Published:Updated:

`சோதனையில் நிற்காமல் பறந்த கார்; இ-சலான் அபராதம்!' -செல்போன் மெசேஜால் சிக்கிய 21 திருட்டு கார்கள்

போலீஸாரிடம் சிக்கிய திருட்டு வாகனங்கள்
போலீஸாரிடம் சிக்கிய திருட்டு வாகனங்கள்

ராமநாதபுரம் பகுதியில் சென்ற வாகனத்தை போலீஸார் நிறுத்தச் சொல்லியும் நிற்காமல் சென்ற வாகனத்தின் நம்பருக்கு இ-சலான் மூலம் போக்குவரத்து ஆய்வாளர் அபராதம் விதித்தார்.

ராமேஸ்வரத்தில், உரிய ஆவணங்கள் இல்லாமல் உலா வந்த 21 கார்களை போலீஸார் கைப்பற்றினர். இந்தக் கார்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இவை சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் குத்தகைக்கு வாங்கப்பட்ட மற்றும் கார் பார்க்கிங்குகளில் இருந்து திருடப்பட்ட கார்கள் எனத் தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேரை கைதுசெய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருட்டு கார்கள் குறித்து போலீஸ் விசாரணை
திருட்டு கார்கள் குறித்து போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், சாலையில் சென்ற வாகனம் ஒன்றை நிறுத்தச் சொல்லியும் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, வாகனத்தின் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு இ-சலான் அபராதம் விதித்துள்ளார் போக்குவரத்து ஆய்வாளர் சிவா. ஆனால், அவர் விதித்த அபராதம் தொடர்பான மெசேஜ், சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு சென்றுள்ளது.

அந்த நபர் ஏற்கெனவே, தனது கார் திருடு போனதாக போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில், திருடு போன தனது காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தனக்கு வந்த அபராதம் குறித்த மெசேஜ் அனுப்பிய காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு தனது கார் திருடுபோனது குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் புகார் எண்ணிலும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, எஸ்பி வருண்குமார் உத்தரவின்படி ராமேஸ்வரம் டிஎஸ்பி மகேஷ், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள வெளிமாவட்ட பதிவு எண் கொண்ட கார்களை ஆய்வுசெய்தனர்.

இந்த ஆய்வின்போது, 21 கார்கள் மற்றும் ஒரு டூவீலர் ஆகியன உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், இந்த வாகனங்கள் அனைத்தும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் குத்தகைக்கு எடுத்து வரப்பட்டிருப்பதும் அவற்றில் சில கார்கள், பார்க்கிங்கில் இருந்து திருடப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்பட்டவை எனவும் தெரியவந்தது.

திருட்டு கார் புகாரில் சிக்கிய ஏஜண்டுகள்
திருட்டு கார் புகாரில் சிக்கிய ஏஜண்டுகள்

இதைத் தொடர்ந்து, கார்களை விற்பனை செய்யும் ஏஜென்ட்டுகளான ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எடிசன், ஞானசிங் துரை, திசையன்விளையைச் சேர்ந்த எபநேசர், உவரியைச் சேர்ந்த அஜய் சர்மா ஆகிய நால்வரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

திருட்டு கார் விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் நேரில் விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், ''சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கார்களை குத்தகைக் காலம் முடிந்த பின்னரும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இவற்றுடன், கார் பார்க்கிங்குகளில் இருந்து திருடப்பட்ட கார்களை ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஏஜென்ட்டுகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருட்டு மற்றும் குத்தகை கார்களைக் குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்'' என்றார்.

பிடிபட்ட வாகனங்களை பார்வையிட்ட எஸ்.பி வருண்குமார்
பிடிபட்ட வாகனங்களை பார்வையிட்ட எஸ்.பி வருண்குமார்

கடந்த மாதம், இதேபோல் பாம்பனில் நடந்த வாகனச் சோதனையின்போது விதிக்கப்பட்ட இ-சலான் அபராதத் தகவல் மூலம் , திருட்டு போன இருசக்கர வாகனங்கள் சில போலீஸாரிடம் சிக்கின. இதுதொடர்பாக சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஒரேநாளில் திருட்டு மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட 22 வாகனங்கள் ராமேஸ்வரம் பகுதியில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு