Published:Updated:

டெல்லி சிறைக்கு விஐபி-களாக விசிட்... சுகேஷைச் சந்தித்து பணம், பரிசுகள் பெற்ற பாலிவுட் 4 நடிகைகள்!

நடிகை நூரா, ஜாக்குலினுடன் சுகேஷ்

ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் எட்டு மணி நேரம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

டெல்லி சிறைக்கு விஐபி-களாக விசிட்... சுகேஷைச் சந்தித்து பணம், பரிசுகள் பெற்ற பாலிவுட் 4 நடிகைகள்!

ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் எட்டு மணி நேரம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Published:Updated:
நடிகை நூரா, ஜாக்குலினுடன் சுகேஷ்

சிறையில் இருக்கும் டெல்லி தொழிலதிபர் மனைவியிடம், அவரின் கணவரைச் சிறையிலிருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி மிரட்டிப் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்குக் கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்களை வாங்கிக்கொடுத்திருக்கிறார். இதில் ஜாக்குலின் மட்டும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அமலாக்கப் பிரிவு இவ்வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முடித்துள்ள நிலையில், இப்போது டெல்லி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். முதலில் நடிகை நோராவை அழைத்து ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று டெல்லி போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜரானார்.

சுகேஷ் சந்திரசேகர்
சுகேஷ் சந்திரசேகர்

காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு வந்தார். விசாரணை முடிந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜாக்குலினுக்கு சுகேஷ் அறிமுகம் செய்துவைத்த பிங்கி இரானியிடமும் நேற்று டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர். முதலில் இரண்டு பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் வாங்கினர். பின்னர் இரண்டு பேரையும் ஒன்றாகவைத்து விசாரித்தனர்.

இது குறித்து சிறப்பு போலீஸ் கமிஷனர் ரவீந்திர யாதவ் கூறுகையில், ``சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய பண மோசடி தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரிக்கப்பட்டது. ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகரிடம் நடிகை நோராவும், பிங்கி இரானியும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இன்று விசாரணைக்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

சுகேஷ் சந்திரசேகர் குற்றப் பின்னணி உடையவர் என்றும், அவர் திருமணமானவர் என்று தெரிந்தும் அவருடன் தொடர்பு வைத்துக்கொண்டதோடு, அவருடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏற்கெனவே கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சற்று மாறுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இரு வாக்குமூலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மீண்டும் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபோது அவரை நான்கு நடிகைகள் சந்தித்துப் பேசியிருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தங்களது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர். நிகிதா தம்போலி, சஹத் கன்னா, சோபியா சிங், அருஷா பாட்டீல் ஆகிய நான்கு நடிகைகளும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்குச் சென்று சுகேஷ் சந்திரசேகரைச் சந்தித்து பணம் மற்றும் பரிசுப்பொருள்களைப் பெற்று வந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பிங்கி இரானி செய்துள்ளார்.

மிரட்டிப் பறித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பிங்கியிடம் சொல்லி நடிகைகளைச் சிறைக்கு அழைத்து வரும்படி கூறி பரிசுகளை வாரி வழங்கியிருக்கிறாராம். அருஷா பாட்டீல் தன்னை பிங்கி இரானி சுகேஷிடம் அறிமுகப்படுத்தியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் சிறைக்குச் சென்று சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் பாட்டீல் வங்கிக் கணக்குக்குப் பணத்தை சுகேஷ் அனுப்பியிருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். `பிக் பாஸ்’ நடிகையான நிகிதா தம்போலியிடம் சுகேஷ் தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் என்று கூறி பிங்கி இரானி அறிமுகம் செய்துள்ளார்.

நிகிதா தம்போலி
நிகிதா தம்போலி

சுகேஷ் சந்திரசேகரை வெறும் சேகர் என்று மட்டும் நிகிதாவிடம் தெரிவித்துள்ளார். முதலில் 2018, ஏப்ரல் மாதம் நிகிதா சுகேஷைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதற்குக் கூலியாக பிங்கி இரானிக்கு சுகேஷ் 10 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறாராம். அதில் ரூ.1.5 லட்சத்தை மட்டும் நிகிதாவுக்கு பிங்கி இரானி கொடுத்திருக்கிறார். இரண்டாவது சந்திப்புக்குப் பிறகு 2 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருள்களை கூரியர் மூலம் நிகிதாவுக்கு சுகேஷ் அனுப்பியிருக்கிறார். இந்தத் தகவல்கள் அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. பிங்கி இரானி நடிகைகளை சுகேஷுக்கு அறிமுகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறைக்குச் சென்றபோது தன்னிடம் எந்தச் சோதனையும் நடத்தப்படவில்லை என்று நிகிதா தெரிவித்துள்ளார். சஹத் கன்னாவிடம் சுகேஷ் சந்திரசேகரை சேகர் ரெட்டி என்று கூறி அறிமுகம் செய்துள்ளனர்.

சோபியா சிங்கும் இரண்டு முறை சிறைக்குச் சென்று சுகேஷ் சந்திரசேகரை சந்தித்திருக்கிறார். அவர்கள் சிறைக்குச் சென்று வந்தவுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் கணிசமான பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. நடிகைகள் ஒவ்வொரு முறையும் அவர்கள் டெல்லிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, டெல்லிச் சிறையில் எந்தவித சோதனையும் இல்லாமல் சுதந்திரமாகச் சந்தித்து பேசவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சிறை அதிகாரிகளும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர் என்கிற தகவலும் வெளியே வர தொடங்கியிருக்கிறது.