Published:Updated:

போலி சாதிச் சான்றிதழ்: மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு சிறை... 26 ஆண்டுகளாக வழக்கு கடந்துவந்த பாதை!

தீர்ப்பு

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயன்ற வழக்கில் மூன்று டாக்டர்கள் உட்பட நான்கு பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் தீர்ப்பு.

போலி சாதிச் சான்றிதழ்: மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு சிறை... 26 ஆண்டுகளாக வழக்கு கடந்துவந்த பாதை!

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயன்ற வழக்கில் மூன்று டாக்டர்கள் உட்பட நான்கு பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் தீர்ப்பு.

Published:Updated:
தீர்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 1995-ம் ஆண்டு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் வேளாண்துறை விரிவாக்க அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராஜேந்திரன், டாக்டர் கௌசல்யா, டாக்டர் ராஜேந்திர குமார் ஆகியோரும் வேளாண்துறை விரிவாக்க அலுவலர் பதவிக்கு லதா என்பவரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் எஸ்.டி கோட்டாவில் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

இந்த விண்ணப்பத்தை ஆய்வுசெய்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சான்றிதழைச் சரிபார்ப்புக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பியது. அப்போதைய மேட்டூர் சப்-கலெக்டராக இருந்த தங்க கலியபெருமாள் இதை ஆய்வுசெய்து, `இது போலியான சான்றிதழ். விண்ணப்பதாரர்கள் ரெட்டியார் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போலிச் சான்றிதழை தயாரித்திருக்கிறார்கள்’ என அறிக்கை அனுப்பினார்.

இதையடுத்து அப்போது தேர்வாணையச் செயலாளராக இருந்த சேஷாத்திரி, சேலம் சிபிசிஐடி-யில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் 1996-ம் ஆண்டு வழக்கு பதிவுசெய்தனர். மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய உதவியாளர் நாச்சிமுத்து, வருவாய் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர்தான் போலியாகச் சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளனர் எனத் தெரியவந்தது. இவர்களும், டாக்டர்கள் ராஜேந்திரன், கௌசல்யா, ராஜேந்திர குமார், லதா ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்தனர்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

இதில், கைதான உதவியாளர் நாச்சிமுத்து சிறையிலிருந்து வெளியே வந்து தற்கொலை செய்துகொண்டார். வழக்கு விசாரணையின்போது வருவாய் அலுவலரான சந்திரசேகரும் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என டாக்டர்கள் உட்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சிறை
சிறை

இந்த வழக்கு சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அரசுத் தரப்பில் வக்கீல் புனிதா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், டாக்டர்கள் ராஜேந்திரன், கௌசல்யா, ராஜேந்திரகுமார், லதா ஆகியோர் போலி ஆவணம் தயாரித்தல், பயன்படுத்துதல், கூட்டுச் சதி உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என அறிவித்து தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார். இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதில் ராஜேந்திரன் அரசு டாக்டராக நாமக்கலில் பணியாற்றிவருகிறார். ராஜேந்திரகுமார் தருமபுரியில் கிளினிக் வைத்து நடத்திவருகிறார். 26 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.