6ஆம் வகுப்பு... அனுபவம்... கோடீஸ்வரரான மோசடி மன்னன்!

சென்னை: மோசடி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி அப்பாவி இளைஞர்களிடம் லட்சக்கணக்கான பணத்தை ஏமாற்றி கோடீஸ்வரராகியுள்ளார் சென்னையை சேர்ந்த ஆசாமி.

சென்னையை அடுத்த கோவூர், சிக்கராயன்புரத்தைச் சேர்ந்த முகமது ஜான்பாஷா (54) என்பவர், சென்னையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி நிறுவனம் நடத்தி வந்தவர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள திருமலாபுரத்தைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்பவர், ஜான்பாஷா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார் மனுவில், தனக்கும், வேறு சிலருக்கும் துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14.60 லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.
 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், முகமது ஜான்பாஷாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மோசடி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி,  கோடிகளை குவித்த மோசடி ஆசாமி ஜான்பாஷா பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு, சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தியுள்ளார் ஜான்பாஷா. சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் வேலைக்காக 20 பேரை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அதில் பிரச்னை ஏற்பட்டதால், தனது அலுவலகத்தை சென்னை ஆயிரம்விளக்கு பகுதிக்கு மாற்றியுள்ளார். இங்கிருந்தும் தனது மோசடி லீலைகளை தொடர்ந்துள்ளார்.

புதுச்சேரியிலும் மோசடி நிறுவனம் நடத்தியதோடு, பட்டதாரி இளைஞர்களிடம் அரபுநாடுகள், அமெரிக்கா, நியூசிலாந்து, ஸ்பெயின், சீனா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு 45 பேரை அனுப்பி வைத்துள்ளார். அவரால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர்கள் உரிய வேலை கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு, சென்னை திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.43 லட்சம் வரை வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக ஜான்பாஷா மீது புகார்கள் உள்ளன.

6வது வகுப்பு வரை படித்துள்ள ஜான்பாஷா, துபாயில் வேலை பார்த்துள்ளார். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் மோசடி லீலைகளை தொடங்கியுள்ளார். இவர் மீது தற்போது சுமார் 27 பேர் புகார் கொடுத்துள்ளனர். ரூ.43 லட்சம் வரை சுருட்டியதாக புகார்கள் உள்ளன.

ஆனால் இவரிடம் 90 பேர் வரை ஏமாந்துள்ளதாகவும், கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவரிடம் ஏமாந்தவர்கள் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்து வருகிறார்கள். முகமது ஜான்பாஷாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் இவரது மோசடி லீலை மேலும் அம்பலமாகும் என்று தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!