. வித்யா, சோனியா, நிஷா, ஷிவானி, ப்ரீத்தி (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) என சிக்கிய 5 பேரும் தோழிகள். இவர்களின் வேலை அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அனுப்பி வைப்பதுதான். அப்படி அனுப்பி வைக்கும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு நடப்பதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

பின்னர், அதைவைத்து அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பலரையும் மிரட்டிப் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். வித்யா, சோனியா, நிஷா ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை மட்டும் 92. அனைத்தும் ஹை குவாலிட்டி வீடியோக்கள். இதில் 20-க்கும் மேற்பட்ட வீடியோக்களில் முன்னாள் அமைச்சர், கலெக்டர்கள், எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் உள்ளனர் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வளவு பெரிய பாலியல் குற்றங்களுக்கு மாஸ்டர் மைண்டாக இருந்தவர் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவரான வித்யா. வித்யா, தன் தோழிகள் சோனியா, நிஷா மூலம் இளம்பெண்களை இந்தத் தொழிலுக்கு இழுத்து வந்துள்ளார். இதற்கு ஒரு சம்பவம் உதாரணம்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் ப்ரீத்தி. இவரின் வயது 18 மட்டுமே. போபாலை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவரான ப்ரீத்தி பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக போபால் வந்தார். அப்போது தன் ஆண் நண்பர் மூலம் வித்யாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் அறிமுகம் செய்யப்பட்டதே ஒரு பிளான்தான் என்கின்றனர் போலீஸார். ப்ரீத்தி பள்ளிப் படிப்பில் சுட்டி மட்டுமல்ல, போபால் கிரிக்கெட் அணியில் பிரபலமான வீராங்கனையும்கூட. இருந்தாலும் குடும்பத்தில் வறுமை அதிகம் என்பதால் அவரால் கல்லூரியில் சேர்வதில் பிரச்னை இருந்துள்ளது. இதைத் தெரிந்துகொண்டுதான் ப்ரீத்திமீது குறிவைத்து காய் நகர்த்தியுள்ளார் வித்யா.

வித்யா
வித்யா

தான் நடத்திவரும் தொண்டு நிறுவனம் மூலம் கல்லூரியில் சேர்த்துவிடுவதாக அவரின் ஆண் நண்பரிடம் சொல்லி ப்ரீத்தியை போபால் வரவழைத்துள்ளனர். முதலில் அவருக்கென தனி போன், கல்லூரி படிப்புக்குச் செலவு, பர்ஸ் நிறைய பணம் என்று ப்ரீத்தியை சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திய இந்தக் கும்பல் பின்னர் படிப்படியாக தங்களது வேலைகளை காண்பித்துள்ளது. ஒருநாள் அதிகாரியைச் சந்திக்கலாம் என்று கூப்பிட்டுச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அதிகாரியுடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு ப்ரீத்தியை இருவரும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் அதை மறுத்து அவர்களைவிட்டு வெளியேறி மீண்டும் கிராமத்துக்குச் சென்றுள்ளார். ஆனால், அப்போதும் அவரைவிடாத கும்பல் குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவரை இந்தச் செயலை செய்ய வைத்தனர் என்று கூறுகின்றன மத்திய பிரதேச ஊடகங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வித்யா கும்பலின் வேலையே இதுதான். கஷ்டப்படும் வீட்டில் உள்ள பெண்கள்தான் இவர்களின் டார்கெட். அவர்களை சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தி பின்னர் அந்தப் பெண்களை மூளைச் சலவை செய்து இந்தச் செயல்களைச் செய்ய வைத்துள்ளனர். இந்தக் கும்பலின் மாஸ்டர் மைண்டான வித்யாவின் பழக்கம் எல்லாம் பெரிய இடத்தில்தான்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருடனும் நெருங்கிப் பழகிவந்துள்ளார். அவர்களின் பாலியல் தேவைகளுக்காகப் பெண்களை அனுப்பி, அவர்கள் மூலமாக வீடியோ எடுத்து மிரட்டி தனக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துள்ளார். அதிகாரிகளின் பொறுப்புக்கு ஏற்ப பணத்தையும் பறித்து வந்துள்ளார்.

ப்ரீத்தி
ப்ரீத்தி

சமீபத்தில் இவருக்குப் பணம் தரவில்லை என்பதால் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீடியோவை ரகசியமாக இணையத்தில் வெளியிட அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் மத்தியப் பிரதேச முதல்வரின் தனிச் செயலாளர் ஒருவர், அம்மாநிலத்தின் பிரபல பத்திரிகையின் உரிமையாளர் ஒருவர், பிரபல பிசினஸ்மேன் ஒருவர் என இவரிடம் சிலர் வீடியோக்களுக்கு பணம் கொடுத்தது தெரியவர, இதுதொடர்பாக ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

`இந்தியாவின் மிகப்பெரிய பாலியல் வழக்கு என்றால் இதுதான்' என்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரத்தைத் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கிட்டத்தட்ட மூன்று மாத விசாரணைக்குப் பிறகு 390 பக்க குற்றப்பத்திரிகையைத் தனிப்படை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில்தான் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வித்யாவின் நட்பு வட்டத்தில் இருந்த பூஜா என்ற பெண் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். ஒரு பெரிய பணக்காரரை வளைக்க பூஜாவை வித்யா டார்ச்சர் செய்ததாகவும் அதன் காரணமாகவே பூஜா தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரின் இன்னொரு தோழி போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். ஆனால், அந்தக் கொலை குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை.

வித்யா, சோனியா, நிஷா, ஷிவானி
வித்யா, சோனியா, நிஷா, ஷிவானி

அதேபோல் சோனியா வீட்டில் நடந்த ரெய்டில் ஐந்து டைரிகள், 10 கோடிக்கும் அதிகமான செக் கைப்பற்றப்பட்டன. அதில் ஒரு செக் ஒரு ஐஏஎஸ் அதிகாரி கொடுத்தது. ஒரு கோடிக்குக் கொடுக்கப்பட்ட அந்த செக்கை இந்தக் கும்பலுக்குக் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்ற விவரம் எதுவும் குற்றப்பத்திரிகையில் இல்லை. மற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் பெயர் இடம்பெற்றிருக்கும் நிலையில் அந்த அதிகாரியின் பெயர் மட்டும் விடுபட்டிருப்பதற்கு என்ன காரணம் என்பதும் அதில் குறிப்பிடப்படவில்லை.

தவிர, இந்த ஐந்து பெண்களின் மொபைல் போன்களை போலீஸ் பறிமுதல் செய்தபோதிலும், அதன் அழைப்பு விவரங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. மிரட்டப்பட்டதாக கூறப்படும் ஆண்களின் வாதங்களும் இல்லை. அவர்களிடம் விசாரணையை போலீஸ் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. போலீஸ் கஸ்டடியில் இருக்கும் இவர்கள் மீண்டும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism