Published:Updated:

மாணவிகளைக்கொண்டு உபகரணங்கள் இடமாற்றம்?!-ஆசிட் பாட்டில் உடைந்ததில் அரசுப் பள்ளி மாணவிகள் படுகாயம்

கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி
கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி

ஆய்வகத்திலுள்ள உபகரணங்களை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளே மற்றொரு கட்டடத்துக்குக் கொண்டு சென்றபோது ஆசிட் பாட்டில் உடைந்ததில் நான்கு மாணவிகள் காயமடைந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் இயங்கிவருகிறது வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளி வளாகத்தின் இடையே புதிதாக அமைக்கப்படவிருக்கும் விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்றுவருகிறது. அதனால் பள்ளி வளாகத்திலுள்ள மரங்களை அகற்றுவதோடு, பள்ளிக் கட்டடத்தின் சில பகுதிகளும் இடிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வேதியியல் ஆய்வகத்தில் இருந்த உபகரணங்களை மற்றொரு கட்டடத்துக்கு மாற்ற முடிவெடுத்த பள்ளி நிர்வாகம், மாணவ - மாணவிகளைக்கொண்டே இந்தப் பணியைச் செய்ததாகத் தெரிகிறது.

காயமடைந்த பள்ளி மாணவி
காயமடைந்த பள்ளி மாணவி

அவ்வாறு பள்ளி மாணவிகள் ஆய்வகப் பொருள்களை எடுத்துச் சென்றபோது ஆசிட் பாட்டில் தவறி விழுந்து உடைந்ததில், 12-ம் வகுப்பு பயின்று வரும் பானு, நிஷா, கிருஷ்ணவேணி, நதியா (மாணவிகளின் பெயர் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய நான்கு மாணவிகள் காயமடைந்துள்ளனர். இதில் பானு என்ற மாணவிக்கு மட்டும் முகம், கண், உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி புதுவை மாநிலம், தவளக்குப்பத்திலுள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

புதுச்சேரி: `செப்டம்பர் முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!’ – வகுப்புகள் எப்படிச் செயல்படும்?

மீதமுள்ள மூன்று மாணவிகளும் லேசான காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளியின் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளைக் காண மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்ட கல்வி அலுவலரும் நேரில் சென்றுள்ளனர்.

கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி
கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி

பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கண்டமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு