Published:Updated:

பிறந்து 4 நாள்களான சிசுவுக்கு நேர்ந்த கொடூரம்! - சோழவந்தான் அதிர்ச்சி

சோழவந்தான்
சோழவந்தான் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

குழந்தையைக் கொலை செய்த குற்றத்தில் தந்தை தவமணி, பாட்டி பாண்டியம்மாள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் செக்கானூரணியைத் தொடர்ந்து சோழவந்தானில் பெண் சிசு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தவமணி
தவமணி

இருபது வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சில மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெண் குழந்தை பிறந்தாலே, அது குடும்பத்துக்கு சுமை என நினைத்து கள்ளிப்பால் கொடுத்துக் கொல்கின்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இக்கொடிய பழக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பின் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டன.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் செக்கானூராணி அருகே மீனாட்சிபட்டியில் பிறந்து 30 நாள்களில் பெண் சிசு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதன் பின்பு இப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

பாண்டியம்மாள்
பாண்டியம்மாள்

அந்த அதிர்ச்சியை மக்கள் மறப்பதற்குள் கொரோனா ஊரடங்கு காலத்தில் சோழவந்தானில் பெண் குழந்தை பிறந்து நான்கே நாளான நிலையில் எருக்கம்பால் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தான் பூமேட்டு தவமணி- சித்ரா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயது, 3 வயது ஒன்றரை வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாக கடந்த 10-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த அக்குழந்தை 4 நாள்களில் திடீரென்று உயிரிழந்தாகக் கூறி உறவினர்களுக்குக் கூட தெரிவிக்காமல் வீட்டருகே உள்ள முட்புதரில் புதைத்துள்ளார்கள். இதில் சந்தேகமடைந்த ஊர்க்காரர்கள் சிலர், சோழவந்தான் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சோழவந்தான்
சோழவந்தான்

விசாரணையில் இறங்கிய காவல்துறை சம்பவம் நடந்தது உண்மைதான் என்பதை உறுதி செய்தபின், ஆர்.டி.ஓ மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர். எருக்கம்பால் கொடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தையைக் கொலை செய்த குற்றத்தில் தந்தை தவமணி, பாட்டி பாண்டியம்மாள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் சில மாத இடைவெளியில் இரண்டாவதாக பெண் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும், மீண்டும் பழைய நிலைமை திரும்பி விடாத வகையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு